Pages

Tuesday, October 9, 2012

Om Namah Shivaya


                                                         Om Namah Shivaya

63 நாயன்மார்கள்

சிவபுராணம்

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய், எம்பெருமான் ......
பொருள்:
அப்போது கறந்த பாலோடு கரும்பின் சாறும் நெய்யும் கலந்தால் எவ்வாறு இனிக்குமோ
அவ்வாறு சிறந்து, அடியவர்கள் மனத்தில் தேன் ஊற்றெடுத்தாற் போல நின்று,
இப்பிறவியை முற்றுப் பெறச்செய்யும் எங்களுடைய பெருமானே !
ஐந்நிறமும் நீயே ஆனாய் ! வானவர்கள் போற்றி நிற்க அவர்களுக்கு அரியவனாக
மறைந்திருந்தாய், எம்பெருமானே !




                    
                         1.அதிபத்தர் நாயனார்  :  பரதவர்
 சோழ நாட்டின் துறைமுகனான நாகபட்டினம் நகரில் நுழைபாடியிலே பரதவர் வாழ்ந்தனர். அப்பரதவர்களுகுத்து தலைவரரக இருந்தவர் அதிபத்தர். அவர் சிவபெருமானிடத்தே மிகுந்த பக்தியுடையவர். நாள்தோறும் பிடிபடும் மீன்களுள் தலையாய ஒரு மீனை இது நட்டமாடிய நம்பர்க்குஎன்று கடலில் விடுவது அவர்தம் வழக்கம். ஒரு நாளில் ஒரு மீனே பிடிபடினும் அம்மீனைச் சிவனடிக்கென்று விடுவதை அவர் விடாது செய்து வந்தார். இப்படி அநேக நாள்கள் ஒரு மீன
ே பிடிபட அவரை வறுமை பீடித்தது. சுற்றத்தவர் உணவின்றி வருந்தினர். அப்பொழுதும் தாம் வருந்தாது தம் பணியினை மகிழ்வோடு செய்து வந்தார். இப்படியே தொடர்ந்து நாளெல்லாம் நிகழ் அவரும் பசியால் தளர்ந்தார். ஆயினும் தமது தலைமீன் அளிக்கும் சீலத்தில் தவறாதிருந்தார். இத்தகைய அதிபத்தரின் தலையாய அன்பெனும் ஆரமுதம் அருந்தத் திருவுளம் பற்றினர் ஆலமுண்ட பெருமான்.

அதிபத்த நாயனார் விக்கிரகம்ஒரு நாள் ஒரு மீனுக்குப் பதிலாக மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பொன்று பிடிபட்டது. அது மணிகள் பதித்த பொன்மீன். அம்மீன் கடலில் உதிக்கும் சூரியன்போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு மீன் ஒன்று பிடித்தோம்என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார். இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்கஎன்று அலைமீது விட்டார். பொருளை முதலெனக் கொள்ளும் இவ்வுலகிலே பொருட்பற்றை முற்றும் துறந்த அதிபத்தரின் முன் இறைவன் ஆகாயத்திலே தோன்றினார். அதிபத்தர் சிரங்குவித்து வணங்கி நின்றார். அவரைச் சிவலோகத்திற் சிறப்புற்றிருக்கும் வண்ணம் தளைளித்தாண்டார் சிவபெருமான்.



``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````


                                            2.அப்பூதியடிகள் நாயனார்  : அந்தணர்



அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், மேற்சொன்ன அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு 
அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது

அறியாது தன்னிச்சையால் பகவான் நாமம் உச்சரிக்கப்படும் போதே இவ்வளவு பலன்கள் கிடைகின்றதேன்றால் பிரியமுடன் அன்பு மேலிட உள்ளம் உருகி உச்சரிக்கும் போது அதன் பலனை கேட்கவா வேண்டும்.பல ஜென்மங்கள் செய்த பாவங்கள் ஒழியும். பிறவி பெருங்கடலில் இருந்து விடுபட்டு இறுதியில் இறைவனிடம் சேர்ந்து விடலாம்.



"முகயதஸ்து மஹத்க்ருபையைவ பகவத்க்ருபாலேசாத்வா " 



அவன் தாள் பணிய அவன் அருள் வேண்டும்.என்று கூறியிருக்கிறார்.மாணிக்கவாசகர்.

பிரேமை பக்தி கை கூட வேண்டுமானால் சிறிதளவாவது பகவான் அருள் வேண்டும்.மகான்களின் அனுக்கிரகம்மிகவும் அவசியம்.

மகான்களின் கருணையால் அடியார்களும் இறைவன் அருளை எளிதில் பெற்று விடுகிறார்கள்.திருநாவுக்கரசர் என்ற மகான் அன்பான கருணையால் அப்பூதி அடிகளாரினை கடைதேற்றினார்.இதற்க்கு உதாரணமாக இந்த கதையை கூறலாம்.


தமது வீட்டிலுள்ள அளவுக்கருவிகளுக்கும் மக்கள்களுக்கும் பசுக்களுக்கும் மற்ற பொருள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரை வைத்து அன்புடன் அழைத்து வந்தார்.தாம் அமைத்த திருமடம்,தண்ணீர்பந்தல் முதலியவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவிலா அற செயல்கள் புரிந்து வந்தார்.
அவ்வாறு அப்பூதியடிகள் தர்மங்கள் புரிந்து வாழ்ந்து வரும் காலத்தில் திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் பல சிவஸ்தலங்களை தரிசிக்க வேண்டி திங்களூர் வழியாக வந்தார். அங்கு தமது பெயர் சூட்டிய ஒரு தண்ணீர் பந்தலை கண்டார்.திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு அப்பூதியடிகளின் வீட்டு வாசலை அடைந்தார்.திருநாவுக்கரசருடைய திருவடிகளை அப்பூதியார் வணங்கினார்.கருணை வடிவானவரே தாங்கள் என் வீட்டிக்கு வந்தருளினீர்கள்.இது நான் செய்த தவம் என்றார்.திருநாவுக்கரசர் அதற்க்கு "திருபுவனத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு வரும்போது வழியில் நீர் வைத்துள்ள நிழல் நிறைந்த தண்ணீர் பந்தலை கண்டோம்.அவ்வாறே நீர் செய்து வரும் மற்ற அறங்களை பற்றியும் கேள்விப்பட்டோம்.அதனால் உம்மை காண விரும்பி இங்கு வந்தோம்.என்று கூறினார்.அப்பூதியடிகளே நீங்கள் தண்ணீர் பந்தலுக்கு தம்முடைய பெயரை எழுதாமல் வேறொரு பெயரை எழுத வேண்டிய காரணம் என்ன ? அதை கூறுங்கள் என்று கேட்டார்.
இதை கேட்டதும் அப்பூதியடிகள் சற்று கோபமாக கூறினார்."சிவனடியாரே நீங்கள் இப்படி சொல்லகூடாது.சமணர்களுடன் சேர்ந்து கொண்டு பல்லவ மன்னர் இழைத்த கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் திருநாவுக்கரசர் தமது திருத்தொண்டின் வலிமையினாலே வென்றார்.அத்தகையவரின் திருபெயரயா வேறொரு பெயர் என்று சொல்கிறீர்கள்? சிவபெருமானின் திருவடியின் கீழ் அன்புடன் செய்யும் திருத்தொண்டின் மூலமாக இப்பிறவியிலும் நாம் கடைத்தேறலாம் என்று நினைத்து திருநாவுக்கரசர் என்று பெயர் எழுதினேன்" என்றார்.
அவருடைய அன்பின் பெருமையை திருநாவுக்கரசர் உணர்ந்து "புறச்சமயமான சமணத்துறையில் நான் முன்பு பிரவேசித்து விட்டேன்.அதை தடுப்பதற்காக சிவபெருமானால் பெருஞ்சுலை நோய் தரப்பட்டு அவரருளால் ஆட்கொள்ளப்பட்டு பாக்கியம் பெற்றிருந்தாலும் சிறு தொண்டன் நான் என்றார்.
அவருடைய வார்த்தைகளை கேட்டு அவர் தாம் திருநாவுக்கரசர் என்பதை அப்பூதியடிகள் அறிந்து கொண்டார்.தம் இரு கைகளையும் தலைமேல் குவித்து ஆனந்த கண்ணீர் அருவியாக பெருகி வழிய வாய் குழற உடம்பெல்லாம் புல்லரிக்க தரையில் அப்படியே விழுந்து திருநாவுக்கரசரின் திருவடிகளை தம் தலை மீது வைத்தார்.
அதன் பின் அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை தம் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவர் தம் திருவடிகளை தமது மனைவி மக்களுடன் வாசனை நீரால் சுத்தம் செய்து அந்நீரை அவர்கள் எல்லோர்க்கும் தங்கள் தலை மீது தெளித்துக்கொண்டு மகிழ்ந்தார்கள்.சுவாமிகளை ஒரு பீடத்தில் அமர செய்து அன்னம் ஏற்கவேண்டும் என்று அப்பூதியடிகள் வேண்டினார். தம் மனைவியாரை பார்த்து ஆண்டவன் அருளால் பெறுவதற்கரிய பேரு பெற்றோம்.என்று கூறி மிகவும் மகிழ்ந்து சமைக்க புகுந்தார்.அறுசுவை கறிகளாக்கி இனிய அன்னம் வடித்து அமுதமாக்கினார். உணவு பரிமாற இலை விரிப்பதர்க்காக தம் பிள்ளைகளில் மூத்த திருநாவுக்கரசரை கூப்பிட்டு வாழை இலை அரிந்து கொண்டு ஓடி வா என்று சொல்லி அனுப்பினார்.

அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரை உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைக்கிறார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.

``````````````````````````````````````````````````````````````````````````

                        3.அமர்நீதி நாயனார்  : வணிகர்



அமர்நீதி நாயனர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அமர்நீதியார் சோழநாட்டிலே பழையாறை என்னும் பழமையான (தொன்மையான) பகுதியிலே பிறந்தார். 7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.
வணிகத்தால் பெரும் பொருள் தேடிச் செல்வந்தராய் விளங்கிய இவர் சிவனடியார்க்குப் பணிசெய்வதையே தனது நாளாந்த தொண்டாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு திருவமுது (உணவு), ஆடை, கீழ்கோவணம் அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். சிவனடியார்களுக்குத் திருவமுது கொடுப்பதற்காகத் திருநல்லூரில் மடம் கட்டினார். திருவிழாக்காலங்களில் தம் சுற்றத்தவரோடு தங்கியிருந்து அடியார்களுக்கு திருவமுது, உடை, கோவணம் என்பன அளித்து மகிழ்ந்தார்.
அன்பர் பணி செய்யும் அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள் புரியத் திருவுளங்கொண்டார். அவர் ஒரு நாள் அந்தணர் குலத்து பிரம்மச்சாரியாக கோலங்கொண்டார். கையில் இருகோவணம் முடிந்த ஒரு தண்டுடன் கோவண ஆடையுடன் திருநல்லூரில் உள்ள அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.
அவரைக் கண்டு அமர்நீதியார் மிக முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரித்தார். அமர்நீதியார் அவரை உணவுண்ண அழைத்தார். பிரம்மச்சாரியார் அவ்வேண்டுகோளிற்கிசைந்து காவிரியில் நீராடச் சென்றார். செல்லும் பொழுது மழை வரினும் வரும் எனக்கூறித் தமது தண்டில் கட்டி இருந்த கோவணம் ஒன்றை அவிழ்த்து அமர்நீதியாரிடம் கொடுத்து அதனைப் பக்குவமாக வைத்திருக்கும்படி கூறினார்.
அது எப்படி பட்ட கோமணம் , பாட்டை படியுங்கள்

பன்னிரண்டாம் திருமுறை

ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவ தில்லைநீ ரிதனை
வாங்கி நான்வரு மளவும்உம் மிடத்திக ழாதே
ஆங்கு வைத்துநீர் தாரும்என் றவர்கையிற் கொடுத்தார்.

மேற்கூறிய குணநலம் சான்ற கோவணத்தின் பெருமையை உள்ளவாறு உமக்கு இங்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. நீர் இதை வாங்கி நான் நீராடி வரும் வரையில் உம்மிடத்தில் பாதுகாப்பாக வைத்துப் பின் திருப்பித் தருவீராக என்று சொல்லி, அதனை அந்நாயனார் கையில் கொடுத்தார்.
அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் சேமித்து வைத்தார். எப்படி பட்ட இடம்

தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழிகொண்டு முன்புதாம் கொடுக்கும்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்.

மறையவராக வந்தவர் தந்த கோவணத்தை வாங்கிய ஒப்பற்ற பெருந்தொண்டர், முதன்மை பொருந்திய அந்தணராகிய அவர்தம் மொழியினை ஏற்றவராய், இதற்கு முன் தாம் அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென வைத்திருக்கும் கந்தை, கீள், உடை, கோவணம் எனும் இவற்றை வைத்திருக்கும் இடத்திலன்றிப் பாதுகாப்பான இடத்தை எண்ணி, அவ்விடத்தில் அதனைக்காவல் பொருந்திய தொரு தனியிடத்தில் வைத்தார்.
சிவனடியார் கோவணத்தை மறையும்படி செய்து மழையில் நனைந்தவராய் வந்தார். வைத்த கோவணத்தை கொண்டு வருமாறு கூறினார்.

தொண்டர் அன்பெனுந் தூயநீ ராடுதல் வேண்டி
மண்டு தண்புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம்நான் தந்தகோ வணத்தைக்
கொண்டு வாரும்என் றுரைத்தனர் கோவணக் கள்வர்.

தொண்டர்தம் அன்பு எனும் தூய நீரினில் ஆட விரும்பி, அவரை நோக்கிச் செறிவும் குளிர்ச்சியும் மிக்க நீரில் ஆடி வந்ததால், ஈரமுடைய கோவணத்தை மாற்றுதற்குத் தண்டின் மேல் உள்ளதும் ஈரமாகிய கோவணம் ஆதலின், நான் தந்த கோவணத்தைக் கொண்டு வருவீராக என்றுரைத்தார் கோவணக் கள்வர்.
கோவணம் கொண்டுவரச் சென்ற தொண்டர் வைத்த இடத்தில் காணாது திகைத்தார். பிற இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் பிறிதொரு கோவணத்தை எடுத்துக்கொண்டு பிரமச்சாரியிடம் வந்தார். அடிகளே!, தாங்கள் தந்த கோவணத்தை வைத்த இடத்தில் காணவில்லை. அது மறைந்ததோ பெரும் மாயமாக உள்ளது. இது வேறு ஒரு நல்ல கோவணம்; இது ஆடையிற் கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்யப்பட்டது. நனைந்த கோவணத்தை களைந்து (அகற்றி) இதனை அணிந்து அடியேனது குற்றத்தைப் பொறுத்து அருளுங்கள் என வேண்டினார்.
இதனைக் கேட்ட சிவனடியார் சீறிச் சினந்தார். அமர்நீதியாரே!, நாம் உம்மிடம் தந்த கோவணத்திற்கு ஒத்தது தண்டில் உள்ள இந்தக் கோவணம். இந்தக் கோவணத்திற்கு எடையான கோவணத்தைக் கொடுப்பீராக என்று கூறினார்.

உடுத்த கோவண மொழியநாம் உங்கையில் தரநீர்
கெடுத்த தாகமுன் சொல்லும்அக் கிழித்தகோ வணநேர்
அடுத்த கோவண மிதுவென்று தண்டினில் அவிழா
எடுத்து மற்றிதன் எடையிடுங் கோவண மென்றார்.

நாம் உடுத்தியிருக்கும் கோவணம் தவிர, உம்கையில் நாம் தர, நீர் அதனைப் போக்கியதாக முன் கூறிய அக் கிழிந்த கோவணத்திற்கு ஒப்பாகும் கோவணம் இதுவாகும்` என்று கூறி, தண்டில் கட்டியிருந்த கோவணத்தினை அவிழ்த்து எடுத்து, `இக் கோவணத்திற்கு ஒத்த எடையுடைய கோவணத்தை இடுவீராக` என்று தனது கோவணத்தை தராசில் இட்டார். ( இதையும் சிற்பி செதுக்கி உள்ளான் )
அதனை ஏற்றுக்கொண்ட அமர்நீதியார்,அதற்கு ஈடாகத் தம்மில் உள்ள நெய்த கோவணத்தை மற்றொரு தட்டில் வைத்தபோழுது அது நிறை போதாமையால் மேலெழுந்தது. அது கண்ட அமர்நீதியார், தாம் அடியார்களுக்குக் கொடுத்தற் பொருட்டு வைத்திருந்த கோவணங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக இட்டார். அப்பொழுதும் அன்பரது தட்டு மேற்பட அடியாரது கோவணத்தட்டு நிறையால் கீழே தாழ்ந்தது. அந்நிலையில் அமர்நீதியார், தம்மிடம் உள்ள பொன், வெள்ளி, நவமணித் திரள் முதலிய அரும்பொருள்களையும் இட்டார்.

தவநி றைந்தநான் மறைப்பொருள் நூல்களாற் சமைந்த
சிவன்வி ரும்பிய கோவண மிடுஞ்செழுந் தட்டுக்
கவனி மேலமர் நீதியார் தனமெலா மன்றிப்
புவனம் யாவையும் நேர்நிலா என்பது புகழோ.

தவத்தால் நிரம்பிய நான்மறைப் பொருளாக உள்ள நூல்களால் அமைந்ததும், சிவபெருமான் விரும்புதற்குரியதா யுள்ளது மான கோவணம், இட்டமேலான தட்டுக்கு, இவ்வுலகில் வாழும் அமர் நீதீயார் செல்வங்கள் மட்டுமேயன்றி, அனைத்துலகங் களும் கூட ஒப்ப நிற்கமாட்டா என்று சொல்வதும் அதற்கொரு புகழாமோ? ஆகாது என்பதாம்.

நிலைமை மற்றது நோக்கிய நிகரிலார் நேர்நின்
றுலைவில் பல்தனம் ஒன்றொழி யாமைஉய்த் தொழிந்தேன்
தலைவ யானுமென் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையி லேறிடப் பெறுவதுன் னருளெனத் தொழுதார்.

இந்நிலைமையை நோக்கிய ஒப்பற்றவராகிய நாயனார், மறையவர் முன் நேர்நின்று, கெடுதல் இல்லாத பல்வகைச் செல்வங்களையும் ஒன்று கூட விடாமல் தட்டில் வைத்துள்ளேன்; என்னுயிர்த் தலைவ! யானும் என், மனைவியும், சிறுவனும் ஒப்பாதற் குரிய பொருளாமேல், துலையில் ஏறப் பெறுதற்கு உன் அருள் முன்னிற்பதாகுக எனத் தொழுதனர்.
அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். படத்தை பாருங்கள், அம்மை அப்பன் நந்தியின் மேலே .

அமர்நீதியாரும் மனைவியாரும் மைந்தரும் சிவலோகவாழ்வினைப் பெற்று இன்புற்றார்கள்.

`````````````````````````````````````````````````````````````````````````
                   4.அரிவட்டாயர் நாயனார்  :வேளாளர்


சோழர்களது காவிரி நாட்டிலே கணமங்கலம் எனும் ஓர் ஊர் உளது. அது நீர்வளம், நிலவளம் முதலியவற்றாற் சிறந்து விளங்குவது. அவ்வூரிலே வாழ்ந்த வேளாளரின் தலைவராகத் தாயனார் எனும் செல்வந்தர் இருந்தார். அவர் சிவபாதம் மறவாத சீருடையாளர். மனையறம் பூண்டு வாழ்ந்த அவர் சிவபெருமானுக்கு ஏற்றன என்று செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் நாள்தோறும் கொண்டு வந்து திருவமுது செய்விப்பார்.

இத்திருததொண்டினை அவர் வறுமை வந்த காலத்தும் விடாது செய்துவருவார் என உலகுக்குக் காட்டி, அது கொண்டு உலகை உய்விக்கும் பொருட்டு, இறைவர் அவரது வழிவழி வந்த செல்வத்தை சென்றவழிதெரியாது மாற்றினார். அதனால் அவரது செல்வம் யானை உண்ட விளாங்கனி போல உள்ளீடற்று மறைந்தது. அப்போதும் நாயனார் உமையொருபாகருக்குத் தாம் முன்செய்துவந்த திருப்பணிகள் முட்டாது செய்து வருவாராயினர். கூலிக்கு நெல்லறுத்து வாழ்பவராய்க் கூலியாகக் கிடைத்த செந்நெல்லைக் கொண்டு இறைவருக்குத் திருவமுது ஆக்கினார். கார்நெல் அரிந்து கார்நெற்கூலிகொண்டு தாம் உண்டு வந்தார். இந்நிலையினையும் மாற்ற இறைவர் திருவுளம் பற்றவே வயல்களில் எல்லாம் நல்ல நீண்ட செந்நெல்லேயாகி விளைந்தன.
அவற்றை அறுத்த நெற்கூலியினைக் கொண்டு இது அடியேன் செய்த புண்ணியமே ஆகும்என்று சிந்தை மகிழ்ந்து, அக்கூலியெல்லாம் திருவமுதுக்கே ஆக்கினார். தம் வீட்டுக் கொல்லையில் வளர்த்த கீரை வகைகளைக் கொய்து மனைவியார் சமைத்துத்தர அதனை உணவாகக் கொண்டார். வீட்டுத்தோட்டத்தில் உள்ள கீரை வகைகள் தீரவே அருந்ததி அனைய மனைவியார் தண்ணீரை வார்க்க அதனை அன்பாளர் அமுது செய்து முன்போலப் பணிசெய்து வந்தனர்.

ஒருநாள் தொண்டனார் இறைவர்க்கு ஊட்ட அவரது அன்புபோன்ற தூய செந்நெல்லரிசியும், பசிய மாவடுவும், மென்கீரையும் கூடையிற் சுமந்து செல்ல, மனைவியார் அவர் பின்பு மட்கலத்தில் ஆனைந்து ஏந்திச் சென்றனர். இவ்வாறு செல்லும் பொழுது திருமேனி வாடியதனால் கால் தளர்ந்து தப்பித் தாயனார் வீழ்ந்தார். மட்கலம் மூடும் கையினால் காதல் மனைவியார் அணைத்தும், கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார். அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் விடேல் விடேல்என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றிஎன்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி "நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார். தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார்.

```````````````````````````````````````````````````````````````````````````
                                    5.ஆனாய நாயனார்  : இடையர்


சோழ நாட்டில் உள்ள ஊர் திருமங்களம். அந்த ஊரில் ஆயர் குலத்தில் அவதரித்தார் ஆனாயர். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். அப்போது வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புலலாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும்.

முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப்பெருமான். இதைத் திருமுருகாற்றுப்படை எடுத்துக்கூறுகின்றது. பின் முருகனின் தாய் மாமனாகிய கண்ணன் குழல் ஊதி நம் துன்பம் துடைத்தார். மூன்றாவதாக ஆனாய நாயனார் குழல் ஊதி சிவபெருமானையே கவர்ந்து இழுத்தவர். சிவனைக் கவர்ந்ததால் என்றென்றும் சிவன் அருகிலிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றவர்.

அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர். ; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர்; தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். பசுக்களைச் சேர்த்து, அகன்ற புல்வெளியிற் கொண்டு சென்று, அச்சமும், நோயும் அணுகாமற்காத்து, அவை விரும்பிய நல்ல புல்லும், நன்னீரும் ஊட்டிப் பெருகுமாறு காத்துவருவார். இளங்கன்றுகள், பால்மறை தாயிளம்பசு, கறவைப்பசு, சினைப்பசு, புனிற்றுப்பசு விடைக்குலம் என்பனவாக அவற்றை வெவ்வேறாக பகுத்துக் காவல் புரிவார். ஏவலாளர்கள் அவர் எண்ணிய வண்ணம் பணிவிடை செய்பவர்.

ஒருநாள் திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். அப்பொழுது கார் காலம் முல்லை மலர் பூத்து நறுமணம் வீசுகின்றது. அங்கு பூத்துக் குழுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவபெருமானை காணுகின்றார். எடுக்கின்றார் குழலை, ஐந்தெழுத்து மந்திரத்தை நமச்சிவாய என்று குழலோசையில் தருகின்றார். எங்கும் எதிர்ரொலிக்கின்றது. குழல்ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நிற்க்கின்றன. இளம் கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நிற்க்கின்றன. ஆங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நிற்கின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நிற்க்கின்றன. காற்று நிற்க்கின்றது. மலர்கள் அசையாமல் நிற்க்கின்றன. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது.

தேவர்களும் அங்கே வந்துவிட்டனர். தில்லை நடராசப்பெருமான் வராமல் இருப்பாரா. அப்பனும் அம்மையும் விசுவ வாகனத்தில் காட்சியளiக்கின்றனர். உன் குழல் இசையை கேட்டேன். என்றும் இந்த இசையின் பத்தை எனக்குத் தரவேண்டும். என்று இறைவன் கேட்க, உடனே இறைவனடி சேர்ந்தார் ஆனாய நாயனார்.

```````````````````````````````````````````````````````````````````````````
                 6.இசைஞானியார் நாயனார் : ஆதி சைவர்




"இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்"
திருவாரூரிலே கௌதம கோத்திரத்தில் அவதரித்த ஞானசிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்குத் திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார். அவர் திருவாரூர் இறைவரது திருவடி மறவாதவர். திருமணப் பருவம் அடைந்ததும் சடையநாயனாரது உரிமைத் திருமனைவியானார். ஆளுடைய நம்பியைப் புத்திரனாகப் பெறும் பேறுபெற்ற இசைஞானிப் பிராட்டியாரின் பெருமை எம்மால் புகழக் கூடியதோ என்று கூறுமளவு சிவபக்தியில் சிறந்து விளங்கினார்......இறைவனின் குழ்ந்தைகளில் ஆண் பெண் என்ற பாகுபாடுகள் கிடையாது

மழலை பாக்கியம் இல்லாத சடையனார் பரம்பரையாக செய்து வரும் சிவத்தொண்டு தடைபடாமல் இருக்க ஒரு புத்திரனை தந்தருளுமாறு ஈசனை வேண்டினார்.

அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் கயிலையில் தம் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ட அந்நாட்டு மன்னனின் அறிவுரைப்படி நரசிங்க முனையரையர், சுந்தரருக்கு உபநயனம் செய்வித்து, தக்க வயதில் திருமணமும் செய்ய ஏற்பாடு செய்தார். 

ஈசன் சுந்தரரை தடுத்தாட் கொண்டார். அவ்வளவு மகிமை மிக்கவரை தாம் மகனாகப் பெற்றதை எண்ணி எண்ணி மிஞ்சிய தம் வாழ்நாள் முழுதும் சிவத்தொண்டாற்றி இறுதியில் முக்தியும் பெற்றார், சடையானார்.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
-
என்ற திருக்குறளுக்கு (குறள்- 70) சடையானார் வாழ்வு உதாரணம். சிவனுக்கு பணிவிடை செய்ய உகந்த மகான் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றெடுத்த காரணத்தால் தந்தை சடையனாரும் தாய் இசைஞானியாரும் நாயனார்கள் ஆனது, நமக்கெலாம் வழிகாட்டி. 

இசைஞானியாரின் மகனே சமயக்குரவர்களில் ஒருவரான சுந்திரமூர்த்தி நாயனார். மற்ற சமயக்குரவர்களுக்கு இல்லாத பெருமை சுந்திரமூர்த்தி நாயனாருக்கு உண்டு. அது தாயார் இசைஞானியார் மட்டுமல்ல தந்தை சடைய நாயனாரும் பெரியபுராணத்தில் நாயன்மார்களாக குறிப்பிடப்படுகின்றார்கள். பெற்ற இருவரும் பெரும்புகழ் கொண்ட ஈசனின் பக்தியில் திளைத்தவர்கள் என்பது மகனுக்கு பெருமையல்லவா. அதே சமயம் மகன் சமயக்குரவர்களில் ஒருவன் என்பது பெற்றவர்களுக்கு பெருமைதானே.

இசைஞானி காதலன் திருநாவலூர்க் காதலன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே

````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

              7.இடங்கழி நாயனார் : செங்குந்தர் மன்னர்

"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்"
"
கோனாட்டுக் கொடும்பாளு ரிருக்கும் வேளிர்
குலத்தலைவ ரிடங்கழியார் கொங்கிற் செம்பொ
னானேற்றார் மன்றின்முக டம்பொன் மேய்த்த
வாதித்தன் மரபோர் நெற் கவர்ந்தோ ரன்பர்
போநாப்ப ணிருளின்கட் காவ லாளர்
புரவலர்முன் கொணரவவர் புகலக் கேட்டு
மானேற்று ரடியாரே கொள்க வென்று
வழங்கியர சாண்டருளின் மன்னி னாரே."

இயற்கை வளமும், செயற்கை வளமும், தெய்வ வளமும் மிகுந்த கோனாட்டின் தலைநகரம் கொடும்பாளூர். குறுநில மன்னர் குலத்திலே - கனகசபையின் திருச்சடை மகுடத்தை பசும்பொன்னால் வேய்ந்த ஆதித்த சோழருடைய குடியிலே அவதரித்தார் இடங்கழி நாயனார். பேரும் புகழும் பெற்ற இக் குறுநில மன்னன் விரிசடை அண்ணலின் திருத்தாளினைப் போற்றி வணங்கி வந்ததோடு, அவர் எழுந்தருளியிருக்கும் கோயில்களில் நடக்கும் சிவாகம வழிபாட்டிற்குத் தேவையான நெல்லையும், பொன்னையும் வாரி வாரி வழங்கினார். ஆகமத்திலுள்ள சைவ நெறியையும் வேதத்திலுள்ள தர்ம நெறியையும் பாதுகாத்து வந்த இவர் காலத்தில் சைவம் தழைத்தோங்கியது. சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் புரியும் தொண்டர்களுக்குப் பல வழிகளில் கணக்கற்ற உதவிகளைச் செய்து அவர்களை கொண்டாடினார் நாயனார். இடங்கழி நாயனாரின் வெண்கொற்றக்குடை நிழலில் எண்ணற்ற சிவனடியார்கள் சிவத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தனர். அவ்வாறு சைவம் வளர்த்த சிவனடியார்கள் பலருள் இவரும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்து மகிழும் அருந்தவப் பணியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அச்சிவனடியார் புரியும் திருப்பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. அமுது அளிப்பதற்குப் போதிய நெல் கிட்டாமல் அவதிப்பட்டார். நெல் தட்டுப்பாட்டால் அவரது விருந்தோம்பல் அறத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிவத்தொண்டர் செய்வதறியாது சித்தம் கலங்கினார். மனம் தளர்ந்தார். முடிவில் அவர் அரண்மனைக் களஞ்சியத்தில் நெல்லைச் சேமித்து வைத்திருப்பதை உணர்ந்தார். நள்ளிரவு வேளையில் நாயனார் அரண்மனைக்குள் நுழைந்து நெல் கட்டு நிறைகளுள்ளிருந்து நெல்லை கவர்ந்து எடுத்தார்.

திருட்டு தொழிலில் அனுபவம் இல்லாததால் இவ்வடியார் அரண்மனைக் காவலர்களிடம் சுலபமாக மாட்டிக் கொண்டார். அடியாரைக் கைது செய்து, இடங்கழியார் முன் நிறுத்தினார்கள். காவலர் வாயிலாக விவரத்தைக் கேள்வியுற்ற அரசர் அடியாரின் சிவப்பொலிவைக் கண்டு திகைத்தார். ஐயனே ! சிவக்கோலம் தாங்கியுள்ள தேவரீர் இத்தகைய இழிவான தொழிலைச் செய்யக் காரணம் யாது? என்று வேதனையோடு கேட்டார் வேந்தர்! சோழப் பெருந்தகையே! அடியேன் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்து ஒழுகும் திருப்பணியைத் தவறாமல் நடத்தி வந்தேன். எமது சிறந்த சிவப்பேற்றிற்கு இடர் ஏற்பட்டது. அதனால் அரண்மனைக் களஞ்சியத்தில் உள்ள நெல்லைக் கவர்ந்து செல்வது என்ற முடிவிற்கு வந்தேன். சிவனடியார் செப்பியது கேட்டு சிந்தை நெகிழ்ந்த சோழர் பெருமான் அடியவரைக் காவலினின்று விடுவித்து பணிந்து தொழுதார். அடியேனுக்கு இவ்வடியார் அல்லவா களஞ்சியம் போன்றவர் என்று பெருமிதத்தோடு கூறினான் வேந்தன். அவ்வடியார்க்குத் தேவையான பொன்னையும், பொருளையும் கொடுத்தனுப்பினார். அத்தோடு அரசர் மன நிறைவு பெறவில்லை. களஞ்சியத்திலுள்ள நெற்குவியல்களையும், பொன் மணிகளையும் தமது நாட்டிலுள்ள சிவனடியார்கள், அவரவர்களுக்குத் தேவையான அளவிற்கு வேணவும் எடுத்துச் செல்லட்டும். எவ்வித தடையும் கிடையாது! என்று நகரமெங்கும் பறைசாற்றுங்கள் என்று மன்னன் கட்டளை இட்டான். இவ்வாறு இடங்கழி நாயனார் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும் எடுத்துச் செல்ல, உள்ள உவகையோடு உத்தரவிட்டு சிவனடியார்களை மேன்மேலும் கவுரவப்படுத்தினான். திருவெண்ணீற்றின் பெருமைக்குத் தலைவணங்கிய குறுநிலக் கொன்றவன் கொன்றை மலர் அணிந்த சங்கரனின் சேவடிகளைப்பற்றி நீடிய இன்பம் பெற்றார்.

"
நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றிக் 
குறைவு இல் நிதிப் பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து 
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும் 
பறையறைப் பண்ணுவித்தார் படைத்த நிதிப்பயன் கொள்வார்"

````````````````````````````````````````````````````````````````````````
                                                 8.இயற்பகை நாயனார் : வணிகர்

"அக்குலப்பதிக் குடிமுதல் வணிகர்;
அளவுஇல் செல்வத்து வளமையின் அமைந்தார்;
செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத்
திறத்தின் மிக்கவர்; மறைச் சிலம்பு அடியார்
மிக்கசீர் அடியார்கள் யார் எனினும்
வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக்கடல்படி நிகழமுன் கொடுக்கும்
இயல்பின் நின்றவர்; உலகு இயற் பகையார்."

பூம்புகார் நகரம் கண்ணகி பிறந்த ஊர். இதற்கு காவிரிப்பூம் பட்டணம் என்றும் பெயர் உண்டு. இது ஓர் வாணிப நகரம். இவ் ஊரில் வணிக குலத்தில் பிறந்தவர் இயற்பகை நாயனார். 1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் இவர். இவரது சொந்த பெயர், தாய் தந்தையர் பெயர் தெரியவில்லை. இவர் செய்த பெருங்காரியத்தால் இப் பெயர் சூட்டிஇருக்கலாம்.
இயற்பகையார் என்பதற்கு பொருள், இயற்கைக்கு மாறான செய்கையை செய்தவர் என்று பொருள் அல்லது உலக இயல்பிற்கு மாறான எண்ணம் கொண்டவர் என்றும் பொருள் படலாம். இவர் மற்றவர்களை போல் அல்லாமல் தனக்கு சொந்தமாக எதுவும் இல்லை என்ற கொள்கை உடையவர். யார்வந்து எது கேட்டாலும் கொடுப்பவர். வணிகர்கள் தாம் செல்வங்களை பெருக்கி கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஆனால் இதற்கெல்லாம் மாறாக வாழ்ந்து காட்டியவர் இயற்பகையார். தன் மூச்சு, தன் உயிர், தன் பொருள் எல்லாம் அந்த சிவனுக்கே உரியது என்று வாழ்ந்தவர் இவர். யார் வந்து எது கேட்டாலும் கொடுப்பவர். தான் வாழ்வதோடு மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணங்கொண்டவர். இதனால் வணிகர்களுக்கெல்லாம் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவரது கொடைத்தன்மையை உலகிற்கு காட்ட விரும்பினார் சிவபெருமான். அடியாருக்கு மறுக்காமல் மகிழ்ந்து தரும் இவர் பெருமையை மற்றவர்களுக்கு அறிவிக்க விரும்பினார். அதற்காக அந்தணர் வேடம் பூண்டு சிவபெருமான் வருகின்றார். இதை சேக்கிழார் தூர்த்த வேடம் என்கின்றார். இங்கு தூர்த்த வேடம் என்பது காமுகன் போன்ற வேடம். அதாவது நெற்றியில் திருநீறு ஆனால் மனதில் காம குணம். நெற்றியில் திருநீறு பூசியிருப்பதை கண்ட நாயனாருக்கு பூரிப்பு, ஒர் சிவனடியார் தன் வீடு தேடிவந்துள்ளதை நினைத்து ஆனந்தம். வருக வருக என்று வரவேற்கிறார். வந்தவரிடம் வாசனைத்திறவியங்கள் பூசிய நறுமணம் வருகின்றது. இதை உணர்ந்தும் இயற்பகையார் கவலையடையவில்லை. வந்தவர் ஓர் சிவனடியார் என்பதையே நினைந்து மகிழ்ந்து போனார்.
வந்தவரோ, சிவனடியார்கள் எதைக் கேட்டாலும் மறுக்காமல் தந்துவிடுவாயாமே, அதனால் எனக்கு பிரியமானது ஒன்று உன்னிடத்தில் இருக்கிறது, அதைப்பெற்று செல்ல வந்தேன் மறுக்காமல் கொடுப்பாயா? என்றார். ஏதாவது ஒரு பொருள் எனக்கு சொந்தமானால் அது எனக்கு சொந்தமானது என்று நான் கருதுவதில்லை, அது ஈசனடியார்களுக்கே சொந்தம் ஆதலால் உங்களுக்கு எது வேண்டுமோ அதைக் கேளுங்கள் என்றார் இயற்பகையார். ஒரு கணம் தயங்கியவர்போல் நடித்த சிவனடியார், நான் உன் காதல் மனைவியை விரும்பி வந்தேன் அவளை தருவாயா என்று தயங்கியபடி கேட்டார். இவ்வாறு கூசாமல் கேட்கிறாரே என்று இயற்பகையார் கோபப்படவில்லை. மனைவியை பிறிந்து எப்படி வாழப்போகிறோம் என்று வேதனைப்படவும் இல்லை. மனமகிழ்ந்தார் இயற்பகையார். மனைவியிடம் சென்று அடியார் கேட்டதை கூறினார். மனைவி நாகம் தூண்டியது போல் துடித்தார், கலங்கினார். ஆனால் இல்லையென்னாது கொடுக்கும் தன் கணவரின் கொள்கைக்கு இடைஞ்சல் வரக்கூடாதே என்று நினைத்து இணங்கினார்.
அக்காலத்தில் கணவருக்கு அடிமையாக மனைவி வாழ்வில்லை, கணவருக்காக மனைவியும் மனைவிக்காக கணவரும் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். மனைவியை மற்றவர்கள் கேட்டதற்காக கொடுத்தது இயற்fகைக்கு மாறானது. இதனாலேயே இவர் இயற்பகையார் என்று பெயர் பெற்றார். இவர் செய்தது இயற்பகையாரின் நிலையில் பார்த்தால் தவறே இல்லை. தன்னையே இறைவனிடம் தந்தவர் அவர். தன் கடைமையை மட்டும் செய்து கொண்டு வாழ்ந்தவர் அவர். எதனையும் தன் உடைமையாக கருதியதில்லை. ஓர் சராசரி மனிதனைவிட மிக உயர்ந்த நிலையில் அவர் இருந்தார். இங்கு இயற்பகையார் பக்திக்காக தன் மானத்தையே இழக்க துணிகிறார்.
இனி நான் என்ன செய்யவேண்டும் என்று இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்டார். அதற்கு சிவனடியார் உன் மனைவியை அழைத்துக்கொண்டு போக உன் உறவினராலும் இவள் உறவினராலும் எனக்கு ஆபத்து வரலாம். அதனால் ஊர் எல்லைவரை நீ துணை வரவேண்டும் என்று அடியார் கேட்டுக்கொண்டார். சிவனடியாரின் வேண்டுகோளுக்கிணங்கி, அடியாரும் மனைவியும் முன்தொடர, இயற்பகையார அவர்களiன் பாதுகாவலுக்காக வாளோடு பின்தொடர்ந்தார்.
இயற்பகையாரின் செயலை கேள்வியுற்ற உறவினர்களும் ஊர் மக்களும், இவனுக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி, ஆனால் எமது மானத்தை நாம் காப்பற்றவேண்டும் என்று வாளோடும், வேலோடும் மங்கையை மீட்க துணிகின்றனர். இயற்பகையார் எதிர்தவர்களை வெட்டி வீழ்த்துகின்றார். அனைவரும் மடிகின்றனர். காட்டில் இருவரையும் விட்டுவிட்டு மனைவியை திரும்பிக்கூட பார்க்காமல் இயற்பகையார் நடக்கின்றார்.
அப்போது இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம், அயர்பரா தானே ஓலம், அன்பினே ஓலம் செயற்கரும் செயகை செய்த தீரினே ஓலம் என்று அசரீரி கேட்டது. ஓலம் என்பது, இடர் நேரும் போது அழைக்கும் ஒலிசொல். யார் ஓலம் இடுகின்றார்? சிவனே ஓலமிடுகின்றார். யாரிடம் ஓலம் இடுகின்றார்? செயற்கறிய செயலை செய்த இயற்பகையாரிடம் ஓலமிடுகின்றார். ஓலமிடும் ஓசைகேட்டு இயற்பகையார் திரும்பி ஓடுகின்றார். அங்கே மனைவி மட்டும் பிறமை பிடித்தவள் போல் நிற்கின்றாள். அடியார் அங்கு இல்லை. வானத்தை நோக்குகின்றார். அங்கு ரிஷப வாகனத்தில் உமாதேவியாருடன் சிவபெருமான் காட்சியளiக்கின்றார். ஆனந்தக் கூத்தாடுகின்றார். செயற்கறிய செயலை செய்த அன்பனே உன் அன்பிற்கு மகிழ்ந்தோம், நீயும் உன் மனைவியும் கைலாயத்திற்கு வருக, என்று அருள்பாலிக்கின்றார். இயற்பகையாரின் வாளால் மடிந்த உறவினர்களும் ஊர் மக்களும் உயிர் பெற்று எழுகின்றனர்.

                    "
பெண்"
கற்பிலே சிறந்த கண்ணகி
தாய்
மனைவி
கோயில்
"
அவள் ஒரு தெய்வம்"

குடிப்பிறப்பு என்ற ஒற்றுமையும், சிறந்த பொறுமை எனும் ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்

நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்

````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
                        9.இளையான்குடிமாறார் : வேளாளர்

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

இளையான்குடி என்னும் நந்நகரம் இயற்கை வளத்தோடு, இறைவனின் அருள் வளமும் பரிபூரணமாக நிறையப் பெற்றிருந்தது. இந்நகரில் வேளாளர் மரபிலே உதித்தவர்தான் மாறனார். இளையான்குடியில் பிறந்த காரணத்தால் இளையாங்குடி மாறனார் என்று அழைக்கப் பெற்றார். இவர், பெருத்த வயல் வளம் உடையவராய் விளங்கினார். எந்நேரமும் எம்பெருமானின் நமச்சிவாய மந்திரத்தையே நினைத்துக் கொண்டிருப்பார் இளையான்குடி மாறனார். மாறனாரும், அவர் மனைவியாரும் வள்ளுவர், கூறும் விருந்தோம்பல் அறத்தை நன்கு உணர்ந்து, வாழ்ந்து வந்தனர். அடியார் தம் வீடு நோக்கி வரும் அன்பர்களை இன்முகங்காட்டி இன்சொல் பேசி வரவேற்பர். அடியார்களைக் கோலமிட்ட பலகையில் அமரச் செய்து, பாதபூஜை செய்து வணங்குவர். அடியார்களுக்கு அறுசுவை அமுதூட்டி உளம் மகிழ்வதையே தங்களது வாழ்க்கை பணியாகக் கொண்டிருந்தனர். இவர்கள் இல்லத்தில் இலக்குமி தேவி நிரந்தரமாய்க் குடியிருந்தாள். மாறனாரின் உயர்ந்த தன்மையை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவனார். மாறனார், வளம் கொழிக்கும் காலத்து மட்டுமின்றி வறுமை வாட்டும் காலத்தும் அடியாரைப் போற்றி பேணும் உணர் நோக்குடையார் என்பதை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி, ஒரு சமயம் அவ்வள்ளலார்க்கு வறுமையை உண்டாக்கினார் எம்பெருமான் !

வறுமையைக் கண்டு நாயனார் சற்றும் மனம் தளரவில்லை. எப்பொழுதும் போலவே அவர் தமது சிவத்தொண்டைத் தட்டாமல் செய்து வந்தார். வீட்டிலுள்ள பொருட்களை விற்றாவது அடியார்க்கு அமுதூட்டும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தார். செல்வம்தான் சுருங்கிக்கொண்டே வந்ததே தவிர அவரது உள்ளம் மட்டும் சுருங்காமல் நிறைவு பெற்றிருந்தது. விற்று விற்று கைப்பொருள்கள் அனைத்தும் தீர்ந்ததும் மாறனார் கையிலிருந்து பணத்திற்கு சிறிதளவு நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். சிறிதளவு விதை நெல்லை விதைத்தார். அன்றிரவு பயங்கர மழை, காற்றோடு கலந்து பெய்யத் தொடங்கியது. பாதை எங்கும் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. மாறனாருக்கு ஒன்றுமே புரியவில்லை. விதை நெல் வீணாகிவிடுமே என்று வேதனைப்பட்டார். மாறனாரும், அவர் தம் மனைவியாரும், பசியாலும், குளிராலும் வாடினர். இரவெல்லாம் உறக்கமின்றி விழித்திருந்தனர். இத்தருணத்தில் சிவபெருமான் சிவனடியார்போல் திருக்கோலம் பூண்டார். மழையில் சொட்டச் சொட்ட நனைந்த வண்ணம் மாறனார் வீட்டிற்குள் வந்து நுழைந்தார். மாறனார் வீடு அடியார்களை எதிர்நோக்கி, இரவென்றும், பகலென்றும், பாராமல், எப்பொழுதும் திறந்தேதான் இருக்கும்.

மழையில் நனைந்து வந்த அடியாரைப் பார்த்து துடிதுடித்துப்போன மாறனார். விரைந்து சென்று அடியாரை வரவேற்று, அவரது பொன்மேனியில் வழிந்து விழும் ஈரத்தை துவட்டச் செய்து ஆசனத்தில் அமரச் செய்தார். மாறனார் அவரிடம், சுவாமி ! சற்று பொறுங்கள்! அமுது சூடாகச் செய்து அளிக்கிறேன் என்றார். பகவானும் அதற்கு சம்மதித்தவர் போல் தலையை அசைத்தார். இந்த நிலையிலும் நமக்கு இப்படியொரு சோதனை வந்துவிட்டதே என்று எண்ணவில்லை நாயனார். அதற்காக மனம் தளரவுமில்லை. எவ்வித வெறுப்பும் கொள்ளவில்லை. வீடு தேடிவந்த அடியாரின் பசியை எப்படிப் போக்குவது என்பதைப் பற்றியே எண்ணலானார். மனைவியிடம் அதுபற்றி வினாவினார். சுவாமி ! தங்குளுக்குத் தெரியாதா ? இந்த நள்ளிரவு வேளையில் எங்கு சென்று எவரிடம் நான் என்ன கேட்பேன். கேட்டால்தான் கொடுக்க யாரிருக்கிறார்கள் ? இவ்வாறு கூறிக் கண் கலங்கினாள் மனைவி ! செய்வதறியாது இருவரும் திகைத்தனர். வெளியே இடியும், மழையும் அதிகரித்தது. அப்பொழுது மின்னல் பளிச்சிட்டது. அம்மின்னலைப்போல் மனைவியார் உள்ளத்திலும் ஓர் எண்ணம் பளிச்சிட்டது. அம்மங்கை நல்லாள் மணாளனை நோக்கி, சுவாமி எனக்கு ஒரு அரிய யோசனை தோன்றுகிறது, கழனியில் காலையில் விதைத்த முளை நெல்லை வாரிக்கொண்டு வாருங்கள். நொடிப் பொழுதில் குத்தி அரிசியாக்கி அடியார்க்கு அமுதிடலாம் என்றாள்.

தக்க தருணத்தில் துணைவியார் கூறிய மொழிகள் அவரது செவியில் அமிர்தம் போல் பாய்ந்தது. உள்ளமும் உடலும் பூரித்துப்போன மாறனார். பொன் புதையல் கிடைத்தாற்போல் உவகைப் பெருக்கோடு கூடையும் கையுமாகக் கழனியை நோக்கி விரைந்தார். பயங்கர மழை ! திக்குதிசை தெரியாத கும்மிருட்டு, மேடும் பள்ளமும் காண முடியாத அளவிற்குத் தெருவெல்லாம் வெள்ளக்காடு ! இத்ததைய பயங்கர சூழ்நிலையில் அடியார் மீது பூண்டுள்ள அன்பின் பெருக்கால் நாயனார் இடிக்கும், மழைக்கும் அஞ்சாது, கழனியை நோக்கி ஓடினார். நடந்து பழக்கப்பட்ட பாதையானதால், இருளில் தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டார். மாறனார் மழையில் நனைந்தார். இல்லை, அவர் பக்தியில் மூழ்கினார் என்றுதான் கூறவேண்டும். மனம் குளிர சிவநாமத்தை ஜபித்தார். மிக்கச் சிரமத்துடன் தண்ணீர் மீது மிதக்கின்ற விதை நெல் முளைகளை வாரிக் கூடையிலே போட்டுக் கொண்டு வீட்டை அடைந்தார். அதற்குள் மனைவியார் தோட்டத்திலிருந்து கீரை பறித்து வந்தாள். விதை நெல்லை கொடுத்தார். விதை நெல்லை மகிழ்வுடன் வாங்கிக்கொண்ட அம்மையார். உணவு சமைக்க விறகு இல்லையே ? என்றதும் மாறனார் சற்றும் மனம் கசப்படையாமல் வீட்டுக் கூரை மீது கட்டப்பட்டிருந்த கொம்புகளை அறுத்தெடுத்து வெட்டிக் கொடுத்தார். அதனால் மழையின் கொடுமை வீட்டிற்குள்ளும் புகத் தொடங்கியது.

அம்மையார் நெல்முளையை நன்றாகப் பக்குவமாக வறுத்து, குத்தி, அரிசியாக்கிப் பதமாகச் சோறாக்கினாள். தோட்டத்திலிருந்து பறித்து வந்த கீரைகளைச் சமைத்துச் சுவையான கறியமுதும் செய்தாள். இன்னல்களுக்கிடையே ஒருவாறாக இன்அமுது சமைத்து பிறகு, மாறனாரும் அவரது மனைவியாரும், ஐயனே! அடியார்களிடம் யாம் பூண்டுள்ள அன்பை அறிந்து எம் இல்லத்திற்கு எழுந்தருளிய பெரியோரே! பிறவிப் பெருங்கடலைக் கடக்க மரக்கலம் இன்றி அழுந்திக் கிடக்கும் இவ்வேழையர் உய்யும் பொருட்டு ஏழையின் மனைக்கு அமுது உண்ண எழுந்தருளும் ! எனப் பணிவன்புடன் வேண்டி நின்றனர். நிலம் கிடந்து நமஸ்கரித்தனர். கண் மூடி தியானித்து நமஸ்கரித்து எழுந்த தெய்வீகத் தம்பதியர் கண் திறந்து பார்த்தபோது அடியாரைக் காணோம் ! சிவத்தொண்டர்கள் செயலற்று போயினர். மாறனார் இல்லத்தில், வானளாவிய சொக்கலிங்கக கேயிற் குழலோசையும், மணி ஒசையும், முழ ஓசையும் மாறாமல் ஒலித்தவண்ணமாகவே இருந்தன. பிறைமுடிப் பெருமான் மலைமகளுடன் ரிஷபத்தின் மீது எழுந்தருளினார். மாறனாரும், அவரது மனைவியாரும் இத்திருக்கோலங்கண்டு பக்தி பெருக்கெடுத்ததோட மெய்மறந்து நின்றனர். அன்பனே ! அடியார்க்கு ஈவதே ஈகை என்ற அறவழிக்கு ஏற்ப உன் வறுமையையும் எண்ணிப்பாராது, வந்த விருந்தினருக்குத் திருவமுது செய்விக்க அல்லல்பட்ட உங்களுக்குச் சிவலோக பிராப்தியை அருளுகிறேன். நிலவுலகில் நெடுநாள் வாழ்ந்து அறம்வளர்த்து பக்தி வளர்த்த பிறகு இருவரும் எம்பால் அணைவீர்களாக ! எமது தோழனாகிய குபேரன், சங்கநிதி, பதுமநிதி முதலிய செல்வங்கøள்க கையிலேந்தியவாறு உங்களுக்கு ஏவல் செய்யக் காத்திருக்கிறான். அவ்வெல்லையில்லாப் பேரின்பத்தைப் பெற்று என்றும் இனிது வாழ்வீர்களாக என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளினார். மாறனாரும், அவரது மனைவியாரும், உலகத்தில் பல காலம் வாழ்ந்து, திருத்தொண்டர்களைப் பணிந்து பரமனை வழிபட்டு, இறுதியில் செஞ்சடை வண்ணரின் திருவடி நீழலில் தங்கும் சிவபதவியைப் பெற்றார்கள்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது.

````````````````````````````````````````````````````````````````````````
                      10.உருத்திர பசுபதி நாயனார் : அந்தணர்


காதலான அன்பரின் அரிய தவப்பெருமையும் 
அதனுடன் கலந்த வேத மந்திர நியதியின்
 
அளவு கடந்த மிகுதியையும் ஏற்று
ஆதி நாயகரான சிவபெருமான் அமர்ந்து அருள் செய்யவே
தீது இலாத நிலை உடைய சிவன் உலக எல்லை அடைந்தார் பசுபதியார்"

பல்வளம் செறிந்த சோழவள நாட்டிலே பூம்பொழிகள் மிகுந்துள்ள திருத்தலையூர் அமைந்திருந்தது. இவ்வூரில், எந்நேரமும், அந்தணர்களின் வேத பாராயணம் வானெட்ட ஒலித்த வண்ணமாகவே இருக்கும். இவர்கள் வளர்க்கும் வேள்வித் தீயின் பயனாய் மாதம் மும்மாரி பெய்யும். அந்த அளவிற்கு அருளுடைமையும், பொருளுடைமையும் ஓங்கிட அன்பும் அறனும் ‌சால்பும் குன்‌றாது குறையாது நிலை‌பெற்று விளங்கின. இத்தகைய சீரும், சிறப்புமிக்கத் திருத்தலையூரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் இருந்தார். இவர் தமது மரபிற்கு ஏற்ப வேத சாஸ்திர, இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார். பசுபதியார் அருமறைப் பயனாகிய திருஉத்திரம் என்னும் திருமந்திரத்தை இடையறாமல் பக்தியுடனும், அன்புடனும் சொல்லிக் கொண்டேயிருப்பார். திரு அல்லது ஸ்ரீ என்பது திருமகளாகிய செல்வம், அழகு ஆகிய பொருள்களில் சொல்லப்படுவதால் எம்பெருமான் ஸ்ரீ ருத்திரன் அல்லது திருவுருத்தன் என்னும் திருநாமம் பெற்றார். ருத் என்றால் துன்பம் என்றும் திரன் என்றால் தீர்ப்பவன் என்றும் பொருள் கொள்ளப்படுவதால் எம்பெருமான் ருத்திரன் என்னும் திருநாமம் பெற்றார்.

உருத்திரராகிய சிவபெருமானுக்குரிய திருமந்திரம் உருத்திரமாகும். சிவபெருமானுக்கு உருத்திரம் கண்ணாகவும், பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின. எம்பெருமானுடைய பெருமையைச் சொல்லும் இம்மந்திரமே வேதத்தின் மெய்ப்பொருளாகும். அருமறைப் பயனாகிய உருத்திரம் என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப் பெற்றுள்ள இத்திரு மந்திரத்ததையே தமது மூச்சாகவும், பேச்சாகவும் கொண்டு ஒழுகி வந்தார் பசுபதியார். இவர் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் சிவத்தொண்டு புரிந்து வந்தார். இவர் தினந்தோறும் தாமரைப் பொய்கையில் நீராடி கழுத்தளவு நீரில் நின்று கொண்டு தலைக்கு மேல் கை குவித்து உருத்திர மந்திரத்த‌ை ஓதுவார். இரவென்றும் பகலென்றும் பாராமல் எந்நேரமும் உருத்திரத்தைப் பாராயணம் செய்வதிலே தம் பொழுதெல்லாம் கழித்தார். இது காரணம் பற்றியே இவருக்கு உருத்திர பசுபதியார் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது. உருத்திர பசுபதியின் பக்தியைப் பற்றி ஊரிலுள்ளோர் அனைவரும் புகழ்ந்து பேசிய வண்ணமாகவே இருப்பர். உருத்திர பசுபதியாரின் பக்தியின் பெருமை எம்பெருமானின் திருவுள்ளத்தை மகிழச் செய்கிறது. உருத்திரத்தின் பொருளான எம்பெருமான் திருவுள்ளம் கனிந்து, பசுபதியாருக்குப் பேரருள் புரிந்தார். உருத்திரபசுபதி நாயனார் இறைவனுடைய திருவடி அருகில் அரும்பேற்றைப் பெற்றார்.

`````````````````````````````````````````````````````````````````````````
                 11.எறிபத்த நாயனார் : செங்குந்தர்



திருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்

சிவகாமி யார்மலரைச் சிறந்த யானை
யானெறியோ நெறிபத்தர் பாக ரோடு
மறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று
புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்
புரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்
கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்
கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.

சோழ மன்னர்களiன் ராஜதானியாக ஐந்து ஊர்கள் இருந்தன. அவற்றில் ஒன்று தான் கருவூர். அமராவதி நதிக்கரையில் கருவூர் அமைந்துள்ளது. இவ்வூரில் எழுந்தருளiயிருக்கும் பசுபதிச்சுரரை வழிபட்டு வாழ்ந்து வந்தவர் எறிபத்த நாயனார். இவர் சிவசின்னங்களோடு வாழ்ந்தாலும் தன்கையில் கோடரியை பரசுராமர் போன்று எப்போதும் வைத்திருப்பவர். அதனால் அக்கோடரிக்கு பரசு என்று பெயர் வழங்களாயிற்று. சிவனடியார் ஏன் கோடரியை வைத்திருக்க வேண்டும் என்று ஐயம் ஏற்படலாம். அதற்கு ஓர் காரணம் உண்டு. சிவனடியார்களுக்கு யாரும் துன்பம் ஏற்படுத்தினால் அவர்களை காப்பாற்றுவற்காக அவர் கோடரியைப் பயன்படுத்தினார். தமிழ்நாட்டு வரலாற்றின் படி எறிபத்த நாயனார் வாழ்ந்த காலம் மதப்போராட்டங்கள் மலிந்திருந்த காலம். மிக கொடுமையான காலம் என்றும் வர்ணிக்கலாம். சமண சமயம், பௌத்த சமயம் என பல சமயங்கள் சைவ சமயத்தவர்களை மதமாற்றத்திற்கு தூண்டிய காலம் அது. இக்காலத்தில் அவர்கள் மதவெறி பிடித்தவர்களாக தத்தமது சமயத்தை பரப்பலாயினர்.
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வாள் எடுக்காமல் தமது நாவண்மையால் சமணரையும் பௌத்தர்களையும் வென்றார்கள்.
எறிபத்தநாயனார் கருவூரில் வாழ்ந்து வந்து கொண்டிருந்த பொழுது, அவ்வூரில் சிவகாமி ஆண்டார் என்ற சிவனடியார் இருந்தார். ஒவ்வொருநாளும் மலர்பறித்து கோவிலில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானுக்கு கொண்டு செல்வார். அப்போது சோழ பேரரசுக்கு மாமன்னராக இருந்தவர் புகழ்ச்சோழர். இவரும் 63 நாயன்மார்களiல் ஒருவர். இவரது பட்டத்து யானை நன்கு அழங்கரிக்கப்பட்டு வீதிவலம் வருகிறது. அவ்வேளையில் சிவகாமி ஆண்டார் மலர் பறித்துக்கொண்டு அவ்வழியால் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது பட்டத்து யானை மதம்பிடித்தது போல் அவரிடமிருந்த மலர்கூடையை தன் தும்பிக்கையால் தூக்கி வீசியது. மலர்கள் தரையில் சிந்துகின்றது. யானை பாகர்கள் யானையை ஓட்டி செல்கின்றனர். மலர்கள் நிலந்தில் சிந்தியதால் சிவகாமி ஆண்டார் மனம்நொடிந்து தரையில் வீழ்ந்து அழுகின்றார். ஆசையோடு மலர் பறித்து சிவபெருமானுக்கு அழகு பார்க்க நினைத்தேனே யானை வந்து பாழ்படுத்தி விட்டதே என்று சிவதா சிவதா அழுதார். சிவதா என்பது சிவபெருமானை குறித்து ஓலமிடும் ஒரு சொல்.
சிவகாமி ஆண்டாரின் குரல் கேட்டு எறிபத்தநாயனார் அங்கு வருகின்றார். அனைத்தும் அறிந்த எறிபத்த நாயனாருக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது. யானையை தொடர்ந்து செல்கிறார். யானை எறிபத்த நாயனாரை கண்டு அவரை தும்பிக்கையால் தூக்கி அவரை கொல்ல முயல்கிறது. ஆனால் எறிபத்தரோ யானைக்கு அஞ்ஞாமல் தும்பிக்கையை தன் கோடரியால் வெட்டி வீழ்த்துகிறார். யானை ஆலமரம் விழுவது போல் தரையில் வீழ்ந்து மடிகிறது. சிவகாமி ஆண்டாருக்கு அவ்வேளையில் உதவி செய்யாமல் சென்ற யானை பாகர்களையும் வெட்டி வீழ்த்துகிறார் எறிபத்த நாயனார்.
ஒரு சிவனடியாருக்கு நிகழந்த துன்பத்திற்கு எறிபத்த நாயனார் பழிதீர்த்துக் கொண்டார். பட்டத்து யானைக்கு நடந்த கதியை அரசருக்கு கூற சென்ற வீரர்கள் அரசருக்கு தவரான செய்தியை சொல்கிறார்கள். யாரோ பகைவர்கள் பட்டத்து யானையை கொண்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்ட புகழ்சோழர் தமது படையுடன் வருகின்றார்.அங்கு அவர் பகைவர்களைக் காணவில்லை, ஆனால் இரத்தவெள்ளத்தில் இருந்த பட்டத்து யானையின் அருகில் கோடரியுடன் காணப்பட்ட சிவனடியாரை காண்கிறார். தவறு செய்யாதவர்களை எறிபத்தர் தண்டிக்கமாட்டார் என்று ஊகித்த புகழ்ச்சோழர், அருகில் சென்று, இந்த யானை என்ன தீங்கு செய்தது என்று அவர் கேட்கவில்லை, எறிபத்தரை வணங்குகின்றார். நான் அரன்மனையில் கேள்விபட்டது ஒன்று அதனால் படையுடன் வந்தேன் அதனால் மன்னித்து அருளவேண்டும், யானை செய்த தவற்றுக்கு தண்டனை போதுமா அல்லது இன்னும் தண்டனை கொடுக்க வேண்டுமா என் அரசர் கேட்கிறார்.
சிவபக்தர்கள் மற்றவர்களுக்கு தீங்கு செய்யமாட்டார்கள் என்றுணர்ந்த புகழ்ச்சோழர் அதனால் தான், யானையின் தும்பிக்கையை எறிபத்தர் வெட்டிவீழ்த்தினார் என்று கணப்பொழுதில் அறியும் புகழ்ச்சோழர் அதனால் தான் இன்னும் என்ன தண்டனை கொடுக்கலாம் அல்லது கொடுக்கப்படாலாம் என்று கேட்கிறார். அரசர் படையுடன் வருவதைக் கண்ட எறிபத்தர், அவர்களையும் எதிர் கொள்ள தயார் நிலையில் இருந்தார், ஆனால் அரசர் இவ்வாறு கேட்பார் என்பதை அறிந்திருக்கவில்லை. நடந்ததை கூறுகிறார். இதைக்கேட்ட புகழ்ச்சோழர், யானை சிவனடியாரின் மலர்களை சிந்தியது குற்றம், அதை அடக்காமல் இருந்தது பாகர்களiன் குற்றம், மேலும், யானை தனது யானை எனவே, நான் கொல்லப்பட வேண்டியவன், ஒரு சிவனடியாரின் வாளiனால் கொல்லப்படுவதைவிட என் வாளiனாலேயே என்னைக் கொல்லுங்கள் என்று கூறி தன் உடைவாளை எறிபத்தரிடம் நீட்டுகின்றார் புகழ்ச்சோழர். எறிபத்தருக்கு பூமி சுழல்வது போல் இருக்கிறது. ஐயகோ, சிவனடியாருக்கு உதவி செய்யப்போய் வேரொரு சிவனடியாரின் யானையை அல்லவா கொன்றுவிட்டேன், அவர்தம் பாகர்களையும் அல்லவா கொன்று விட்டேன், இப்போது இவர் நீட்டும் வாளை நான் வாங்கி கொள்ளாவிடில் இவர் தம் வாளால் தன்னையே கொன்றுவிடுவார் என்று மனதில் எண்ணியவாறு வாளை வாங்கி கொள்கிறார். என்ன தவம் செய்தேனோ இவ் சிவனடியார் மூலம் உயிர்துறப்பதற்கு என்று மகிழ்ச்சி அடைகிறார் புகழ்ச்சோழர்.
ஆனால் எறிபத்தரோ, மன்னனின் யானையை கொன்றேன், அவர்தம் பாகர்களை கொன்டேன், என்று வருந்தும் எறிபத்தர் அரசர் உயிரை நான் போக்குவேனோ, மிகச்சிறந்த சிவபக்தரான இவ்சோழமன்னர் உயிர்போக்குவேனோ, என் உயிரை மாய்த்துக்கொள்வதே சாலச்சிறந்தது என்று எண்ணிய எறிபத்தர் தன் கழுத்தை அறுத்துக்கொல்ல முயல்கிறார். இதைக்கண்ட சோழர், பெருமானே பெருமானே என்று அழைத்து வாளை பிடித்திருக்கும் கையை தன் இரு கரங்கலால் பற்றிக்கொள்கிறார். சிவபக்தரே உம்மை நான் நோகடித்துவிட்டேன், யானையை கொன்ற நான் ஒரு பாவி, என்னை நான் மாய்த்துக்கொள்ள வழிவிட தன்கையை விடுமாறு எறிபத்தர் கேட்டுக்கொள்கிறார். வேண்டாம் வேண்டாம் இறக்க வேண்டியவன் நானே என்று புகழ்ச்சோழர் கதறுகிறார்.
அப்போது அவ் இக்கட்டான சூழ்நிலையில் வானத்திலிருந்து ஒரு குரல் ஒலிக்கின்றது. எறிபத்தரே, புகழ்சசோழரே உங்கள் இருவரினதும் பக்தி நெறியையும் அன்பின் ஆழத்தையும் உலகத்திற்கு காட்டவே பட்டத்து யானை அவ்வாறு செய்தது. அச்செயல் யானை செய்தது அல்ல. அவ்வாறு செய்தது அரனார் செயலே என்று குரல் ஒலித்தது. பட்டத்து யானையும் பாகர்களும் உயிர்தெழுந்தனர். சிவகாமியாரின் கூடையிலும் மலர்கள் நிறைந்தன.
சிவபெருமான் ஏன் இவ்திருவிளையாடல் புரிந்தார்? புகழ்ச்சோழரின் பக்தி நெரியை காட்டுவத்ற்கும், எறிபத்தர் கோடரி கொண்டு திரிவதை தடுப்பதற்கும் என்று எண்ணத் தோன்றுகின்றது. சிவம் என்றால் அன்பு என்று பொருள். அன்பே சிவம் என்கின்ற பொழுது, வாளுக்கும், வேலுக்கும் கோடரிக்கும் இடம் இல்லையே. கோடரியால் அடியார் ஒருவருக்கு ஏற்பட்ட துயரை கலயமுயன்றார் எறிபத்தர். ஆனால் அவரையே அன்பால் வென்றுவிட்டார் புகழ்ச்சோழர். நீண்ட நாள் வாழ்ந்திருந்த எறிபத்த நாயனார், திருக்கயிலாயத்தில் சிவகணங்களுக்கெல்லாம் தலைவராகும் பெரும் பதவி அடைகின்றார்.

"
சைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும்."

```````````````````````````````````````````````````````````````````````````

                                              12.ஏயர்கோன் கலிகாமர் : வேளாளர்





"தாள் ஆண்மை உழவு தொழில் தன்மை வளம் தலை சிறந்த 
வேளாளர் குண்டையூரக் கிழார் எனும் மே தக்கோர் 
வாளார் வெண் மதி அணிந்தார் மறைவராய் வழக்கினில் வென்று 
ஆளாகக் கொண்டவர்தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார்"

காவிரியால் வளம்கொழிக்கும் சோழ நாட்டிலே பெருமங்கலம் என்னும் நகரம் அமைந்துள்ளது. இத்தலத்திலே ஏயர் குலத்தினர் சோழருடைய படைத் தலைமை வகிக்கும் பெருமை பெற்றவர்களாக சிறந்து விளங்கினர்.அக்குடியினிலே வாழ்ந்து வந்த தொண்டர்கள் பலருள் கலிக்காம நாயனார் என்பவரும் ஒருவர். இவர் பக்தியின் பேருருவாய் - அன்பின் அழகு வடிவமாய் - சிறந்த சிவத்தொண்டராய் விளங்கினார். இவர் மானக்கஞ்சாற நாயனாருடைய மகளைத் திருமணம் செய்து இல்லறத்தை இனிது நடத்தி வந்தார். இச்சிவனடியார் திருவெண்ணீற்றுச் செல்வத்தையும், திருச்சடையோன் சேவடியையும் தமக்குக் கிட்டிய பேரின்ப பொக்கிஷம் என்ற எண்ணத்தில் சிவனாரின் திருவடிக் கமலங்களைச் சிந்தையில் இருத்தித் தேனினும் இனிய ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது எந்நேரமும் ஓதி வந்தார். பெருமானின் நினைவாகவே காலம் கடத்தி வந்த நாயனார் சிவனடியார்களின் வியக்கத்தக்க செயல்களையும் அவர்களது பக்திப் பெருக்கின் தன்மையையும் கேள்வியுற்று களிப்பெய்தி வந்தார். இங்ஙனம் இவர் வாழ்ந்து வரும் நாளில்தான் எம்பெருமானாரைச் சுந்தரர் தம்பொருட்டு பரவையாரிடம் தூது போகவிட்ட நிகழ்ச்சி நடந்தது! இச்செய்தியைக் கேள்வியுற்ற கலிக்காமர் மனம் வருந்தினார். ஆண்டவனை அடியான் தூது அனுப்பும் தொழில் மிகமிக நன்று ! இறைவன் அவனது ஆணைக்கு உடன்பட்டு இரவு முழுவதும், தமது தூய திருவடிகள் நோகுமாறு தேரோடும் திருவீதி வழியே உழன்றுள்ளாரே ! இந்திரனும், திருமாலும், நான்முகனும் காணமுடியாத எம்பெருமானின் திருவடிகள் தூது சென்று நோக இசைந்தாலும் தொண்டன் என்று கூறிக்கொள்ளும் இவன்தான் ஏவுதல் முறையாகுமோ? இத்தகைய செயல்புரிந்த இவரும் தன்னைத் துணிந்து தொண்டன் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வில்லையோ! இது எவ்வளவு பாவமான செயல்! பொறுக்கமுடியாத அளவிற்கு இத்தகைய பெரும் பிழையினைக் கேட்ட பின்னரும் என்னுயிர் நீங்காதிருந்ததே! என்று சினங்கொண்டார் கலிக்காமர். துன்பக் கடலில் மூழ்கினார். கலிக்காமரின் கடும் கோபத்தைப் பற்றிக் கேள்வியுற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் மிகவும் மனம் வாடினார். தம்மால் ஒரு தொண்டர்க்கு ஏற்பட்டுள்ள துயரத்திற்கு எப்படி முடிவு காண்பது என்று சிந்தித்தார். தமது பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டினார். புற்றிடங்கொண்ட பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரையும், கலிக்காம நாயனாரையும் நண்பர்களாக்கத் திருவுள்ளம் கொண்டார். அதன்படி இறைவன் கலிக்காமருக்குக் கொடிய சூலை நோயினைக் கொடுத்து ஆட்கொண்டார். கலிக்காமர் சூலை நோயால் மிகவும் துடித்தார். கொடிய கருநாகப் பாம்பின் விடம் தலைக்கு ஏறினாற்போல் துடித்த நாயனார் மயக்கமுற்றார்.

அப்பொழுது எம்பெருமான் உன்னைத் துன்புறுத்துகின்ற சூலை நோயைத் தீர்க்க வல்லவன் வன்றொண்டனே ஆவான் ! என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். எம்பெருமான் சுந்தரரை அடைந்து, நம் ஏவலினால் நம் அன்பன் ஏயர்கோன் கொடிய சூலை நோயினால் மிகவும் வருந்தி வாடுகிறான். <உடனே நீ சென்று கலிக்காமருக்கு ஏற்பட்டுள்ள சூலை நோயைத் தீர்த்து வருவாயாக! என்றார். சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானின் பூவடிகளைப் பற்றி வணங்கிப் பெருமங்கலத்துக்குப் புறப்பட்டார். இறைவன் ஆணைப்படி பெருமங்கலத்திற்குப் புறப்பட்டு வரும் செய்தியை ஏவலாளர்கள் மூலம் முன்னதாகவே சொல்லி அனுப்பினார் சுந்தரர். ஏவலர் கலிக்காமர் இல்லத்தை அடைந்து சுந்தரர் வருகையைப் பற்றிக் கூறினர். ஏற்கனவே பல வழிகளில் துவண்டு புழுப்போல் துடித்துக் கொண்டிருந்த கலிக்காமருக்கு சுந்தரரின் வருகையைப் பற்றிக் கேள்விப் பட்டதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருந்தது. பிறை முடியணிந்த பெருமானை வணங்கியவாறு உடைவாளைக் கழற்றினார். எம்பெருமானே! இனிமேலும் நான் உலகில் வாழ விரும்பவில்லை. ஆரூரன் இங்கு வந்து என்னைப் பற்றியுள்ள சூலை நோயைத் தீர்க்கும் முன் என் ஆவியைப் போக்கிப் கொள்வேன் என்று கூறி கலிக்காமர் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டார். கலிக்காமர் ஆவி பிரிந்ததும் அவரது மனைவி தம் கணவரோடு உயிர் துறந்து அவருடன் பரமனடியைச் சேர்வது என்று உறுதி பூண்டாள். அதற்குரிய நிலையினை உருவாக்கும் தருணத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏவலாளர்கள் முன்னதாக வந்து நம்பிகள் இங்கு பொருந்த அணைந்தார் என்று கூறினர். இவ்வாறு அவர்கள் கூறியதும் அம்மையார் துயரத்தை மறைத்து கணவரது செயலினையும் மறைத்து சுந்தரமூர்த்தி சுவாமிகளை இன்முகத்துடன் வரவேற்க எண்ணினார். எண்ணியபடியே அம்மையார் ஏவலாளர்கள் அறியாவண்ணம் கணவரது உடலை உள்ளே ஓர் அறையில் மறைத்து வைத்துவிட்டுத் திருமாளிகையை அலங்கரிப்பதில் ஈடுபட்டார். சிவ அன்பர்களும் உதவலாயினர். வாயில்கள் தோறும் மணி விளக்குகளையும் மணமிக்கத் தூயநிறை குடங்களையும் வைத்தனர். நறுமலர் மாலைகளை வரிசையாக அழகுடன் தொங்க விட்டனர். அம்மையார் முக மலர்ச்சியுடன் சுந்தரர் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் இருந்தார். சுந்தரர் அன்பர்களுடன் எழுந்தருளினார் கலிக்காமரின் தேவியார் சுந்தரரை முகமன் கூறி வரவேற்றார். மலர் தூவிக் கோலமிட்ட ஆசனத்தில் அமரச் செய்து விதிமுறைப்படி அவரது திருப்பாதங்களைத் தூய நீரால் சுத்தம் செய்து மலர் தூவி வழிபட்டு மகிழ்ந்தார். சுந்தரரும் அம்மையாரின் அன்பிற்குக் கட்டுப்பட்டவராய் அம்மøயாருக்கு அருள் செய்தார். சுந்தரர், அம்மையாரை நோக்கி, அம்மையே ! என் நண்பர் கலிக்காமர் எங்குள்ளார்? அவருக்கு இப்பொழுது துன்பம் செய்து வரும் சூலைநோயினைக் குணப்படுத்தி அவரது நட்பைப் பெற்று மகிழ்வதற்குக் காலம் தாழ்ந்தது பற்றி நான் மிக்க வேதனைப்படுகிறேன் என்றார். கலிக்காமருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அங்குள்ளோர் அம்மையாரின் ஏவுதலின்படி கூறக்கேட்ட சுந்தரர், அவருக்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்றாலும் என் மனம் அவரைக் காணாது தெளிவு பெறாது. நான் உடனே அவரைப் பார்த்துதான் ஆகவேண்டும் என்றார். அன்பர்கள் வேறு வழியின்றி சுந்தரரை அழைத்துச் சென்று குருதி வெள்ளத்தில் கிடக்கும் கலிக்காமரைக் காண்பித்தனர்.

குடர் வெளிப்பட்டு <உயிர் நீங்கி உடலில் குருதி கொட்ட ஆவி பிரிந்து கிடந்த கலிக்காமரைக் கண்டு உளம்பதறிப்போன சுந்தரர் வேதனை தாளாமல் கண்களில் நீர்பெருக எம்பெருமானைத் தியானித்தார். எம்பெருமானே! இதென்ன அபச்சாரமான செயல்! நான் மட்டும் இவரது இத்தகைய பயங்கர முடிவைக் கண்ட பின்னரும் உயிர் வாழ விரும்பவில்லை. நானும் என் உயிரைப் போக்கிக்கொள்கிறேன் என்று கூறித் தமது ஆவியை போக்கிக் கொள்ள உறுதி பூண்டார். கலிக்காமர் அருகே கிடந்த உடைவாளைக் கையிலெடுத்தார். அப்பொழுது எம்பெருமான் திருவருளால் ஏயர்கோன் கலிக்காம நாயனார் உயிர்பெற்று எழுந்தார். கணப்பொழுதில் தெளிவு பெற்று நடந்ததை அறிந்தார். உடைவாளால் தம்மை மாய்த்துக் கொள்ளப் போகும் சுந்தரரைப் பார்த்து மனம் பதறிப்போனார். உடை வாளைப் பற்றினார் கலிக்காமர். ஐயனே! இதென்ன முடிவு? உங்கள் தோழமையின் உயர்வை உணராமல் என்னையே நான் அழித்துக் கொண்டதோடு உங்களது வாழ்க்கைக்கும் பெரும் பாவம் புரிந்துவிட்டேன். ஐயனே! எம்பெருமானின் அன்பிற்குப் பாத்திரமான உம் மீது பகைபூண்டு நெறி தவறிய என்னை மன்னித்தருள வேண்டும் என்று இறைஞ்சினார். சுந்தரர் எம்பெருமானின் திருவருளை எண்ணி அகமும், முகமும் மலர்ந்திட, கலிக்காம நாயனாரை ஆரத்தழுவிப் பெருமிதம் கொண்டார். கலிக்காமரும் சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். கலிக்காமரின் தேவியாரும் மட்டிலா மகிழ்ச்சி பூண்டார். சுந்தரர், அவரது மனைவியின் பக்தியைப் பெரிதும் போற்றினார். மானக்கஞ்சாரர் மகள் அல்லவா? என்று வியந்து கூறினார். எம்பெருமானின் திருவருட் கருணையினால் கலிக்காமரும், சுந்தரரும் தோழர்களாயினர். இரு சிவனருட் செல்வர்களும் சேர்ந்து சிவயாத்திரை செல்ல எண்ணினர். ஒருநாள் பெருமங்கலப் பெருமானைப் பணிந்து இருவரும் புறப்பட்டனர். திருப்புன்கூர் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் திருசடை அண்ணலின் திருவடிகளைப் பணிந்து துதித்தனர். சுந்தரர் அந்தனாளன் எனத் தொடங்கும் பதிகத்தைச் சுந்தரத் தமிழில் பாடினர். அங்கியிருந்து புறப்பட்டு, இருவரும் திருவாரூரை வந்தணைந்து பூங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் புற்றிடங்கொண்ட பெருமானின் பொற்பாதங்களைப் போற்றிப் பணிந்தனர். கலிக்காம நாயனார் சுந்தரருடன், பரவையார் திருமாளிகையில் சில காலம் தங்கினார். இருவரும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தனர். கலிக்காமர் சுந்தரரிடம் விடைபெற்றுக்கொண்டு பிரிந்துசெல்ல மனமில்லாத நிலையில் தமது ஊருக்குப் புறப்பட்டார். பெருமங்கலத்துப் பெருமானுக்குப் பணி செய்தவாறு மனைவியுடன் இனிது வாழ்ந்து வந்த கலிக்காமர் ஆனேறும் பெருமானின் தேனூறும் திருவடிகளை நாள்தோறும் வாயாறப் போற்றி மகிழ்ந்தார். திருத்தொண்டு வழுவாமல் நின்றார். பல்லாண்டு காலம் பூவுலகில் பெருவாழ்வு வாழ்ந்த நாயனார், முடிவில் நலம் தந்த நாதரின் வரம் தரும் திருவடி நீழலில் வீற்றிருக்கும் அடியார்கள் கூட்டத்துடன் கலந்தார். மீளா நெறியில் அமர்ந்து உய்ந்தார்.

``````````````````````````````````````````````````````````````````````````
                                                        13.ஏனாதி நாதர் : சான்றார்


"தீங்கு குறித்தழைத்த தீயோன் றிருநீறு 
தாங்கிய நெற்றியினார் தங்களையே யெவ்விடத்து 
மாங்கவருந் தீங்கிழையா ரென்ப தறிந்தானாய்ப் 
பாங்கிற் றிருநீறு பண்டு பயிலாதான்

வெண் நீறு நெற்றி விரவப் புறம் பூசி,
உள் நெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு,
வண்ணச் சுடர் வாள் மணிப் பலகை கைக் கொண்டு,
புண்ணியப் போர் வீரர்க்குச் சொன்ன இடம் புகுந்தான்" 

"
கண்ட பொழுதே, ‘கெட்டேன்; முன்பு இவர் மேல் காணாத
வெண் திரு நீற்றின் பொலிவு மேல் கண்டேன்; வேறு இனி என்?
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார்என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கைக் குறி வழி நிற்பேன்என்று.
கை வாளுடன் பலகை நீக்கக் கருதி, அது
செய்யார், நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்குஎன்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்."

சோழநாட்டின் ஒரு பகுதி ஏனனூர். தற்போது இவ் ஊர் ஏன நல்லு\ர். ஏனாதி நாதர் என்பது இவர் இயற்பெயர் அல்ல. ஏனாதி என்பது முன்னர் சேனாதிபதியை குறிக்கும் ஒரு பெயர். இவர் அவ் ஊரில் ஒரு கூடம் அமைத்து அரசர்களுக்கும் வீரர்களுக்கும் வாற்போர் பயிற்சி அள த்து வந்தார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சிவதொண்டு செய்து வந்தார். சிவனடியார்களுக்கு உணவும் உதவியும் அள த்து வந்தார். ஈகை குணம் கொண்ட இவரை பலரும் போற்றி புகழ்ந்தனர்.
அதிசூரன் என்பவன் ஆணவம் படைத்தவன். ஏனாதி நாதருக்கு கிடைக்கும் செல்வத்தையும் பொருட்களையும் கேள்வியுற்று பொறாமை கொண்டான். அதிசூரனும் அவ்வூரில் ஏனாதி நாதர் போல் ஒரு கூடம் அமைத்து வாற்போர் பயிற்சி அள த்து வந்தார். ஏனாதி நாதன் தன் தொழிலுக்கு போட்டியாக இருப்பதாக அதிசூரன் கருதிவந்தான். இதனால், தன்னுடன் வாற் பயிற்ச்சி பெற்றவர்களையும் துணைக்கு சிலரையும் அழைத்துக்கொண்டு ஏனாதிநாதரை போருக்கு அழைத்தான். இருவர் வாற்பயிற்சி தரும் ஆசிரியராக ஓரே ஊரில் இருப்பது நல்லதல்ல, வலியவரே ஆசிரியராக இருக்க தகுதியுள்ளவர். எனவே நாம் இருவர்களும் நாம் இருவர்களும் நம் வீரர்களுடன் போரிடுவோம், யார் வெற்றி பெருகிறார்களோ அவரே ஆசிரியராக இருக்கலாம் என்று கூறினான்.
படையுடன் வந்திருக்கும் அதிசூரனை பார்த்தார் ஏனாதி நாதர். புன்முருவலுடன் உன் எண்ணம் போல் நடக்கட்டும் என்று கூறி போர் கோலம் பூண்டு போருக்கு புறப்பட்டார். தன் ஒருவராக போருக்கு புறப்பட்ட ஏனாதி நாதரின் மாணவர்களும் உறவினர்களும் சேர்ந்து கொண்டு போர் செய்தனர். போரை கண்டவர்கள ன் கண்கள் கூசின. மண்ணும் விண்ணும் சுழன்றன. போர் செய்தவர்கள் கரங்கள் அறுப்பட்டன. கால்களும் தோல்களும் சிந்தின. உதிர ஆறு ஓடியது. குறை உடல்கள் கூத்தாடின. தலைகள் உருண்டன. பிண மலை குவிந்தது. காகங்களும் கழுகுகளும் அவற்றை வட்டம் இட்டன. அதிசூரன் படுதோல்வி அடைந்தான். பாய்ந்து வந்த ஏனாதி நாதரைகண்டு புறங்காட்டி ஓடினான் அதிசூரன்.
வெற்றி பெற்ற ஏனாதி நாதர், சிவபெருமானை போற்றி துதித்த வண்ணம் மாள கை திரும்பினார். அவமானம் அடைந்த அதிசூரன் தோல்வியை எண்ணி எண்ணி மனங்குன்றினான். போரினால் ஏனாதி நாதரை தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்த அதிசூரன், சிவனடியாரிடமும் திருநீற்றின் மீது ஏனாதி நாதரின் மதிப்பை அறிந்து அதன் மூலமே அவரை வஞ்சனை மூல்ம தோற்கடிக்கலாம் என்று கருதினான். ஏனாதி நாதரிடம் ஒருவனை அனுப்பி தன்னுடன் தனிமையில் போர் புரிய வருமாறு அழைத்தான். அதன் மூலம் வீரர்கள் ஒருவரும் மறைய தேவையில்லை என்பதையும் அறிவித்தான். இதற்கு ஏனாதி நாதரும் சம்மதித்தார். எவரும் அறியாவண்ணம் அதிசூரன் அழைத்த இடத்திற்கு ஏனாதி நாதர் சென்றார்.
நயவஞ்சகனான அதிசூரன், ஒருநாளும் திருநீறு அணியாதவன் அங்கு திருநீற்றை அணிந்தவாறு சென்றான். ஆனால் அவன் திருநீற்றை ஒரு பலகை மூலம் மறைத்துக்கொண்டே சென்றான். போரும் தொடங்கியது. சிறிது நேரத்தில் அதிசூரன் தோல்வி அடையும் நிலையை அடைந்தான். அவ் நேரத்தில் அவன் தன் நெற்றியில் அணிந்த பலகையை அகற்றினான். அவனது நெற்றியில் அணிந்திருந்த திருநீறு பள ச்சென்று ஏனாதி நாதருக்கு தென்பட்டது. அதை பார்த்த ஏனாதி நாதரோ பயந்தார். நடுங்கினார். நெற்றியில் திருநீறு அணிந்த இவருடன் நான் போராடமாட்டேன், சிவனடியாருடன் தான் போட்டியிடமாட்டேன் என்று ஓங்கி தன் வாளை சாத்தினார். இதுதான் தருணம் என்று கருதிய அதிசூரன் ஏனாதிநாதரை வெட்டி சாத்தினார்.
திருநீற்றின் மேல் வைத்த மதிப்பால் தன் உயிரையே மாய்த்துக்கொண்டார் ஏனாதி நாதர். கொள்கைக்காக பக்திக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மெய்பொருள் நாயனார் வரிசையில் சேர்ந்தார். சிவபெருமான் ஏனாதி நாயனாரை ஆட்கொண்டு அருளனார்.

`````````````````````````````````````````````````````````````````````````

                         14.ஐயடிகள் காடவர்கோன் குறுநில மன்னர்


" மன்னவரும் பணிசெய்ய வடநூறென் றமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப் பாரளிப்பா ரரசாட்சி
இன்னலென விகழ்ந்ததனை யெழிற்குமரன் மேலிழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு நயந்தளிப்பா ராயினார்."

காடவர் என்பது பல்லவ மன்னர் குலத்தினரைக் குறிக்கும் பொதுப்பெயர். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூஉ வாகும்.ஐயடிகள் காடவர்கோன் என்னும் பெயர் ஐயனடிகளாகிய பல்லவ மன்னர் என்ற பொருள் தரும் பெயராகும்.
ஐயடிகள் உலகில் புகழ் நிலவ அரசு புரிந்த பல்லவர் குலத்தில் தோன்றினார். நாட்டில் வறுமையும் பகையும் குடிகளை வருத்தா வண்ணம் நீதிநெறியோடு ஆட்சி புரிந்தார். சிவநெறியைப் போற்றி வளர்த்தார்.

திருமலியும் புகழ்விளங்கச் சேணிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனிதமரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத்
தருமநெறி தழைத்தோங்கத் தாரணிமேல் சைவமுடன்

அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்

என இம்மன்னரது பெருவீரத்தையும் சிவநெறிப் பற்றையும் சேக்கிழார் விளக்கியுள்ளார்.

மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.

இவ்வாறு ஐயடிகள் செந்தமிழால் சிவ நெறி போற்றியும் தமக்கு இயைந்த ஆலயத் திருப்பணிகள் ஆற்றியும் வாழ்ந்து முடிவில் சிவலோகம் எய்திச் சிவபிரான் திருவடிகளை அடைந்தார் என்பது பெரிய புராணம் உணர்த்தும் இந்நாயனார் வரலாறாகும்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் `கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்` எனக் குறிப்பிடப்பெறும் மன்னன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார் எனவும் அவர் தெளிவு செய்துள்ளார்.

முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்ப நேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

```````````````````````````````````````````````````````````````````````````
                            15.கணநாதர் : அந்தணர்



கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் 

திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி என்னும் பெருமைமிக்க நகரில் மறையவர் குலத் தலைவராய்க் கணநாதர் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.இவர், அந்தணர் மரபிற்கு ஏற்ப நாடோறும் சிவாகம விதிப்படி தோணியப்பரை வழிபட்டு வந்தார். சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு புரியும் உயர்ந்த அறத்தை உணர்ந்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இப்பெரியார், அட
ியார்களுக்குச் செய்ய வேண்டிய சிறந்த தொண்டினைப் பற்றிய ஒப்பற்ற உண்மையான தத்துவத்தை உலகிற்கு உணர்த்தத் தவறவில்லை ! திருத்தொண்டு புரிவோர் முவ்வுலகமும் போற்றும் பெருமை பெற்று உயர்வர். அவர்கள் தாங்கள் செய்துவரும் திருத்தொண்டிற்கு இடையூறு நேருங்கால் தங்கள் உயிரையும் விட அஞ்சமாட்டார்கள். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தியதோடு நில்லாமல் தாமும் அதன்வழி நடந்தார். கோயிலில் அமைந்துள்ள நறுமலர்ச் சோலைகளைச் சீர்படுத்துவது, பொற்றாமரைக் குளத்தைச் செப்பஞ் செய்து சீர்படுத்துவது முதலியனவற்றைத் தவறாது செய்து வந்தார். திருமந்திர வாக்கின்படி, புண்ணியஞ் செய்வாருக்கு நறுமலர் உண்டு, திருநீருண்டு என்பதை கற்றறிந்து தெளிந்திருந்த இத்தொண்டர், இறைவழிபாட்டிற்கு இன்றியமையாத மலர்களைத் தரும் நந்தவனம் அமைத்தார்.மலர்ச் செடிகளை முறைப்படி வளர்த்து மலர்களைப் பறித்து அழகுறத் தொடுத்து எழில்மிகும் பூ மாலையாக்கிப் பரமனின் பொன்னனாற் மேனிதனில் சாத்தி மகிழும் சிவபுண்ணியத்தைப் பெற்றிருந்தார் கணநாதர்.

இவர் திருசடை அண்ணலின் பூங்கழலைப் பணிந்ததோடு திருஞானசம்பந்தரின் திருவடிக் கமலங்களையும் அன்போடு மகிழ்ந்து வழிபட்டு வந்தார். திருமஞ்சனம் செய்தல், கோயிலில் மெழுகிடுதல், விளக்கிடுதல், திருமுறைகளை எழுதுதல், படித்தல் முதலிய திருத்தொண்டுகளையும் தவறாது செய்து வந்தார் இத்திருத்தொண்டர் ! மற்றவர்களுக்கும் யார் யாருக்கு எது எது விருப்பமோ அவ்வப்பணியில் அவர்களை ஈடுபடச் செய்தார். அவர்களுக்குப் பக்தியும், நல்ல பழக்கமும் ஏற்படுமாறு செய்ய அரும்பாடுபட்டார். சிவத்தொண்டு புரிந்து வந்த கணநாதருக்குத் தொண்டர்கள் பலர் தோன்றினர். இறைவழிபாட்டின் தனிமையான இனிமையை உணர்ந்திருந்த இவர் இல்லறத்தின் இனிமையையும், தனிமையையும் நன்கு உணர்ந்திருந்தார். வள்ளுவன் வகுத்த இல்லற நெறியை நன்கு உணர்ந்து மனையாளோடு கருத்தொருமித்து வாழ்ந்து வந்தார். நாயனாரின் திருத்தொண்டினையும், பக்தியின் மேன்மையையும் கண்டு அவருக்குப் பேரின்ப நிலையை அளிக்கத் திருவுள்ளம் கொண்டார் திருத்தோணியப்பர். தொண்டருக்குத் தொண்டராகி, அரனாருக்கு அன்பராகி, ஆளுடைப்பிள்ளைக்கு அரும்பக்தனாகி வாழ்ந்தவர் கணநாதர்! வித்தகம் பேச வேண்டா, பக்திப் பணி செய்ய வேண்டும் என்ற நெறிமுறையைக் கடைப்பிடித்து வாழ்ந்த அருமையான சிவத்தொண்டர். பூ உலகில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்த இப்பெரியார், இறைவன் அருளால் பேரின்ப வீடு பெற்றுச் சிவகணங்களுக்குத் தலைமைப் பதவி பெற்றுத் திருத்தொண்டில் நிலையான இன்பத்தைப் பெற்றார்.

```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

                     16.கணம்புல்லர் : செங்குந்தர்





கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்
ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து 
மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார்

வடவெள்ளாற்றின் தென்கரையிலே அமைந்துள்ள இருக்குவேளூர் என்னும் தலத்திலே வாழ்ந்து வந்த பெருங்குடி மக்களுக்கெல்லாம் ஒப்பற்ற தலைவராய் வாழ்ந்தவர் கணம்புல்ல நாயனார் என்னும் சிவனருட் செல்வர். இத்தவசீலர் திருசடைநாதர் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கு நெய்விளக்கு ஏற்றும் நற்பணியை நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார்.கோயில்களுக்கு ஒளி ஏற்றுவதால் இருளடைந்த மானிடப்பிறவி என்னும் அஞ்ஞான இருள்நீங்கி அருளுடைய ஞான இன்ப வீட்டை அடைய வழி பிறக்கும் என்பதனை உணர்ந்தார்.இவ்வாறு நற்பணி செய்து வந்த நாயனாருக்குச் செல்வம் குறைந்து வறுமை வளரத் தொடங்கியது. அந்த நிலையிலும் திருவிளக்கு ஏற்றும் பணியைத் தவறாமல் செய்து வந்தார்.இந்த நிலையில் நாயனார் இருக்குவேளூரில் வறியராய் இருக்க விரும்பவில்லை. தம்மிடமுள்ள நிலபுலன்களை விற்று ஓரளவு பணத்தோடு சிவ யாத்திரையை மேற்கொள்ளுவான் வேண்டி ஊரை விட்டே புறப்பட்டார். ஊர் ஊராகச் சென்று கோயில் தோறும் நெய் விளக்கேற்றியவாறு தில்லையை வந்தடைந்தார்.எம்பெருமானைப் பணிந்து பேரின்பம் பூண்டார். தில்லைப்பதியை விட்டுச் செல்ல மனமில்லாத அடிகளார் அவ்வூரில் தனியாக வீடு எடுத்து வசிக்கலானார்.

அடியார் அவ்வூரில் தங்கியிருந்து பெருமானை உளம் குழைந்து உருகிப் போற்றி விளக்கேற்றும் திருப்பணியை மேற்கொள்ளலானர். தில்லைத் திருவிடத்தில் அமைந்துள்ள திருப்புலீச்சரம் என்னும் சிவன் கோயிலுக்கு விளக்கேற்றும் பணியை மேற்கொண்ட அடியார் வறுமையால் மனம் வாடினார். விற்பதற்குக் கூட மேற்கொண்டு மனையில் பொருள் இல்லையே என்ற நிலை ஏற்பட்டதும் நாயனார் ஊராரிடம் இரப்பதற்கு அஞ்சிய நிலையில் உடல் உழைப்பினால் செல்வம் சேர்க்கக் கருதினார். அதற்கான கணம்புல்லை அரிந்து வந்து அவற்றை விற்று பணமாக்கி நெய் வாங்கி விளக்கேற்றி வந்தார். எம்பெருமான் சோதனையால் கணம்புல்லும் விற்பனையாக வில்லை. இதனால் இடர்பட்ட நாயனார், கணம்புல்லையே திரித்து அழகிய விளக்காக எரித்தார். ஆலயங்களில் விளக்குகள் பெரும்பாலும் ஜாமம் வரைக்கும் எரிவது வழக்கம். கணம்புல் யாமம் வரைக்கும் எரியாமல் சீக்கிரமே அணைந்துவிட்டது. கணம்புல் நாயனார் அன்புருகும் சிந்தனையுடன் என்புருக அத்திரு விளக்கில் தமது திருமுடியினை வைத்து இன்பம் பெருக நமச்சிவாய நாமம் என்று சொல்லி விளக்காக எரிக்கத் தொடங்கினார்.திருப்புலீச்சரத்து மணிகண்டப் பெருமான் அதற்கு மேல் பக்தரைச் சோதிக்க விரும்பவில்லை. பெருமான் பக்தருக்கு சக்தி சமேதராய் ரிஷப வாகனத்தில் பேரின்ப காட்சி கொடுத்தார். அடியார் நிலம் கிடந்து சேவித்து, பெருமானைப் போற்றினார். எம்பெருமான் தமது அன்பு தொண்டர் கணம்புல்ல நாயனாருக்குச் சிவலோகப் பதவியை அளித்து அருளினார்.

``````````````````````````````````````````````````````````````````````
                     17.கண்ணப்பர் : வேடர்





வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது;
வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது;
சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது;
பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்

உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி நாட்டிலுள்ள சிற்றூர். இத்தலத்தைச் சுற்றி ஓங்கி உயர்ந்த மலைகள் சூழ்ந்திருந்தன. யானைத் தந்தங்களை வேலியாகக் கொண்டதும், பெரிய மதில் அரண்களையும் உடையதுமான இவ்வூர் வேடர்களின் தனி நாடாய்த் திகழ்ந்தது. இவர்கள் மறவர் குலத்திற்கு ஏற்ப வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தனர். தோலுடை தரித்து, ஊனை உண்டு, கொடுந்தொழில் புரியும் இவ்வேடர் குலத்திற்குத் தலைவனாக இருந்தவன்தான் நாகன். இவனது மனைவி தத்தை என்பவள். வாள் வலிமையும், தோள் வலிமையும் ஒருங்கே பெற்ற நாகன், குற்றம் புரிவதையே தொழிலாகக் கொண்டவன். அம்மறக்குடி மங்கையும் கணவனைப் போலவே வீரமும், வலிமையும் கொண்டு, பெண் சிங்கம் போலிருந்தாள். இருவரும் பல்வகைச் சிறப்புக்களோடும் வாழ்ந்து வந்தனரே தவிர, அவர்களுக்கு மன நிம்மதியில்லை. நாகனுக்கும், தத்தைக்கும் திருமணமாகிப் பல காலமாகியும் மக்கட்பேறு இல்லை. அதற்காக இருவரும் பக்தர்கள் குறை தீர்க்கும் எல்லாம்வல்ல முருகக் கடவுளைப் பல வழிகளில் அனுதினமும் வழிபட்டு வந்தனர். இவர்களது இடையறாத பக்திக்கு சுந்தரக் கடவுளும் கருணைக் காட்டினார். குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரவேள், நாகனுக்கும், தத்தைக்கும் குழந்தைச் செல்வத்தை அருளினார். முருகப் பெருமானின் திருவருளால் மறவர்குடி மங்காது விளங்க, தத்தை ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து மகிழ்ந்தாள். பிறக்கும்போதே குழந்தையைக் கைகளில் தூக்கமுடியாத அளவிற்குத் திண்ணமாய் இருந்ததால் அவர்கள் அக்குழந்தைக்கு திண்ணன் என்று சிறப்புப் பெயர் வைத்தனர். வேடர்கள் அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி ஆரவாரித்தனர். புலிக்குட்டிபோல் வீரத்தோடு பிறந்த திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரலானான். வேடர் குல முறைமைக்கு ஏற்ப உரிய பருவத்தில் திண்ணன் வில் வித்தையை முறையோடு பயின்று, உரிய காலத்தில் வல்லவனாக விளங்கினான்.பிரபஞ்சம் திண்ணனைப் பதினாறு பிராயம் நிரம்பப் பெற்ற வாலிபனாக்கியது. முதுமையை அடைந்த நாகன், தலைமைப் பதவிக்குத் தன் மகனை மாற்ற எண்ணி அதனை வேடர்களிடம் தெரிவத்தான். அவர்களும் நாகனின் விருப்பப்படியே திண்ணனைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள இசைந்தனர். திண்ணனாரும் வேடர்களுக்கு ஈடு இணையற்ற வீரத்தலைவர் ஆனார்.

உள்ளமும், உடலும் பூரித்துப்போன நாகன், தேவதைகளுக்குப் பூசை செய்யும் தேவராட்டியை வரவழைத்து குல வழக்கத்திற்கு ஏற்பத் தேவதைகளுக்குப் பூஜை செய்யுமாறு கட்டளையிட்டான். தேவராட்டி வழிபாடு செய்து, திண்ணன் தந்தையினும் மேம்பட்டவனாய் விளங்குவான் என்று ஆசி கூறினாள். ஒருநாள் குல வழக்கப்படி வேட்டைக்குப் புறப்பட எண்ணினார் திண்ணனார். இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு மற்றவர்களோடு வேட்டைக்குப் புறப்பட்டார். மேகம் போல் வேடர் கூட்டம் சூழ, திண்ணனார் வேட்டையாடக் காட்டிற்குள் புகுந்தார். குகைவிட்டுக் கிளம்பும் கொடும் புலியைப்போல் திண்ணனார் வேட்டையாடத் தொடங்கினார். பறவைகளும், கொம்புகளும் பெரு முழக்கமிட்டன. வேடர்களால் வாயால் சீழ்க்கையடித்தனர். கைகளைத் தட்டி ஓசை எழுப்பினர். வேடர்களின் ஆர்ப்பாட்டத்தில் காடே அதிர்ந்தது சிங்கங்கள் கர்ஜித்து வந்து, வேடர்களின் குத்தீட்டிகளுக்குப் பலியாயின. பாய்ந்து வந்து புலிகள் அம்பினால் தாக்கப்பட்டு உயிர் நீத்தன. துள்ளித் துள்ளி வந்த மான்கள் பல மடிந்து வீழ்ந்தன. மற்றும் பல வனவிலங்குகளும் வேடர்களின் கணைகளுக்குப் பலியாயின. இந்தச் சமயத்தில் திடுக்கிடும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. வலையை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிய பெரிய பன்றி ஒன்று வேட்டை நாய்களிடமிருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டதோடல்லாமல் வேடர்கள் கணைகளுக்கும் தப்பி அதி வேகமாக ஓடத் தொடங்கியது. வேடர்கள் பன்றியைத் துரத்திக் கொண்டு ஓடினர். பன்றி சிக்கவில்லை. அனைவரும் களைப்பு மேலிடப் பின்தங்கினர். ஆனால் திண்ணனார் மட்டும் உறுதியோடு பன்றியைப் பின்தொடர்ந்து கற்களையும், முட்களையும், பாறைகளையும் பாராமல் காட்டு முயல்போல் பாய்ந்தோடியவாறு பன்றியைப் பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். திண்ணனின் மெய்க்காவலர்களாகிய நாணன், காடன் என்ற இருவர் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து ஓடினர். எல்லோரையும் ஏமாற்றிவிட்டுக் காற்றினும் கடுகப் பாய்ந்தோடிய பன்றியைப் பிடித்தார். உடைவாளால் வெட்டி, அதனைத் துண்டு துண்டாக்கினார் திண்ணனார். திண்ணனாரின் பின்னால் ஓடிவந்த நாணனும், காடனும் திண்ணனார் இருக்குமிடத்தை அடைந்து, தலைவரது ஆற்றலைக் கண்டு வியந்தனர். திண்ணனாரின் வீரத்திற்குத் தலைவணங்கிய அவ்விருவரும், அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினர். அம் மூவருக்கும் நேரம் அதிகமானதாலும் ஓடிவந்த களைப்பினாலும் பசி மேலிட்டது.

மூவரும் பன்றியை நெருப்பில் சுட்டு தின்று, தண்ணீர் அருந்திச் செல்ல தீர்மானித்தனர். ஆனால் திண்ணனாருக்குத் தண்ணீர் எங்கே கிடைக்கும் என்ற ஐயம் எழவே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதற்கு முன், பல தடவை வேட்டைக்கு வந்து பழக்கப்பட்ட நாணன், திண்ணனிடம், சற்று தொலைவில் உள்ள தேக்குமரத் தோப்பினைக் கடந்து சென்றால் குன்றுகளின் அருகாமையில் பொன்முகலி என்னும் ஆறு ஓடுகிறது. என்று விளக்கினார். நாணனின் பேச்சைக் கேட்டு பூரித்துப்போன திண்ணனார், அப்படியா ! நாம் அனைவரும் அங்கேயே போவோம். இந்த பன்றியையும் தூக்கிச் செல்வோம் என்று சொல்லி முன்னால் புறப்பட, நாணனும் காடனும் பன்றியைத் தூக்கிக் கொண்டு திண்ணனாரை வழிநடத்திச் சென்றனர். செல்லும் வழியே திண்ணனார் காளத்தி மலையைக் கண்டார். திண்ணனார் ஒரு வினாடி அப்படியே அசைவற்று நின்றார். காளத்தி மலையைப் பார்க்க பார்க்க அவருக்கு மெய் சிலிர்த்தது. எதனாலோ, அவர் உடம்பில் புதுச் சக்தி பிறந்தது. மலை மீது ஒளிப்பிழம்பு தெரிவது போன்ற பிரமை அவரைப் பற்றிச் சற்று நேரம் மெய்மறக்கச் செய்தது. குன்றின் அழகையே பார்த்துக் கொண்டிருந்த திண்ணனார் செவிகளில் மட்டும் விழும்படியாக, மலைமீது ஐந்த தேவ துந்துபிகள் கடல் ஒலிபோல் முழக்கம் செய்தன. அந்த ஒலியைக் கேட்கும் பேறு பெறாத நாணன் செவிகளில், தேனீக்கள் தேனடையைச் சூழ்ந்து கொண்டும் எழுப்பும் ஓசைதான் ஒலித்தது. திருமலையில் திருவுள்ளம் பதிந்து போன திண்ணனார், நாணா ! அக்குன்றுக்குச் செல்வோமா ? என்று உணர்ச்சி மேலிடக் கேட்டார். ஏதோ சொல்ல முடியாத உணர்ச்சி ஒன்று திண்ணனாரைத் தடுத்தாட்கொண்டது. ஓ, போகலாமே ! அம்மலையிலே நல்ல காட்சிகள் பலவற்றைக் காணலாம், அத்தோடு அம்மலையிலுள்ள குடுமித்தேவர் கோவிலுக்குச் சென்று, அவரையும் கும்பிட்டு வராலம் என்று நாணன் கூறினான். அவன் மொழிந்தது கேட்டு திண்ணனார் களிப்படைந்தார் அவர் உடம்பில் பேரின்பச் சக்தி பிறந்தது. திண்ணனாருக்குச் சொல்ல முடியாத அளவிற்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. மலையைப் பார்க்கப் பார்க்க உலக பாõரம் குறைவது போன்ற ஒரு புத்துணர்வு திண்ணனாருக்கு ஏற்பட்டது. குடுமித்தேவரைக் காணவேண்டும் என்ற ஆசை பள்ளத்தில் பாய்ந்த வெள்ளம்போல் அவர் உள்ளத்தில் புகுந்து ஓடியது.

குடுமித் தேவரைக் கும்பிட வேண்டுமென்ற எண்ணம், அவரை மேலும் விரைந்து செல்லத் தூண்டியது. நடந்து சென்று கொண்டிருந்த திண்ணனார், ஆசை மேலிட, ஆவல் உந்திட, ஓட ஆரம்பித்தார். நாணனும் காடனும் கூடவே விரைந்தனர். சற்று நேரத்தில் மூவரும் பொன் முகலி ஆற்றின் கரையை அடைந்தனர்.திண்ணனார், காடனை நோக்கி, காடா ! நீ, தீ மூட்டி, இப்பன்றியைச் சுட்டுச் சாப்பிடுவதற்குப் பக்குவமாகச் செய்து வை. அதற்குள் நானும், நாணனும் மலைக்குப் போய் வருகிறோம் என்று கூறினார். திண்ணனாரும், நாணனும் வேக வேகமாக பொன்முகலி ஆற்றைக் கடந்து மகிழ்ச்சியுடன் திருக்காளத்தி மலைச்சாரலை அடைந்தனர்.பகலெல்லாம் பாரிலே பவனி வந்த பகலவன் கடமையை முடித்த களிப்பிலே, களைப்பு நீங்கக் கடல் வாயிலை அடைந்து கொண்டிருக்கும் நேரம் !மாலைக் கதிரவனின் மஞ்சள் வெயில் திருக்காளத்தி மலையைப் பொன்மயமாக்கியது. நாணன், திண்ணனாருக்குப் பாதை காட்டும் பொருட்டு முன்னால் நடந்து சென்றான். திண்ணனார் அவனைப் பின் தொடர்ந்தார். மலையின் மீது படிகளைக் கடந்து செல்லும் நேரம் உலகத் தத்துவங்கள் என்னும் படிகளைக் கடப்பது போன்ற ஒருவித மன உணர்வு பூண்டார் திண்ணனார். வேணிநாதரின் முடி மேலிருக்கும் வெண்ணிலாவின் தன்மைபோல் திண்ணனார் நெஞ்சம் குளிர்ந்தது. ஒவ்வோர் படி மீதும் அடி எடுத்து வைக்கும் போதும், அவரது உள்ளத்தில் எதனாலோ பக்தி வளர்ந்தது. முருகனைப் போற்றும் திண்ணனார், சிவத்தை சாரும் சிவயோகி போலானார். திண்ணனார், முற்பிறப்பில் செய்த தவத்தின் பெருக்கம் அவரது உள்ளத்தில் அன்பைப் பெருக்கியது. ஆண்டவன் மீது ஆராக காதலைப் பொங்கி எழச் செய்தது. காளத்தி மலையின் உச்சியில் முழுங்கும் பஞ்சதேவதுந்துபிகளின் ஒலியைக் கேட்க கேட்க ஆசை பொங்கி வழிந்தது. உள்ளம் ஏதோ ஒரு சொல்ல முடியாத விருப்பத்தை அடைந்தாற்போல் தோன்ற மெய் சிலிர்த்தது. மலை மீதேறிய திண்ணனார் அங்கு எழுந்தருளியிருக்கும் குடுமித் தேவரைக் கண்டார். அவரது வடிவெல்லார் புளகம் பொங்கியது. அருள் வழிகளில் ஆனந்தக் கண்ணீர் அருவிபோல் பாய்ந்தது.

திண்ணனார் முகத்திலே புதிய பிரகாசம் ஒன்று ஏற்பட்டது. எம்பெருமானின் கருணை கூர்ந்த அருட்திருநோக்கம் அவர் மீது பட்டது. திண்ணனார் ஒப்பற்ற அன்பு வடிவமாய்த் திகழ்ப் புதுப்பிறவி எடுத்தாற்போல் ஆனார். ஞாயிறு தோன்ற நலியும் இருள்போல திண்ணனார் நெஞ்சத்தில் தோன்றிய அருள், அஞ்ஞானத்தை அறவே நீக்கியது. ஞானத்தை ஊட்டியது. சிவகொழுந்தை அப்படியே பார்த்துக் கொண்டேயிருந்தார். அன்பினாலும் பேருவகையினாலும் ஈர்க்கப்பெற்ற திண்ணனார் ஆசை பொங்கி மேலிட அருள் வடிவமான அம்மையப்பரைக் கட்டித் தழுவினார். முத்தமாரி பொழிந்தார். பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். விழி இரண்டும் அருவி போல் ஆனந்த நீரைச் சிந்தின. திண்ணனார் மதுவுண்ட வண்டுபோல் ஆனார் அவரது மொழி குழறியது. உடல் குளிர்ந்தது. உள்ளம் பேருவகை எய்தியது. திண்ணனார் அன்பே உருவானார். அகில உலகத்தையும் மறந்து சிலைபோலானார். சற்று நேரத்தில் மீண்டும் நினைவு பெற்றார். இந்த ஏழைக்கு இவர் அகப்பட்டார். இப்பிறப்பில் நான் பெற்ற பேற்றை வேறு எவருமே பெற்றிருக்க முடியாது என்று உணர்ச்சி பொங்கக் கூறிய திண்ணனார், எல்லையில்லா ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். இறைவனைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து, நெற்றி சிவக்க நிலத்தில் வீழ்ந்து சிவலிங்கத்தை வணங்கினார். திண்ணனாரின் மனத்திலே திடீரென்று ஒரு கலக்கம் குடிபுகுந்தது. அவரது பிஞ்சு மனத்திலே ஒரு கேள்வி பிறந்தது. கரடியும், வேங்கையும், கடும்புலியும், வாழும் இக்கொடிய கானகத்தில் குடுமித் தேவர், துணை எதுவுமின்றித் தனித்து இருக்கிறாரே ! வனவிலங்குகள் வந்து என் எம்பிரானுக்கு ஏதாகிலும் துன்பத்தைக் கொடுத்துவிட்டால் என்ன செய்வது ? என்னால் அக்கொடுமையைக் கண்டுகொண்டு எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் ? இப்படி தமக்குள் எண்ணிப் பார்த்த திண்ணனார், தாங்க முடியாத வேதனையால் விம்மி விம்மி அழத் தொடங்கிவிட்டார், அவரது கையில் இருந்த வில், தானாக நழுவி நிலத்தில் வீழந்தது. அப்பொழுது திண்ணனார் இறைவனின் திருமேனியில் பச்சிலையும், நீரும் இருப்பதைப்பார்த்து, என் ஐயனை இப்படியெல்லாம் செய்தவர் யாராக இருக்கலாம் என்று தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டார். உண்மையை அறிய விரும்பிய திண்ணனார் இதே கேள்வியை நாணனிடம் கேட்டார். நாணன் திண்ணனாரை நோக்கி தலைவா ! இதெல்லாம் யாருடைய வேலை என்பதை நான் நன்றாக அறிவேன் முன்னொரு முறை, நான் உங்கள் தந்தையுடன் இக்கோவிலுக்கு வந்திருந்தேன். அது சமயம் பார்ப்பனர் ஒருவர் இக்குடுமித் தேவருக்குப் பச்சிலையிட்டு நீரை வார்த்துச் செல்வதைக் கண்டேன். இன்றும் அவர்தான் இவ்வாறு செய்திருத்தல் வேண்டும் என்றான்.

நாணன் கூறியதைக் கேட்டு திண்ணனார் இவ்வாறு செய்வதுதான் குடுமித் தேவருக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய செய்கைகள் ஆகும் என்பதை உணர்ந்தார். தாமும் அவற்றைக் கடைப்பிடித்து அவ்வழி செல்ல முடிவுகட்டினார். ஏன் நாணா !அப்படி என்றால், நாம் அன்போடு எதைச் செய்தாலும் இறைவன் ஏற்றுக்கொள்வார் போலிருக்கிறதே ! என்று ஒன்றுமறியாப் பாலகனைப் போல் கேட்டார். திடீரென்று திண்ணனாருக்குத் தாம் இறைவனைப் பட்டினி போட்டு விட்டோமோ ? என்ற ஐயமும் எழுந்தது. உண்மையிலேயே இறைவன் பசியுடன் தான் இருப்பார் என்ற முடிவிற்கும் வந்தார் திண்ணனார். குடுமித் தேவரே ! என் இறைவனே ! நீர் இங்கு தனியாக அல்லவா இருக்கிறீர் ? உமக்குப் பன்றி இறைச்சியும், குளிர்ந்த தண்ணீரும் கொடுப்பவர் யார் ? என்று புலம்பத் தொடங்கிவிட்டார். உடனே விரைந்து சென்று, இறைவனுக்கு இறைச்சியும், தண்ணீரும் கொண்டு வரும் நோக்கோடு முன்னால் இரண்டடி எடுத்து வைத்தார். சட்டென்று எதையோ மனதில் எண்ணியவாறு ஓடிவந்து இறைவனைக் கட்டித் தழுவிக்கொண்டு, இந்த இடத்தை விட்டுப் பிரிந்து நான் எங்குமே போகமாட்டேன். ஒரு அடி கூட நான் நகர மாட்டேன். என் ஐயனைப் பிரிந்துருக்கவே முடியாது என்று கூறியவாறு இறைவனை விடாது அணைத்தடியே இருந்தார். அந்த இடத்தை விட்டுப் போகவே அப்பொழுது அவருக்கு மனம் வரவில்லை. அப்படியே சென்றாலும் சற்று அடி எடுத்து வைப்பார். மீண்டும் வருவார். சிவலிங்கத் திருமேனியைத் தழுவுவார். உச்சிமோந்து நிற்பார். பேரன்போடு திரும்பிப் பார்த்து நிற்பார். மீண்டும் ஓடிச்சென்று இறைவனைக் கட்டித் தழுவிக் கொள்வார். இறைவனைக் கட்டித் தழுவி, குழந்தைப் போல் கொஞ்சிக் குழைவார். தாய்ப் பசுவை விட்டுப் பிரிய முடியாமல் துடிக்கும் கன்று போல், திண்ணனார் குடுமித்தேவரை விட்டுப் பிரிய முடியாமல் மனம் வாடினார். பிறை சூடிய பெருமானை நினைத்து, புலம்பிப் புலம்பி கலங்கி நின்ற திண்ணனார், பித்தனாகவே மாறிவிட்டார். இறுதியில் எப்படியோ மனத்தை ஒருவாறு தேற்றிக்கொண்டு வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இறைவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே வழி நடந்தார். திண்ணனாரின் ஒவ்வொரு செயலையும் பார்த்துக் கொண்டே இருந்த நாணன், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ ? என்று மனதில் எண்ணியவாறே திண்ணனாரைப் பின் தொடர்ந்து சென்றான். திண்ணனார் பற்றற்ற பரம ஞானியைப் போல் நடந்து கொண்டிருந்தார். அவரது கால்கள்தான் நடந்து கொண்டிருந்தனவே தவிர, அவரது எண்ணமெல்லாம் காளத்திமலைக் கோயில் மீதுதான் இருந்தது.

பொன் முகலி ஆற்றைக் கடந்து, காடன் எதிரில் வந்து நின்றதுகூட அவரது உணர்வுக்கு அப்பாற்பட்ட செயலாகவே இருந்தது. அந்த அளவிற்கு அம்பலத்தரசரின் அருள் கயிற்றினால் பிணைக்கப்பட்டிருந்தார் திண்ணனார். திண்ணனாரைப் பார்த்த காடன், அன்போடு தலைவரை எதிரில் வந்து தொழுதான்.நாணன் அவனிடம், குடுமித்தேவரை நம் தலைவர் உடும்புப் பிடியாக அல்லவா பிடித்துக்கொண்டு விட்டார் ! இப்போது இங்கு வந்திருப்பது கூட வீட்டிற்கு போவதற்காக அல்ல; குடுமித்தேவருக்குப் பன்றி இறைச்சியைப் பக்குவப்படுத்திக் கொண்டு போவதற்காகத்தான். தெய்வ மயக்கம் தலைக்கேறிக் குடுமித்தேவரோடு ஐக்கியமாகிவிட்டார் என்று கூறினான். நாணன் மொழிந்ததைக் கேட்டு காடன் நிலை குலைந்தான். நமக்கெல்லாம் தலைவராக இருக்கும் இவர் எதனால் இப்படி மாறிவிட்டார் ? என்று தனக்குள் வேதனையோடு கேட்டுக் கொண்டான். நாணனும், காடனும், திண்ணனாரிடம் நாட்டிற்குப் புறப்படலாம் என்று பல தடவைகள் கேட்டனர் ! திண்ணனார் மவுனமாகவே இருந்தார்.இறைவனின் அருள் வெள்ளத்திலே மூழ்கிய திண்ணனார் இவர்களது கூற்றையெல்லாம் சற்றும் செவி சாய்த்துக் கேட்காது இறைச்சியைப் பக்குவப்படுத்து வதிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அம்பினால் பன்றியைக் கிழித்து இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டினார். அவற்றைக் நெருக்கமாக அம்பிலே கோர்த்து, நெருப்பில் நன்றாகக் காய்ச்சித் தக்கபடி பக்குவமாகச் சமைத்தார்.அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துப் பார்த்தார். வாய்க்குச் சுவையாக இருந்த நல்ல இறைச்சித் துண்டுகளை எல்லாம் தேக்கிலையால் செய்த தொன்னையிலே எடுத்துக் கொண்டார்.திண்ணனாரின் இச்செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த காடனுக்கும், நாணனுக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. நாகனையும், தேவராட்டியையும் அழைத்து வந்து தக்க முடிவு காணலாம் என்ற எண்ணத்தோடு, திண்ணனாரிடம் கூடக் கூறலாம் புறப்பட்டனர். கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இறைவன் அன்பு மயக்கத்தில் ஐம்புலனையம் ஒருமைப்படுத்தித் தம்மை மறநந்திருந்த திண்ணனார், இவர்கள் பேசியதையும் கவனிக்கவில்லை; இவர்கள் சென்றதையும் கவனிக்கவில்லை. திண்ணனார் தொன்னையில் பன்றி இறைச்சியை நிரப்பிக் கொண்டார். இறைவனை நீராட்டுவதற்காக பொன் முகலி நீரை வாயில் நிறைய முகந்து கொண்டார். பூசிப்பதற்குத் தேவையான நறுமலர்களைக் கால்களினால் பறித்து வந்து தலைமீது ஏந்திக் கொண்டார். ஒரு கையிலே வில், மற்றொரு கையிலே பன்றி இறைச்சி, வாயில் ஆற்றுநீர், தலையிலே மலர்கள், இதயத்திலே இறைவனைப் பற்றிய சிந்தை ! இப்படியாக, சிவ வழிபாட்டிற்குப் புறப்பட்ட திண்ணனார், காளத்தி மலையை நோக்கி வேகமாக ஓடினார். சிவலிங்கப் பெருமானின் திருச்சன்னிதானத்தை அடைந்தார்.

முதல் வேலையாக அரசார் திருமேனியிலிருக்கும் மலர்களையும், பச்சை இலைகளையும் செருப்புக் காலால் அகற்றினார். வாயிலிருந்த பொன் முகலி ஆற்று நீரை ஆண்டவன் மீது உமிழ்ந்தார். இதயத்திலுள்ள எல்லையில்லா அன்பை அரனார் மீது சொரிவதுபோல தலைமீது சுமந்து வந்து நறுமலர்களை இறைவன் மீது பொழிந்தார். கையில் கொண்டு வந்திருந்த ஊன் நிறைந்த தொன்னையை தெய்வத்தின் திருமுன் பயபக்தியோடு வைத்தார், தேவரும், பூதகணங்களும் முனிவரும் போற்றி வணங்கும் மறைமுதல்வன், முன்னால் வைத்த இறைச்சியை, திருவமுதூட்டச் சித்தம் கொண்டார் திண்ணனார்.ஐயனே ! இந்த இறைச்சியை அம்பிலே கோர்த்து, நன்றாக நெருப்பிலிட்டுப் பக்குவமாகச் சமைத்துள்ளேன். அதிலும் நானே நாவால் சுவைத்துப் பார்த்துச் வையுள்ள இறைச்சியை மட்டும் தங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எம்பெருமானே ! இந்த ஏழையின் ஆசையைப் பூர்த்திசெய்யத் திருவமுது செய்து அருளவேண்டும் என்று மொழிந்தவாறே, ஊனை இறைவனுக்கு அன்போடு ஊட்டத் தொடங்கினார் திண்ணனார். உலகமெங்கும் கங்குல் அரசன் தனது ஆட்சியைத் தொடங்கினான். திண்ணனாருக்குப் பயம் ஏற்பட்டது. ஏற்பட்ட பயமோ தம்மைப்பற்றி அல்ல ! தமது அன்பு அணைப்பிலே அழுந்தி நிற்கும் இறைவனைப் பற்றித்தான்.இரவில் வனவிலங்குகள் வந்து இறைவனைத் துனன்புறுத்தக்கூடுமோ? என்ற பயத்தால் கலங்கிய திண்ணனார், செவ்விய அன்பு தாங்கிய திருக்கையில் வில்லைத் தாங்கிக் காளத்தியப்பரின் அருகினிலேயே அசையாமல் இரவெல்லாம் கண் இமைக்காமல் நேசமுறக் காவல் காத்து நின்றார். மூங்கில்கள் சொரியும் முத்துக்களின் ஒளியாலும், பாம்புகள் உமிழ்ந்த சிவந்த மாணிக்கக் கற்களின் பேரொளியினாலும் ஒளி வீசும் சோதி மரங்களின் விளக்கத்தாலும், குரங்குகள் பொதும்பில் அவைகட்கு விளக்காக வைத்த மணிவிளக்குகளின் ஒளியினாலும், ஐம்புலன்களை அடக்கிய முனிவர்கள்பால் எழும் அரிய பெரிய ஜோதி மயத்தாலும் எங்கும் ஒளிச்சுடர் படர்ந்த வண்ணமாகவே இருந்தன. இருள் புலர்ந்தது. புள்ளினங்கள் ஆர்த்தன. வேள்விச் சாலைகளில் அந்தணர்களின் வேதபாராயணம் ஒலித்தன. ஆலயங்களில் காலை முரசம் முழங்கின. செங்கதிரோன் குணதிசை எழுந்து தனது விரிக்கதிர்களைப் பாரிலே பரப்பினான். அவனது செம்மையான கதிர்கள் திண்ணனார் மீது பட்டன. உறங்காமல் காவம் புரிகின்ற பக்திச் செம்மல் இறைவனைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சி கொண்டார். அப்பொழுது அவரது மனதில் இறைவனுக்குத் திரும்பவும் பசி எடுக்குமே! அதற்குள் விரைந்து சென்று இறைச்சியைக் கொண்டு வரவேண்டும் என்று எண்ணினார். வேகமாகப் புறப்பட்டார்.

திண்ணனார் திருக்கோயிலை விட்டு வெளியே சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வழக்கம்போல் பூசை செய்யும் சிவகோசரியார் என்னும் அந்தணர் வழிபாடு செய்வதற்காக மலரும் நீரும் நறுமணப் புகைப்பொருளும் எடுத்து வந்தார். உள்ளே வந்த அந்தணர் இறைவன் திருமுன்னால் இறைச்சியும் எலும்பும் சிதறிக் கிடப்பதைக் கண்டு பதறினார். ஐயையோ ! இத்தகைய இழிவுச் செயல்களைச் செய்தவர் எவரோ ? என்று நிலத்தில் வீழ்ந்து அலறினார். செய்வதறியாது திகைத்தார். கலங்கினார். வேடர்குலத்தவர்தான் இத்தகைய கொடிய பாதகச் செயல்களைச் செய்திருக்க வேண்டும் ! என்று மனதில் எண்ணியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்தார். பொன் முகலிக்குச் சென்று நீராடித் திரும்பி வந்தார் அந்தணர். என்றும் போல் வேதம் ஓதி சைவாகம முறைப்படி இறைவனை நீராட்டினார். மலரிட்டு நறுமணப் புகை காட்டி வழிபட்டார். மனவேதனையோடு தமது வீட்டிற்குத் திரும்பினார். காளத்திமலையை விட்டுப் புறப்பட்ட திண்ணனார். அரனாருக்குப் பலவகை விலங்குகள் மாமிசத்தைச் சமைத்து அமுதூட்ட எண்ணினார். அதற்காக மான், பன்றி, காட்டுமான் முதலியவற்றை வேட்டையாடினார் திண்ணனார். அதன்பிறகு, முந்தைய நாள் போல், அவற்றை அம்பிற் கோர்த்து தீயிலிட்டு வதக்கி எடுத்தார். சுவைத்துப் பார்த்துக் தொன்னை நிறையச் சேர்த்துக் கொண்டார். தேன் அடைகளை பிழிந்து ஊனை கலந்தார். தலையில், மலரையும், வாயில் நீரையும் எடுத்துக் கொண்டு காளத்தியப்பரின் பசியைப் போக்கப் புறப்பட்டார் திண்ணனார். ஆலயத்தை அடைந்த திண்ணனார் இறைவன் முன்னால், பச்சிலையும், தண்ணீரும் இருப்பது கண்டு திகைத்தார். முன்போலவே அவற்றைச் செருப்பு கால்களால் சுத்தம் செய்தார். வாயில் இருந்த தண்ணீரை உமிழ்ந்து இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தலையிலிருந்து மலரை உதிர்த்து அர்ச்சனை புரிந்தார். அன்போடு அமுதூட்டி உளம் மகிழ்ந்தார். இப்படியாக தினமும் திண்ணனாரும், சிவகோசரியாரும் மாறி மாறி சிவபூஜை செய்து வரலாயினர்.திண்ணனாரின் ஊன் அமுதும் அன்பும் கலந்த பூசையும், சிவகோசரியாரின் சிவாகமமுறை வழிபாடும் நாள்தோறும் இடைவிடாமல் நடந்த வண்ணமாகவே இருந்தன. இதற்குள், நாணனும், காடனும் ஊருக்குத் திரும்பி நாகனிடம், திண்ணனாரின் நிலையைப் பற்றி விளக்கிக் கூறினர். நாகன் அரவம் தீண்வினாற்போல் துடித்தான். மகனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்துவிட்டது என்று அஞ்சி நடுங்கினான். நாகன் தேவராட்டியையும், தத்தையயும் அழைத்துக் கொண்டு, திண்ணனாரைப் பார்க்கக் காளத்தி மலைக்கு புறப்பட்டான். திண்ணனார் குடுமித்தேவரை அணைந்த வண்ணம் இருந்தார். அப்பொழுது அங்கு வந்த நாகனும், தத்தையும் திண்ணனாரிடம், பல வழிகளில் பேசிப் பார்த்தார்கள். பழகிப் பார்த்தார்கள். அவரைப் பிடித்திருக்கும் சாமிப் பைத்தியம் மட்டும் விட்ட பாடில்லை என்பதை உணர்ந்து வருந்தினார்கள். தேவராட்டிøயும் முயற்சித்துத் தோல்வியுற்றாள். நாகனும் தத்தையும் மனம் வருந்தினர். மகனைத் தன்னோடு அழைத்துச் செல்வது என்பது இயலாத காரியம் என்பதைத் திடமாகக் கொண்டனர். இறைவனது கருணைக் கயிற்றிலே கட்டுண்ட திண்ணனார் இவர்கள் முன்னால் வெறும் ஜடமாகவே காணப்பட்டார். அவர்கள் திண்ணனாரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம் என்று வருத்தத்துடன் வந்த வழியே திரும்பினார்கள். குடுமித்தேவருக்கு வேடர் வழிபாடும், வேதியர் வழிபாடும் நான்கு நாட்களாகக் கலந்து கலந்து நிகழலாயின. ஐந்தாம் நாள் வந்தது. அன்றும் வழக்கம்போல், திண்ணனார் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் வந்த சிவகோசரியார் இறைவன் முன்னால் தினமும் காலை தான் வரும்பொழுதெல்லாம் இறைச்சி சிதறிக் கிடப்பதை எண்ணி மனம் தாளாமல் இறைவனிடம் இறைஞ்சினார்.

எம்பிரானே ! தம்பிரானே ! திருக்காளத்தி அப்பனே ! அபச்சாரம். தினம் தவறாது எலும்பையும் இறைச்சியையும் உமது திருமுன்னால் வாரி இறைத்து மாசுபடுத்துவது இன்னாரென்று யான் அறியேனே !தேவரீர் ! திருஉள்ளம் கனிந்து இத்தகைய கொடுமையை இனியும் நேராத வண்ணம் எம்மைக் காத்தருள வேண்டும் என்று பரமனிடம் பிரார்த்தித்தபடியே வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றார். அன்றிரவு அவரது கனவில் செஞ்சுடர் வண்ணர் எழுந்தருளினார்.இச்செயலை யாரோ வேடுவன் வேண்டுமென்றே, என்னை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகச் செய்கிறான் என்று மட்டும் எண்ணிவிடாதே. அவனது வடிவமெல்லாம் எப்பொழுதும் நம் பக்கம் அன்பு செலுத்தும் தன்மையானதே.அவனுடைய அறிவும் உணர்வும் நம்மை அறியும் அறிவே ! அவனுடைய செயல் ஒவ்வொன்றும் நமக்கு இனிமை பயக்கக்கூடியதாகும். அவனது செருப்புக் கால்கள் என் மீது தேய்த்துச் சுத்தப்படுத்தும் போது எனக்கு மழலைகளின் சேவடிகள் தடவிச் செல்வது போன்ற இன்பப் பெருக்கை ஏற்படுத்துகிறது. கங்கை, காவிரி முதலிய தூய நதிகளின் நீரைவிடத் தூய்மையான அவன் தனது வாயினின்றும் உமிழ்கின்ற திருமஞ்சன நீர். அவனது முடியிலிருந்து உதிர்ந்து விழும் நறுமலர்கள், அவன் எம்மீது கொண்டுள்ள உயிருக்கு உயிரான அன்பு மலர்ந்து, நம்மீது நழுவி விழுவதைப் போலாகும், அம்மலர்களுக்குத் தேவதேவாதியர்கள் இடும் பாரிஜாத மலர்கள் கூட ஒவ்வா. அவன் ஊட்டும் இறைச்சி மறைவிதிப்படி அளிக்கும் அவிர்பாகத்தைவிடச் சிறந்ததாகும். வேத முனிவர்கள் ஓதும் தோத்திர நாமங்களை விட, அவன் அகம் குளிர அன்புருகிக் கூறும் மொழிகளே மிகமிக நல்லவை; எனக்கு இன்பம் தரத்தக்கவை. அவனது இத்தகைய உயர்ந்த அன்புச் செயலை உனக்குக் காட்டுகிறேன். இதற்காகக் கலங்காதே என்று திருவாய் மலர்ந்தார் எம்பெருமான் ! சிவகோசரியார் கனவு கலைந்து திடீரென்று விழித்தெழுந்தார். எம்பெருமானைப் போற்றி நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதன் பின்னர் உறக்கம் எப்படி வரும் ! கனவில் கண்ட பெருமானின் திருக்கோலத்தை எண்ணியபடியே விடியும்வரை விழித்திருந்தார். அன்று ஆறாம் நாள் ! வழக்கம்போல் திண்ணனார் வேட்டைக்குப் புறப்பட்டார். அந்தச் சமயத்தில் அந்தணர் மன நிறைவோடு திருக்கோயிலுக்கு வந்தார். வழக்கப்படி வேதாகம வழிபாடுகளைச் செய்தார். அதன் பிறகு இறைவன் கனவில் எழுந்தருளி மொழிந்ததற்கு ஏற்பச் சிவலிங்கத்தின் பின்புறமாக ஓரிடத்தில் மறைந்து கொண்டார். வழக்கம்போல், தொன்னையில் இறைச்சியும், தலையில் நறுமலரும், வாயில் பொன்முகலி ஆற்றுத் தெளிந்த நீரும் எடுத்துக் கொண்டு திண்ணனார் திருச்சன்னிதிக்குள் வந்தார். திண்ணனாரின் பக்தியை உலகோர்க்கு உணர்த்தவும், இறைவன் மீது கொண்டுள்ள அன்பை சிவகோசரியாருக்குத் தெரியப்படுத்துவதற்காகவும் வேண்டி குடுமித் தேவர், அந்த ஆனந்தமலை மீது ஓர் அற்புத விளையாடலைத் தொடங்கினார். எம்பெருமான், தமது சிவலிங்கத் திருமேனியில் வலக்கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைப் போல் காட்டினார்.

சிவபெருமானுடைய திருவிழிகளிலிருந்து குருதி கொட்டுவது கண்டு மதிமயங்கிய திண்ணனார் செயலிழந்தார். வாயிலிருந்த பொன்முகலியாற்று நீர் கீழே விழுந்து சிதறியது. வில்லும் கீழே நழுவின. குடுமியில் சுமந்து வந்த நறுமலர்கள் சோர்ந்தன. அருள் மிகுதியால் நிலை தளர்ந்த திண்ணனர் பதைபதைத்துக் கீழே விழுந்தார். அவரது உள்ளமும், உடலும் நடுங்கியது. நடுக்கத்தால் உடல் வியர்த்தது. அவர் கண்ணீர் வடித்தார் ! கதறினார் ! திடுக்கிட்டு எழுந்தார். எம்பெருமானின் குருதி வழியும் திருக்கண்ணை தமது கையால் துடைத்தார். குருதி மட்டும் நின்றபாடில்லை. செய்வதறியாது, செயல் மறந்து நிலத்தில் வீழ்ந்தார். மீண்டும் எழுந்தார்.எம்பெருமானுக்கு இத்தகைய கொடிய துன்பத்தை செய்தது யார்? காட்டு விலங்குகளானாலும் சரி, மாறாக வேடர்கள் ஆனாலும் சரி, என் ஐயனுக்கு இப்படியொரு துன்பத்தைக் கொடுத்ததை மட்டும் என்னால் பொறுக்கவே முடியாது. இப்பொழுது பழி வாங்கி வருகிறேன் என்று கர்ஜித்த திண்ணனார் கோபத்துடன் எழுந்தார். வில்லும் அம்பும் எடுத்தார். வில்லில் நாணேற்றி குன்றின் சாரலில் அங்குமிங்குமாக நெடுந்தூரம் தேடித் தேடி அலைந்தார். தேடிய இடங்களிலெல்லாம் விலங்குகளையோ வேடர்களையோ காணாது வேதனையோடு திரும்பி வந்தார்.எம்பெருமானின் இரத்தம் சிந்தும் விழிகளைப்ப பார்த்து ரத்தக் கண்ணீர் வடித்தார். குடுமித்தேவரை இறுகக் கட்டித் தழுவினார். அன்பும் அருளும் இணைந்தன. பக்தியும், சக்தியும் கலந்தன.வேடர்கள் மூலிகைகளைக் கொண்டு புண்களை ஆற்றுவது திண்ணனார் நினைவிற்கு வந்தது. உடனே காளத்தி மலை அடிவாரத்திற்குச் சென்று தமக்குத் தெரிந்த சில பச்சிலை மூலிகைகளைப் பறித்து வந்தார். அப்பச்சிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாற்றை இறைவன் திருவிழிகளில் பிழிந்தார். அப்படியும் பெருகி வந்த இரத்தம் மட்டும் சற்றுகூட நிற்கவே இல்லை.அந்த சமயத்தில், ஊனுக்கு ஊனிடல் வேண்டும் என்ற ஆன்றோர்களின் சித்தாந்த மொழி அவரது சிந்தைக்கு எட்டியது.எம்பெருமானுடைய விழிக்கு நேர்ந்த விபத்தைத் தீர்ப்பதற்கு, தம்முடைய விழிகளில் ஒன்றைத் தோண்டி எடுப்பது இரத்தம் சிந்தும் இறைவனின் திருவிழிகளில் வைப்பது என்ற கருத்தினைக் கொண்டார் திண்ணனார். சற்றும் தாமதிக்காமல் கூரிய அம்பினால் தமது வலக்கண்னைத் தோண்டி எடுத்தார். காளத்தி அப்பனின் ரத்தம் வழியும் வலக்கண்ணில் அப்பினார் திண்ணனார். அக்கண்ணில் இருந்து ரத்தம் வழிவது நின்றது. திண்ணனாரின் கண்களிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. அவர் அதைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. வேதனையைப்பற்றி சற்றுகூட எண்ணிக் கதறவில்லை. தாம் தக்க சிந்தனையோடு செய்த செயல் பரமனின் கண்களைக் குணப்படுத்திவிட்டதே என்ற களிப்பில் மலையை ஒத்த தமது தோள்களைத் தட்டிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். திண்ணனாரின் தெளிந்த பேரன்பின் பெருக்கினை மேலும் சோதிக்தொடங்கிய சிவனார். தமது இடக்கண்ணிலிருந்தும் ரத்தம் வழியுமாறு செய்தார்.

ஆனந்தக் கூத்தாடிக் களித்து நின்ற திண்ணனார் இறைவனின் இடக்கண்ணிலிருந்து ரத்தம் பெருகி வருவது கண்டு, அப்படியே அசைவற்று நின்றார். கண்ணுக்குக் கைகண்ட மருந்தைக் கண்ட பின்னர் திண்ணனார் எதற்காக கண்ட கண்ட மூலிகைகளையும் பச்சிலைகளையும் தேடி அலையப் போகிறார் ! அக் கண்ணிலிருந்து வரும் இரத்தத்தையும் தடுத்து நிறுத்த அப்பொழுது தமது மறுகண்ணையும் அம்பினால் தோண்டி எடுத்து அப்புவது என்ற முடிவிற்கு வந்தார். மறுகண்ணையும் எடுத்துவிட்டால், இறைவனது கண் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுமே என்று நினைத்து தமது காலை, இறைவனின் குருதி கொட்டும் இடக் கண்ணருகே பலமாக ஊன்றிக் கொண்டார்.அம்பை எடுத்தார். அம்பு எடுத்த அன்பர், காளத்தியப்பரை அன்பின் பெருக்கிலே ஒருமுறை பார்த்தார். இந்தக் கண்ணையும் பறித்து இறைவனுக்கு வைத்து விட்டால் பிறகு இறைவனைக் கண்ணால் பார்க்கவே முடியாதே - அன்பு வடிவமான இறைவனின் அருள் முகத்தைக் காணவே முடியாதே ? என்று எண்ணினாரோ என்னவோ, இறைவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.பார்த்துப் பார்த்து மனம் உருகினார்.இனிமேல் என்றும், எப்பொழுதும், ஞானக்கண்களால் இறைவனைக் கண்டுகளிக்கப் போகும் திண்ணனார். தமது ஊனக் கண்களைப் பற்றி கவலைப்படவில்லை. அம்பை எடுத்தார். இடக்கண்ணில் ஊன்றி கண்ணைத் தோண்டப் போனார். இதற்கு மேல் காளத்தியப்பர். தமது அன்புத் தொண்டனைத் துன்புறுத்த விரும்பவில்லை. அருள் வள்ளலார், திண்ணனாரின் அன்பிற்கு அடிமையானார். அன்பர்களைக் காக்கும் அம்பத்தரசன் - கருணைக் கடலான சந்திரக்காலாதரன் - வேதமுதல்வன் திண்ணனாரைத் தடுத்தாட் கொண்டார். எம்பெருமான் தமது திருக்கையால் திண்ணனாரின் கரத்தைப் பற்றினார்.நிற்க கண்ணப்ப ! நிற்க கண்ணப்ப ! அன்புருவே நிற்க ! என்று தமது அமுத வாக்கால் திருவாய் மலர்ந்து அருளினார் எம்பெருமான்.தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். ஆலயம் எங்கும் புத்தொளி பிறந்தது. வேதம் முழங்கியது. திண்ணனார் இறைவனின் அருளிலே அன்பு வடிவமாய், பேரின்பப் பெருக்கெடுத்து நின்று கொண்டிருந்தார்.இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவகோசரியார் திண்ணனாரின் பக்திக்கு தலை வணங்கினார். இறைவன் திருவருளினாலே திண்ணனார், இழந்த கண்ணைப் பெற்றார். கண் பெற்றதோடு கண்ணப்பர் என்ற திருநாமத்தையும் பெற்றார்.கண்ணப்பரின் உண்மையான பக்தியையும், இறைவனின் திருவருளையும் என்ணிப் பார்த்தார் அந்தணர். ஆயுள் எல்லாம் அரனாரை வழிபட்டேன்; என்னால் அவரது அருளைப்பெற முடியவில்லை. ஆறுநாள் பூஜையிலே ஆண்டவனின் அருகிலேயே இருக்கும் இன்பப் பேற்றினைப் பெற்றார் திண்ணனார். அதற்குக் காரணம் வெறும் பூஜை மட்டுமல்ல ! உண்மையான அன்புதான். அன்வே சிவமானார். அன்பில்லாத வழிபாட்டால் ஒரு காரியமும் நடக்காது. இறைவனின் அருளைப் பெறவும் முடியாது.இம்மையில் யாம் முக்தி பெற, இனிமேல் காளத்தியப்பரோடு கண்ணப்பரையும் சேர்த்து வழிபடுவதே சிறந்தது ! என்று உறுதிபூண்டார் வேதியர். நிலத்தில் வீழ்ந்து வணங்கினார். அருந்தவத்தோர்க்கும் கிட்டாத பரம்பொருளாகிய எம்பெருமான் திருவாய் மலர்ந்து, ஒப்புயர்வற்ற கண்ணப்பா ! நீ எமது வலப்பக்கத்திலே எப்பொழுதும் நிற்பாயாக  ! என்று திருவருள் புரிந்தார்.திண்ணனார் கண்ணப்பர் ஆனார். கண்ணப்பர் பரமனுக்குக் கண்கொடுத்து பக்திக்குக் கண்ணாக விளங்கினார்.

```````````````````````````````````````````````````````````````````````````````

                     18.கலிய நாயனார் : செக்கார்

ஓங்கிய புகழுடைய தொண்டை நன்நாட்டில், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புற்று விளங்குகின்ற திருத்தலம் திருவொற்றியூர். இங்குள்ள சக்கரப்பாடித் தெருவில் எண்ணெய் வாணிபம் புரியும் வணிகர் குடியில் கலியனார் என்பவர் பிறந்தார். சைவ சமயத்தில் சிறப்புற்று விளங்கிய இச்செம்மல் சிவபெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரியும் அருள் நெறியில் நின்றார். தமது செல்வத்தைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தி வந்தார் நாயனார். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள படம்பக்கநாதருடைய கோயிலில் உள்ளும் புறமும் ஆயிரக்கணக்கான விளக்குகளை இரவும் பகலும் இடுகின்ற பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்திருந்தார் கலிய நாயனாரது பக்தியின் திறத்தினை உலகிற்கு <உணர்த்தும் பொருட்டு உமைபங்கர் அவருக்கு வறுமையைத் தோற்றுவித்தார். வறுமையையும் ஒரு பெருமையாக எண்ணிய நாயனார் கோயில் திருப்பணிக்காகக் கூலி வேலை செய்து நாலு காசு சம்பாதிப்பதில் ஈடுபடலானார். இவர் தமது குலத்தவரிடம் எண்ணெய் வாங்கி விற்று பொருளீட்டி வந்தார். செக்கு ஓட்டி அன்றாடம் கூலி வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அதில் கிட்டும் வருவாயைக் கொண்டு கோயில் திருப்பணியைத் தொடர்ந்து இனிது நடத்தி வந்தார். சில காலத்துக்குப் பின் அக்கூலி வேலையும் இல்லாமற் போகவே நாயனார் வீட்டிலுள்ள பண்டங்களை ஒவ்வொன்றாக விற்று பொருள் பெற்றார். இறுதியில் மனையை விற்று, மாண்புடைய மனைவியையும் விற்க முன்வந்தார்.
மனைவியாரை பெற்றுக்கொண்டு பொன் கொடுக்க ஆளில்லாமை கண்டு செய்வதறியாது திகைத்தார்; சித்தம் கலங்கினார் அடிகளார். மன வேதனை தாளாமல் மனை நலமிக்க மங்கை நல்லாளையும் அழைத்துக் கொண்டு படம்பக்கநாதர் திருக்கோயிலை அடைந்தார். எம்பெருமானின் திருமுன் பணிந்தெழுந்து, ஐயனே! திருவிளக்குப் பணி நின்று விடுமாயின் இவ்வெளியேன் மாள்வது திண்ணம். அம்பலத்து ஒளிவிடுகின்ற அகல் விளக்குகளை எண்ணெய் வார்த்து ஏற்ற முடியாது போனால் நான் உதிரத்தை வார்த்து விளக்கேற்றுவேன் என்று மகிழ்ச்சி பொங்க மொழிந்தார். திருவிளக்குகளை முறையோடு வரிசையாக அமைத்தார். எண்ணெய்க்குப் பதிலாக உதிரத்தைக் கொடுக்க உறுதிபூண்டிருந்த கலியநாயனார் வாள் எடுத்து வந்து தமது கழுத்தை அரியத் தொடங்கினார். திருத்தொண்டர்களை தடுத்தாட்கொள்ளும் தம்பிரான் எழுந்தருளி நாயனாரது திருக்கரத்தைப் பற்றினார். ஆலயத்துள் பேரொளி எழுந்தது. திருவிளக்குகள் எண்ணெய் வழியப் பிரகாசமாக ஒளிபரப்பின. எங்கும் பிறைமுடிப் பெருமானின் அருள் ஒளி நிறைந்தது. நாயனார் கழுத்தில் அரிந்த இடம் அகன்று முன்னிலும் உறுதி பெற்றது. நாயனாரும் அவரது மனைவியாரும் மெய்யுருகி நின்றனர். சடைமுடிப் பெருமானார் அன்னையுடன் அலங்கார விடை மீது எழுந்தருளி அன்புத் தொண்டர்க்கு காட்சி கொடுத்தார். கலிய நாயனாரும் அவரது மனைவியாரும் எம்பெருமானை நிலமதில் வீழ்ந்து பலமுறைப் பணிந்து எழுந்தனர். இறைவன் கலிய நாயனாருக்குப் பேரின்பப் பெருவாழ்வு அளித்து இறுதியில் சிவபதம் புகுந்து சிறப்புற்றிருக்குமாறு திருவருள் செய்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                       19.கழறிற்ற்றிவார் : அரசர்





கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன்

மலைநாடு எனப் புகழப்படும் வளமிக்கச் சேர நாட்டின் ஒப்பற்ற தலைநகரம் கொடுங்கோளூர். இந்நகருக்கு மாகோதை என்று ஒரு பெயரும் உண்டு. இங்குள்ள கோயிலின் பெருநாமம் திருவஞ்சைக் களம் என்பதாகும். எம்பெருமானுக்கு அஞ்சைக் களத்தீசுரர் என்று பெயர். அம்மையாரின் பெயர் உமையம்மை. இத்தலத்திலுள்ள புண்ணிய தீர்த்தத்துக்கு சிவகங்கை என்று பெயர். அந்நகர் செய
்த நற்றவப் பயனாய் சேரர் குலம் தழைக்க அவதாரம் செய்தார் பெருமாக் கோதையார். மாகோதையார் மன்னர்க் குலத்திற்குரிய படைக்கல பயிற்சியைக் கற்காமல் கண்ணுதலார் கமல மலர்ப்பாதங்களைப் பற்றுவதற்கான சிவ மார்க்கங்களை உணர்ந்து சமய நூல்களைக் கற்று வந்தார். அரவணிந்த அண்ணலின் சிந்தனையில் அரச போகத்தையும், அரண்மனை வாழ்வையும் வெறுத்தார். சிவனார் எழுந்தருளியிருக்கும் திருவஞ்சைக் களம் என்னும் திருத்தலத்தை அடைந்து கோயிலருகே மாளிகையொன்று அமைத்துக்கொண்டு சிவத்தொண்டு புரிந்து வரலானார். சித்தத்தை சிவன்பால் வைத்துச் சிந்தை குளிர்ந்தார். ஒவ்வொரு நாளும் வைகறைத் துயில் எழுவார். தூய நீராடுவார். திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றை முறையோடு வேதநெறிப்படி அணிந்து கொள்வார். மலர்வனம் செல்வார். வழிபாட்டிற்கு உகந்த நறுமலர்ச் செடி, கொடிகள் வளர, பாத்தி வெட்டிகளையெடுப்பார். நீர் பாய்ச்சித் திருப்பணிகள் பல செய்வார். மாலையில் மலரக் கூடிய மலர் வகைகளையும், காலையில் மலர்ந்த மலர்களையும், வகை வகையாகப் பறித்துக் கொள்வார். வித விதமான மாலைகள் தொடுத்து கோயிலுக்குள் செல்வார். கோயிலைக் கூட்டி மெழுகி கோமய நீரால் சுத்தம் செய்வார்.

இறைவனின் பாத கமலங்களில் தாம் தொடுத்து முடித்துப் பூமாலைகøளைச் சாத்தி தமிழ்த் தேனால் எடுத்து முடித்த திருப்பதிகப் பாமாலைகளால் போற்றுவார். தம்மையே மறந்து வழிபடுவார்! இவ்வாறு இப்பெருமாக் கோதையார் திருவஞ்சைக் களத்துப் பெருமானுக்குத் தொண்டுகள் பல புரிந்து வரும் நாளில் கொடுங்கோளுரிலிருந்து அரகோச்சி வந்த செங்கோற்பொறையன் என்னும் மன்னன் பிறவிப் பெருங்கடலைக் கடக்கக் கருதினான். மன்னன் பதவி என்ற பட்டத்தை உதறினான். துறவி என்ற பட்டத்தைத் தாங்கினான். நாடு களைந்தான்; காடு புகுந்தான்; அருந்தவம் ஆற்றத் தொடங்கினான். அதன் பிறகு அமைச்சர்கள், நன்கு ஆராய்ந்து பெருமாக்கோதையாரையே அரசனாக்குவது என்ற முடிவிற்கு வந்தனர். ஒருநாள் அமைச்சர்கள் அரச மரியாதையுடன் மங்கல வாத்தியங்கள் முழங்கத் திருவஞ்சைக் களத்தை அடைந்தனர். பெருமாக் கோதையாரை வணங்கி அரசாட்சியை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். அமைச்சர்கள் மொழிந்ததைக் கேட்டு, திருமாக் கோதையார் சற்று சித்தம் கலங்கினார். அரசு கட்டிலில் அமர்வது அரனார் திருவடித் தொண்டிற்கு இடையூறு ஏற்படுத்துவதாகும். அரண்மனை வாழ்வு அரவணிந்த அண்ணலை மறந்திருக்கச் செய்யும். மாய சக்தி படைத்ததாகும் என்றெல்லாம் பலவாறாக தமக்குள் எண்ணினார். அமைச்சர்களைப் பார்த்து, அமைச்சர் பெருமக்களே! யான் அரசாட்சி ஏற்பதென்பது எமது சிவத்தொண்டிற்கு பாதகமான செயலாகும். அறிந்தும் தவறு செய்யலாமா? அறம் வளர்க்கும் செங்கோலை நான் தொட வேண்டுமென்றால், தோடுடைய செவியன் திருவருள் எனக்குக் கிட்ட வேண்டும். இறைவன் திருவருளினால் மட்டுமே என்னால் மகுடத்தைச் சூட்டிக்கொள்ள முடியமே அன்றி, வேறு வழியே கிடையாது என்றார் அமைச்சர்களும் சம்மதித்தனர்.

பெருமாக்கோதையார் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று எம்பெருமானைப் பணிந்து தமது விண்ணப்பத்தை பகர்ந்தார். அப்பொழுது ஆலயத்திலே ஒரு பேரொளி பிறந்தது; எம்பெருமானின் அருள்வாக்கு எழுந்தது. சேரர் குலக்கொழுந்தே! வருந்தற்க! நீ அரச பதவியை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வாயாக! உலகிலுள்ள உயிர்களுக்கு என்றும்போல் தொண்டு செய்து வருவாயாக. விலங்குகள், பறவைகள் போன்ற மற்றெல்லா ஐந்தறிவு படைத்த உயிர்களும் பேசக் கூடிய பேச்சை அறியக்கூடிய ஆற்றலையும் உனக்கு அளித்தோம். அரசின் வல்லமையையும், பெரும் கொடையையும், ஆயுதம், வாகனம் முதலிய அரசர்க்குரியனவற்றையும் உனக்கு அளிக்கிறோம். எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய அத்தனைப் பேறுகளையும் பெற்றார் பெருமாக்கோதையார். திருமாக்கோதையார் அமைச்சர்களிடம், அரசை ஏற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்தார். அனைவரும் பெருமகிழ்ச்சி பூண்டனர். பெருமாக்கோதை எம்பெருமான் திருவருளோடு கொடுங்கோளூரை அடைந்து , நாளும் கோளும் நன்னிலையுற்ற ஓர் பொன்னாளில் மங்கலச் சடங்குகள் நடைபெற இம்மைக்கும் மறுமைக்கும் பொருந்தக் கூடிய பொன் மணிமுடியினைச் சூட்டிக் கொண்டார். பெருமாக் கோதையார் சேரமான் பெருமாள் ஆனார். மணிமுடிப் பெருவிழா சிறப்புற முடிந்ததும் சேரமான் பெருமான் திருவஞ்சைக்களம் கோயில் சென்று முடிபட நிலத்தில் வீழ்ந்து பெருமானை வணங்கினார். பட்டத்து யானை மீது அமர்ந்து பரிசனங்கள் பணிபுரியச் சிறப்புடன் மேளதாளங்களும், வேத கோஷங்களும் இன்னிசைகளும் முழங்க திருநகரை வலம் வந்தார். அப்பொழுது வண்ணான் ஒருவன் உவர்மண் சுமந்தவாறு வந்து கொண்டிருந்தான். உவர்மண் மேனியில் பட்டு மழை நீரோடும், வியர்வையோடும் கலந்து உலர்ந்து காணப்பட்டது.

பவனி வரும் சேரமான் பெருமான் அவ்வண்ணானின் வெண்ணிக் கோலத்தைக் கண்டு, திருவெண்ணீற்றுப் பொலிவுடன் எழுந்தருளும் சிவனடியார் திருக்கோலத்தை நேரில் காண்பது போல் நினைத்து மகிழ்ந்தார். யானையின் மீதிருந்து கீழே இறங்கினார். வண்ணான் அருகே சென்று அவனைத் தொழுது நின்றார். வண்ணான் மன்னருடைய செயலைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினான். அவன் உவர்மண் பொதியைக் கீழே போட்டுவிட்டு, மன்னரின் பாதங்களைப் பணிந்து, அடியேன் அடிவண்ணான் என்றான். அவன் மொழிந்தது கேட்டு மன்னர் மகிழ்ச்சிப் பெருக்கோடு, அடியேன் அடிச்சேரன் ! நீவிர் திருவெண்ணீற்றை நினைப்பித்தீர்! வருந்தாது செல்வீர்களாக! என்று விடையிறுத்தார். அடியார் மட்டு அரசர் கொண்டுள்ள அளவற்ற அன்பினைக் கண்டு அமைச்சர்களும், மெய்யன்பர்களும் அதிசயித்து அஞ்சலி செய்து வாழ்த்தினர். மன்னர் மனநிறைவோடு மாடவீதியையும் கூட கோபுரத்தையும் கடந்து, தமது பொன் மாளிகைக்கு எழுந்தருளினார். வைரச் சிம்மாசனத்தின் மீது வெண்கொற்றக் குடை நிழலில் அமர்ந்தார். ஆண்களும், பெண்களும், அன்பர்களும், அடியார்களும் வாசனைப் பொடிகளையும், மலர்களையும் தூவி மன்னரை வணங்கினர். சேரமான் பெருமாள் வாழ்க! என்று மக்கள் எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. சேரமான் பெருமான் நாயனார் அரசோச்சும் பொற்காலத்தில் இவரிடம் பாண்டியரும், சோழரும் பெரும் நண்பர்களாயிருந்தனர். மனுநீதி முறைப்படி அரசோச்சி வந்த சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பல தேசத்துச் சிற்றரசர்கள் கப்பங்கட்டி வந்தனர். அகத்தும், புறத்தும் பகைமையை அறுத்து அறநெறி காட்டும் சிவநெறியை வளர்த்து அரசாட்சி நடத்தி வந்த இவரது காலத்தில் சைவம் தழைத்தது. பக்தி பெருகியது; எங்கும் சுபிட்சம் நீடித்தது.

போற்றுகின்ற பேரரசினால் பெறுகின்ற பயனும், அருந்தவப் பேறும், சீரும், செல்வமும், எல்லாம் ஆடுகின்ற அம்பலவாணரின், காக்கின்ற கமலமலர்ப் பாதங்களே என்று கருத்தில் கொண்டார் சேரமான் பெருமான்! எம்பெருமானைத் தினந்தோறும் மணமிக்க மஞ்சள் நீர், சந்தனம், நறும்புகை, தூப தீபம், திருவமுது முதலிய வழிபாட்டுப் பொருட்களுடன் சிவாகம முறைப்படி மன்னர் வழிபட்டு வந்தார். இவ்வாறு வழிபாடு புரிந்து வரும் தொண்டரின் பக்திக்கு கட்டுப்பட்ட அம்பலவாணர் அடியாருக்கு அளவிலா இன்பம் பெருக வழிபாட்டின் முடிவில் தமது அழகிய காற்சிலம்பின் ஒலியினைக் கேட்டு இன்புறுமாறு செய்தார். ஒருமுறை மதுரையம்பதியில் பாணபத்திரன் என்று ஒரு புலவன் வாழ்ந்து வந்தான். இவன் எந்நேரமும் இன்னிசைப் பாடலால், அன்போடு சிவனை வழிபட்டு வந்தான். அவனது இசையில் சிந்தை மகிழ்ந்த பெருமான், தம்மைப் போற்றிவரும் பைந்தமிழ்ப் புலவன் பாணபத்திரனின் வறுமையைப் போக்கிப் பெரும் செல்வத்தை அவனுக்கு அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் பாணபத்திரன் திருக்கோயிலுள் துயில் கொண்டபோது பகவான் கனவிலே எழுந்தருளினார். திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள், பாணபத்திரா! அன்பால் என்பால் பாடிப் பணியும், உன்பால் பற்றியுள்ள வறுமையைப் பனிபோல் விலகச் செய்ய எப்பொழுதும் உன்போல் என்பால் அன்புடைய சேரமானுக்கு ஒரு ஸ்ரீமுகம் எழுதித் தருகின்றோம். காலம் கடத்தாமல் அக்காவலனைச் சென்று கண்டு, வறுமை நீங்கி வருவாயாக! என்று ஆணையிட்டு திருவோலையைத் தந்தருளினார். பாணபத்திரன் கண் விழித்தெழுந்து, கண்ணுதலார் தந்தருளிய திருவோலையைக் கண்களிலே ஒற்றிக் கொண்டார்.

அத்திருவோலையைச் சென்னிமீது சுமந்துகொண்டு கொடுங்கோளூரை அடைந்தார். சேரர் குல மாமணியைக் கண்டு வணங்கினார். சங்கப் புலவராகிய சோமசுந்தரக் கடவுள் தந்தருளிய திருமுகப் பாசுரத்தைக் கொடுத்தார் பாணபத்திரன்! அதனை வாங்கிக்கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், அடியேனையும் ஒரு பொருளாக எண்ணி எம்பெருமான் திருமுகம் கொடுத்தருளினாரே! எம்பெருமான் திருவருள்தானே! என்னே! புலவர் பெருந்தகையே ! எம்மை மதித்து வந்து உமது ஆற்றலைத்தான் என்னெற்று போற்றுவேன் என்று பூரிப்போடு பகர்ந்தார். மதிமலி புரிசை மாடக்கூடல் எனத் தொடங்கும் திருமுகப் பாசுரத்தைப் படித்தார் சேரமான் பெருமாள். நமது அரண்மனைக் களஞ்சியத்திலுள்ள பல்வகையான நவநிதிகள் முழுவதையும் ஒன்று விடாமல் ஏற்றபடி பெரும் பொதியாகக் கட்டி எடுத்து வாருங்கள் என்று அமைச்சர்களுக்கு ஆணையிட்டார். அமைச்சர்கள் பொதி பொதியாக நவநிதிகளைக் கொண்டு வந்து குவித்தனர். மன்னர் பாணபத்திரனை வணங்கி நிதிகளையெல்லாம் வாரி வாரி வழங்கினார். அத்தோடு திருப்தியடையாமல், மன்னன் அப்புலவனிடம், யானை, குதிரை, பசுக்கள் முதலியவைகளையும், எமது அரசாட்சியையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பணிவன்போடு பகர்ந்தார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரன், வேந்தரின் உயர் குணத்திற்குத் தலைவணங்கினான். பொங்கி வந்த எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கில் அகமும் முகமும் மலரத் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்டான். அரசே! தாங்கள் கொடைவள்ளல் மட்டுமல்ல; அடியார்களின் நெஞ்சத்திலே கோயில் கொள்ளும் காவலன், குவலயம் போற்றும் மெய்யன்பர். இவ்வடியேன் தேவையானவற்றை எடுத்துக் கொண்டோம். அரசாட்சி முதலியவற்றைத் தாங்களே கைக்கொண்டு ஆளுதல் வேண்டும் என்பதுதான் ஆலவாய் அண்ணலின் ஆணை என்று விடை பகர்ந்தார் பாணபத்திரன்.

அரசர் புலவரை ஒரு யானை மீது அமரச் செய்து தாம் அளித்த விலையில்லாச் செல்வங்கள் அனைத்தையும் கரிமா முதலியவற்றின் மீது ஏற்றி வழி அனுப்பி வைத்தார். சேரப் பேரரசு பாணபத்திரன் எல்லையைத் தாண்டிச் செல்லும்வரை தொடர்ந்து சென்று அன்போடு வழி அனுப்பி வைத்தார். பாணபத்திரனும் மதுரை சென்று மட்டற்ற மகிழ்ச்சியோடு மனையறத்தை வளர்த்ததோடு சங்கத் தமிழையும் வளர்த்தார். இவ்வாறு வியக்கத்தக்க முறையில் அரசாண்டு வந்த சேர மன்னர் வழக்கம்போல் ஆலயப் பணியையும் தவறாமல் நடத்தி வந்தார். ஒருநாள் நாயனார் சிவ வழிபாட்டை முடித்ததும் வழக்கமாகக் கேட்கும் பரமனின் பாதமணிச் சிலம்பொலி கேட்கவில்லை. மன்னர் வருந்தினார். கண்களில் நீர் வழிய, கரமிரண்டையும் மேலே உயர்த்தி, ஆலமுண்ட அண்ணலே! அடியேன் செய்த பிழை யாது? என்னை ஆளும் ஐயனே! இனியும் இவ்வெளியோன் உயிர் தரிவது யார் பொருட்டு? எதன் பொருட்டு? கூர்வாளும், செங்கோலும் ஏந்தி ஆள்வதை விட கூர்வாளுக்கு இரையாகி மாள்வதே நல்லவழி! எம்பெரும் தலைவா! அடியேன், அறிந்தோ அறியாமலோ பிழை ஏதும் புரிந்திருந்தால் பிழையைப் பொருத்தருளும் என்று பரமனின் பாதகமலங்களைப் பற்றி பணிந்தார். மன்னன் உடைவாளை உருவி மார்பில் நாட்ட முயன்றபோது எம்பெருமான் முன்னை விடப் பன்மடங்கு ஒலியோடு கலீர், கலீர் என்று சிலம்பொலியை மிகுதியாகக் கேட்கும்படிச் செய்தார். நாயனார் எய்திய உவப்பிற்குத்தான் அளவேது! நிலமுற வீழ்ந்து வணங்கி எழுந்தார். அருட்கடலே! அன்புப் புனலே ! அமிழ்தம் அளித்த அரசே! வழக்கம்போல் ஐயன் சிலம்பொலியை முன்னால் கேட்கச் செய்யாதிருந்ததன் காரணம் யாதோ? என்று கேட்டார். அப்பொழுது விண் வழியே அசரீரி வாக்கு எழுந்தது. சேரனே! எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தோழன் சுந்தரன் தில்லையம்பலத்துப் பொன்னம் பலத்தை வழிபட்டு, வண்ணத் தமிழால் பதிகம் பாடினான். தேனென இனிக்கும் அவனது அருட்பாக்களில் அன்பு வயப்பட்டு என்னை மறந்த நிலையில் ஈடுபட்டிருந்தமையால் உன் வழிபாட்டு முடிவில் சிலம்பொலியைச் சற்று தாமதித்து கேட்குமாறு செய்தோம்.

இவ்வருள் வாக்கு கேட்டு, சேரமான் பெருமாள் நாயனார், இத்தகைய பெருமைமிக்க அருந் தொண்டனைக் காணப் பெறாத நான் பிறவி எடுத்து என்ன பயன்? போற்றதற்குரிய அப்பெருந்தகையை இக்கணமே நேரில் கண்டு மகிழ்ந்து களிப்பேன். தில்லையம்பதி சென்று ஆடுகின்ற அரனாரைப் போற்றி எம்பெருமானை மதிமயங்க வைத்த ஒப்பற்ற திருத்தொண்டராம் வன்றொன்டனையும் கண்டு வணங்கி வழிபட்டே வருவேன் என்று எண்ணினார். நாளாக, நாளாக அரசர்க்கு அரண்மனை வாழ்வும், அரசபோகமும் வேம்பாக கசந்தது. திருத்தொண்டர்கள் கூட்டத்தில் ஒருவராய் வாழ்வதனையே பேரின்பமாகக் கொண்டார். அதற்கு மேல் மன்னன் அரசாள விரும்பவில்லை. ஆட்சிப் பொறுப்பை அமைச்சர்களிடம் ஒப்படைத்தான் மன்னன். ஓர் நன்னாளில் வேல் ஏந்திய மல்லர்களும், வில்லேந்திய வீரர்களும், வாள் ஏந்திய காவலர்களும், அறம் கூறும் அமைச்சர்களும், நால்வகைப் படையினரும் புடை சூழ அத்தாணி மண்டபத்தில் அரசோச்சிய அருங்காவலன் அரச போகத்தைத் துறந்தான். திருவஞ்சைக் களத்து அண்ணல் அடிபோற்றி தில்லைக்குப் புறப்பட்டார். தில்லை வந்தடைந்த சேரப் பெருந்தகையை, தில்லைவாழ் அந்தணர்களும், அன்பர்களும், அடியார்களும் வேதம் ஒலிக்க, மங்கல முழக்கங்கள் விண்ணை முட்ட எதிர்கொண்டு அழைத்து வந்தனர். சேரமான் பெருமாள் நாயனார் ஏழு நிலை கோபுரத்தை இசைத் தமிழால் ஏற்றி துதித்து, நிலமுற பணிந்தெழுந்து உள்ளே சென்றார். சிற்றம்பலத்துக்கு முன் சென்று, சித்தம் ஒடுங்க, பக்தி, காதலாகிக் கசிந்துருக, தமிழ்ச் சுவை அருளோடு கூடி ஆறாகப் பெருகிவர, பொன் வண்ணத் தந்தாதி என்னும் பிரபந்தத்தினைப் பாடியருளினார் சேரமான்.

தில்லையிலே பல நாட்கள் தங்கியிருந்து, அற்புதக் கூத்தாடுகின்ற நாதரின் திருவடியைப் பாடி பரவி ஓர் நாள் திருவாரூருக்குப் புறப்பட்டார் நாயனார். வரும் வழியில் திருஞான சம்பந்தர் அவதாரம் செய்த சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தொழுது புறப்பட்டு திருவாரூரை வந்தடைந்தார். அது சமயம் சுந்தரர், திருநாகைக் காரோணத்திற்கு சென்று அரனாரைத் துதித்துப்பாடி பொன்னும் மணியும், பட்டாடைகளும், கஸ்தூரியும், குதிரையும் பெற்றுத் திருவாரூர் அடைந்திருந்தார். சுந்தரர் தம்மைக் காணவரும் சேரன் பெருமாள் நாயனாரை, அன்புடன் எதிர்கொண்டு அழைத்தார். சேரமான் சுந்தரர் சேவடியைப் பணிந்தெழுந்தார். இருவரும் ஆரத்தழுவி அக மகிழ்ந்தனர். இவ்வாறு அன்பின் பெருக்கால் சேரமான் பெருமாள் நாயனாரும், தம்பிரான் தோழரும் ஒருவரோடு ஒருவர் அன்பு பூண்டு நின்றனர். இவர்களது ஒப்பற்ற தோழமையைக் கண்ட திருவாரூர்த் தொண்டர்கள் சேரமான் தோழன் என்னும் திருநாமத்தைச் சுந்தரருக்குச் சூட்டி மகிழ்ந்தனர். சுந்தரர் சேரர் பெருமானை அழைத்துக்கொண்டு தியாகேசப் பெருமானின் தாள் போற்றி திருவாரூர்த் திகழும் மணிக்கோவை என்னும் பிரபந்தத்தைப் பாடினார். சுந்தரரின் செவிக்கினிய கீதத்தில் சேரமான் சிந்தை மகிழ்ந்தார். பக்தியில் மூழ்கினார். சுந்தரர், மன்னரைத் தமது திருமாளிகைக்கு அழைத்தார். சேரமான் சுந்தரரின் அழைப்பிற்கு இணங்கி சுந்தரர் திருமாளிகைக்குச் சென்றார். பரவையார் மன்னவனையும், மணவாளனையும் முகமன் கூறி வரவேற்றாள். மன்னருக்கு மனைவி நல்லாளை அறிமுகம் செய்து வைத்தார் சுந்தரர். கணவர் பணித்ததற்கு ஏற்ப, மன்னர்க்கு சிறப்புமிக்க விருந்து சமைத்தாள் பரவையார்.

சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் ஈடு இணையில்லா அன்பிற்கு அடிமையாகி ஆனந்த வெள்ளத்தில் மகிழ்ந்து மூழ்கி இன்பம் கண்டனர். ஒருமித்த மனமுள்ள, இவ்விரு சிவனருட் செல்வர்களும், சில நாட்கள் திருவாரூரிலிருந்து தியாகேசப் பெருமானை வழிபட்டு பெருமானின் பேரருளைப் பெற்றுக் களிப்புற்று வந்தனர். இருவரும் பாண்டிய நாடு செல்லக் கருதி ஒருநாள் திருவாரூரிலிருந்து புறப்பட்டனர். திருக்கீழ்வேளூர், திருநாகைப்பட்டிணம், திருமறைக்காடு, திருவகத்தியான்பள்ளி, திருப்புத்தூர் முதலிய சிவத்தலங்களை வணங்கிப் பதிகம்பாடி பரவசமுற்றவாறு மதுரை மாநகரை வந்தடைந்தனர். பாண்டிய மன்னன், தக்க மரியாதையுடன் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார். பாண்டிய நாட்டிற்கு வந்திருந்த பாண்டியன் மகளை மணம் புரியப்போகும் சோழ அரசனும் உடன் சென்று உபசரித்தார். இப்படி மூவேந்தரும் ஒன்றுபட்டனர். சுந்தரமூர்த்தி நாயனாருடன் சொக்கலிங்கப் பெருமானின் கோயிலுக்குச் சென்றனர். சேரமான் பெருமாள் நாயனார், பாண்டியனிடமும், சோழனிடமும் விடைபெற்றுக் கொண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் புறப்பட்டார். பல திருத்தலங்களைத் தரிசித்துப் பதிகம் பாடி உளம் மகிழ்ந்தவாறு இருவரும் சோழ வளநாட்டை வந்தணைந்தனர். இருவரும் சோழ நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றை வணங்கியவாறு மீண்டும் திருவாரூரை அடைந்தனர். தியாகேசப் பெருமானை வணங்கி மகிழ்ந்த இருவரும் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினர். சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனாரின் விருந்தினராகச் சிலகாலம் தங்கியிருந்து நாடோறும் நலம் தந்த தியாகேசப் பெருமானை வழிபட்டு வந்தார். சுந்தரரும், சேரரும் எல்லையில்லா இன்பப் பெருக்கில் இன்புற்று வாழ்ந்து வரும் நாளில், சேரர்கோன் சுந்தரரைத் தம் நாட்டிற்கு வரும்படி வேண்டினார். சுந்தரர் அவரது விருப்பத்தை மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு பரவையாரிடம் விடைபெற்றுக்கொண்டு, சிவத்தொண்டர்களுடன் திருவாரூர் எல்லையை நீத்தார்.

சுந்தரரும் சேரரும் காவிரிக் கரையோரமுள்ள சிவக் கோவில்களை வழிபட்டவாறு திருக்கண்டியூர் என்னும் தலத்தை அடைந்து, எம்பெருமானை வணங்கி வழிபட்டு வெளியே வந்தனர். காவிரியாற்றின் தென்கரையில் அமைந்திருந்த திருக்கண்டியூர் தெய்வத்தைத் தரிசித்தனர். இரு ஞானச் செல்வர்களும், வடகரையில் அமைந்திருக்கும் திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் ஐயாற்றுப் பெருமானை வழிபட்டு வர எண்ணினர். அவர்கள் உள்ளத்தில் பக்திப் பெருக்கெடுத்து ஓடியதுபோல், காவிரியிலும், ஓடங்கள் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இரு ஞானமூர்த்திகளும் திகைத்து நின்றனர். சுந்தரமூர்த்தி நாயனார் கண்டியூர் நீலகண்டப் பெருமானைப் பணிந்து பரவும் பரிசு எனத் தொடங்கித் திருப்பாட்டுக்கள் ஒவ்வொன்றின் இறுதிதோறும் ஐயாருடைய அடிகளோ என்று அன்பு மேலிட அழைத்தவராய்த் திருப்பதிகத்தினைப் பாடினார். சிவபெருமான் திருவருளால் காவிரி நதி பிரிந்து அருட்செல்வர்களுக்கு வழி காட்டியது. இருவரும் அவ்வழியாக அக்கரை சென்று ஐயாற்றுப் பெருமானைக் கண்டு மகிழ்ந்தனர். மீண்டும் வடகரையை அடைந்து தங்கள் சிவயாத்திரையைத் தொடர்ந்தனர். மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்ட இருவரும் பல தலங்களைத் தரிசித்தவாறு கொங்கு நாட்டின் வழியாக மலைநாட்டின் எல்லையை அடைந்தனர். மலைநாட்டு மக்கள் தங்கள் அரசரையும், ஆரூர்ப் பெருமானையும் மலர் தூவி வணங்கி வரவேற்றனர். மலைநாட்டு இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்த ஆரூரர், சேரமான் பெருமான் நாயனாருடன், கொடுங்கோளூரை வந்தணைந்தார். அரசரையும், சுந்தரரையும் வரவேற்க ஆயிரக்கணக்கான அன்பர்களும், அடியார்களும் கூடினர். சேரமான் பெருமான் நாயனார் சுந்தரரை அழைத்துக் கொண்டு திருவஞ்சைக் களம் ஆலயத்துள் சென்றார்.

இரு தவச் செம்மல்களும் திருசடைப் பெருமான் திருமுன் பக்திப் பிழம்பாக நின்று கொண்டிருந்தார்கள். சுந்தரர், முடிப்பது கங்கை எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். சேரர் பெருமான் சுந்தரரோடு புறத்தே வந்து, அலங்காரமாக நிறுத்தப்பட்டிருந்த யானை மீது அவரை எழுந்தருளச் செய்தார். தாமும் கூடவே எழுந்தருளினார். வெண் சாமரங்களை வீசிக்கொண்டு, திருமாளிகைக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழரும், அத்தோழருக்குத் தோழரும் உலா வந்த காட்சியைக் கண்டு நகர மக்கள் வாழ்த்திப் பணிந்தனர்; மலர் தூவி வணங்கினர். இங்ஙனம் விண்ணவர் வியக்குமளவிற்குத் திருக்கோலம் வந்த இரு தவச் செம்மல்களும் திருமாளிகையின் மணிவாயில் வழியாக அரண்மனை வந்தனர். சேரர் பெருமான் சுந்தரரை அரண்மனைக்குள் அழைத்துச் சென்று தமது அரியணையில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைச் சிவாகம முறைப்படி வழிபாடு புரியத் தொடங்கினார். சுந்தரர் இது செய்தல் தகாது என்று தமக்கு பாதபூசை புரிய வந்த சேரரைத் தடுத்தபோது சேரமான் பெருமாள், அன்பின் மிகுதியால் செய்யும் வழிபாடுகள் எல்லாவற்றையும், ஏற்று அருளல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சுந்தரர் அவரது அன்பிற்குக் கட்டுப்பட்டார். அவரோடு திருவமுது செய்து மகிழ்ந்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரப்பெருந்தகையுடன் அரண்மனையில் தங்கியிருந்தார். சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் இருந்து வரும் நாளில் அவருக்குத் திருவாரூர்ப் பெருமானின் நினைவு வரவே அப்பொழுதே புறப்பட்டார். சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். இருப்பினும் சுந்தரர் விருப்பத்திற்கு ஏற்ப அவரது பயணத்தைத் தடுக்க விரும்பவில்லை. அவரது விருப்பம்போல் அரசு கட்டிலில் அமர்ந்தார். சேரமான் பெருமாள், சுந்தரர்க்குப் பொன்னும் பொருளும் மணியும் பலவகையான பண்டங்களையும் கொடுத்து அவரது திருவடிப் பணிந்து எல்லைவரைச் சென்று தொண்டர்களுடன் வழி அனுப்பி வைத்தார். திருவாரூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சுந்தரர், மிக்க சிரமத்துடன் ஒருவாறு திருமுருகன் பூண்டி என்னும் இடத்தை நெருங்கினார். களைப்பு மேலிடத் தொண்டர்களுடன் ஓரிடத்தில் தங்கினார். எம்பெருமான், தம்முடைய பூதகணங்களை வேடுவர் உருவில் அனுப்பி, நாயனார் கொண்டு வரும் பொருள்களை எல்லாம் கவர்ந்து கொண்டு வரச் செய்தார். சுந்தரர்க்கு வேதனை மேலிட திருமுருகன்பூண்டியை அடைந்து அங்கு குடிகொண்டிருக்கும் எம்பெருமானிடம் கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். எம்பெருமான் சிவகணங்கள் மூலம் கவர்ந்து வந்த பொருள்களை எல்லாம், கோயிலின் முன்னே மலைபோல குவிக்கச் செய்தார். சுந்தரர் அகமகிழ்ந்தார். தொண்டர்களுடன், பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வணங்கி வழிபட்டு, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார் சுந்தரர்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                       20.கழற்சிங்கர் : குறுநில மன்னர்

"கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்"

பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார். இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும் பொருளும் பெற்றார். இவ்வாறு பெற்ற பெரு நவநிதிகளை ஆலய வழிபாட்டிற்கும், அடியார்கள் வழிபாட்டிற்கும் பயன்படுத்தினார். ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எ
ழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினார். தமது பிராட்டியாருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டார். திருவாரூரை அடைந்த நாயனார் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார். புற்றிடங்கொண்ட நாயகரின் திருமுன் வீழ்ந்து வணங்கி எழுந்தார். பூங்கோயில் புண்ணியரின் அருள்வடிவத்திலே மெய்மறந்து கண்ணிலே நீர்மல்க உள்ளத்திலே அன்பு பொங்கப் பக்தியிலே மூழ்கி வழிபட்டுக் கொண்டிருந்தார் வேந்தர். திருக்கோயிலை வலம் வந்து கொண்டிருந்த பட்டத்து நாயகி அழகிய எழில்மிகும் மண்டபங்களைக் கண்டு அதிசயித்தாள். அரசியார், மலர் தொடுத்துக் கொண்டிருக்கும் மணிமண்டபத்திற்கு அருகே வந்தாள். அங்கு தொண்டர்கள் அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்தனர். எண்ணத்தைக் கவரும் வண்ண மலர்களைக் கண்டதும் அரசியார்க்கு ஆனந்தம் மேலிட்டது. நறுமலர் வாசனையில் சற்று நிலை மறந்தாள். தன்னையறியாதவாறு தரையில் கிடந்த மலர் ஒன்றை எடுத்து மோந்து பார்த்தாள். அங்கு கூடியிருந்த தொண்டருள் செருத்துணை நாயனார் என்பவரும் ஒருவர். இவர் அடியார்களுக்கு யாராகிலும், அறிந்தோ, அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார்.

அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் சினம் கொண்டார். அரசியாயிற்றே என்று கூடப் பார்க்கவில்லை; அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை நுகர்ந்து பார்த்துப் பிழை புரிந்த அரசியாரின் மூக்கை வாளால் சீவிவிட்டார் நாயனார்! பூமகள் போன்ற பட்டத்தரசி மயக்கமுற்று மண் மீது வீழ்ந்தாள். பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த மன்னர்க்கு இச்செய்தி எட்டியது. மன்னர் அவ்விடத்திற்கு விரைந்த வந்தார். நிலத்தில் துடித்து துவண்டு கிடக்கும் அரசியாரின் பரிதாப நிலையைக் கண்டார். பதை பதைத்துப் போனார். அஞ்சாமல் இக்கொடிய செயலை செய்தது யார்? என்று கண்களில் தீப்பொறி பறக்கக் கேட்டார். அம்மொழி கேட்டு, மன்னவா! இச்செயலை செய்தது நான்தான் என்று துணிந்து சொன்னார் நாயனார். சைவத் திருக்கோலத்திலே நின்றிருந்த செருத்துணை யாரைக் கண்டதும் மன்னரின் மனம் அடியார் சினத்துடன் இச்செயல் செய்ததற்கு எமது தேவியார் செய்த பிழைதான் யாதோ? என்பதை அறியத் துடித்தது. மன்னரின் முகத்தில் எழுந்த கேள்விக் குறியின் சாயலைப் புரிந்துகொண்ட செருத்துணையார், அரசியார் எம்பெருமானுக்குரிய மலர்களை மோந்து பார்த்தார் என்றார். அவர் மொழிந்தது கேட்டு மன்னர் மனம் கலங்கினார். அரசர், கரங்கூப்பி வணங்கி, ஐயனே! நீங்கள் தண்டனையை முறைப்படி அளிக்கவில்லை என்று கூறியவாறே உடைவாளை எடுத்தார். மலரை எடுத்த கையை அல்லவா முதலில் தாங்கள் துண்டித்திருக்க வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் சட்டென்று அரசியாரின் மலர்க்கையை வெட்டினார். அரசரின் உயர்ந்த பக்தி நிலை கண்டு செருத்துணை நாயனார், மன்னர்க்குத் தலைவணங்கினார். அப்பொழுது புற்றிடங்கொண்ட பெருமான் மன்னர்க்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்டு, சக்திதேவியோடு ரிஷபத்தில் எழுந்தருளினார். பட்டத்தரிசியாருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி அருளினார். மன்னருடைய சிவபக்தியையும், அடியார்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தியையும் கண்டு அடியார்கள், மன்னரைப் போற்றிப் பணிந்தனர். மன்னரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மன்னர் கழற்சிங்க நாயனார் பூவுலகில் பல்லாண்டு வாழ்ந்து அறநெறி பிறழாமல் அரசாட்சி புரிந்தார். முடிவில் எம்பெருமான் திருவருளாலே சிவலோகம் அடைந்து இன்புற்றார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                   21.காரி நாயனார் : செங்குந்தர்



திருக்கடவூர் வருமுரவோர் காரி யாராந்
திகழ்தொண்டர் வண்டமிழ்நூ றிருந்த வோதி
விருப்பொடுதம் பெயராற்பா விளம்பி மும்மை
வேந்தரையு முறைமுறையே மேவி யங்க
ணுரைத்தவுரை நயமாக்கி யவர்பா லேய்ந்த
வொண்பொருளா லாலயங்க ளோங்கச் செய்து
தரைக்குளருந் தவர்க்கேவ றகமுன் போற்றுந்
தன்மையா லருள்சேர்ந்த நன்மை யாரே.

திருக்கடவூர் என்னும் மறையோர்கள் வாழ்கின்ற வளமிகுந்த இப்பகுதியிலே காரி நாயனார் என்னும் செந்நாப்புலவர் அவதரித்தார்.புலமைமிக்க இச்சிவனடியார் தமிழை நன்கு ஆராய்ந்து அறிந்து கவிபாடும் திறத்தினைப் பெற்றிருந்தார்.இவர் சிந்தையிலே சங்கரர் இருக்க, நாவிலே சரஸ்வதி இருந்தாள். திருவெண்ணீற்றின் பெருமையை உணர்ந்து திருசடை அண்ணலையும், அவர் தம் அடியார்களையும் பேணி வந்தார். ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் திருப்பணிகள் பல செய்தார்.ஒருமுறை காரி நாயனார், சொல் விளங்கப் பெருமான் மறைந்து நிற்கும் வண்ணம் தமது பெயரால் காரிக்கோவை என்னும் தமிழ் நூல் ஒன்றினை ஆக்கினார். மூவேந்தர்களுடைய உயர்ந்த நட்பினைப் பெற்றார். அவர்கட்கு, அந்நூலின் தெள்ளிய உரையை நயம்படக் கூறினார். இவருடைய தமிழ்ப் புலமையை எண்ணி வியப்படைந்த மூவேந்தர்களும் பொன்னும் பொருளும் பரிசாகக் கொடுத்து சிறப்பித்தனர். பொற் குவியலோடு, திருக்கடவூர் திரும்பிய நாயனார், சிவன் கோயில்களைப் புதுப்பித்தார். சிவன் கோயில்கள் பல கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார். சிவனடியார்களுக்கு அன்போடு அமுதளித்து பெரு நிதிகளை அள்ளி அள்ளிக் கொடுத்து அகமகிழ்ந்தார்.தமிழறிவால் நூல்கள் பல இயற்றி பெரும் பொருள் பெற்று அப்பொருளை எல்லாம் சிவாலயத்துக்கும், சிவனடியார்களுக்குமே வழங்கி பேரின்பம் பூண்டார். இவ்வாறு கங்கை வேணியரின் கழலினைச் சிந்தையிலிருத்திய தொண்டர் திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள அமிர்தகடேசுவரரையும், அபிராம வல்லியையும், பாமாலையாம் பூமாலையால் அல்லும் பகலும் சேவித்தார். எம்பெருமான் தொண்டர்க்குப் பேரருள் பாலித்தார். தமது புகழ் உடம்போடு கயிலைமலை சேர்ந்து பேரின்பம் கண்டார் காரி நாயனார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                           22.காரைக்கால் அம்மையார் : வணிகர்

தாயும், தந்தையும் இல்லாதவன் இறைவன். அவனுக்கு பிறப்புமில்லை, முடிவுமில்லை. 

"
நம்மைப் பேணும் அம்மை காண்
அம்மையே வருக
வேண்டுவன கேள்"

"
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழிருக்க என்றார்."

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் `பேயார்` எனக் குறிக்கப்படுபவர் இவ்வம்மையார். இவர் தாம் அருளிச் செய்த பிரபந்தங்களாகிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளி லும் `காரைக்கால் பேய்` என உரைப்பதால் இவர் தம் ஊர் காரைக்கால் என்பதும் பேய் வடிவம் வேண்டிப் பெற்றபின் பாடியன ஆதலால் தன்னைப் பேய் எனக் குறித்துரைத்துள்ளார் என்பதும் அறியற் பாலனவாகும்.

பெரிய புராணத்தில்


இவர் தம் வரலாற்றைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் அழகுற விரித்துரைத்துள்ளார்.

சோழவள நாட்டில் கடற்றுறைப் பட்டினமாக விளங்கிய காரைக்கால் என்னும் பதியில் வணிகர் குலத்தில் தனதத்தன் என்பா னுக்கு அரும் பெறற் புதல்வியாய் திருமகள் போன்ற பேரழகோடு அம்மையார் தோன்றினார். 

பெற்றோர் புனிதவதி எனப் பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். புனிதவதியார் பிறந்து மொழி பயிலும் காலத்திலேயே சிவபெருமான் திருவடிகளுக்குத் தொண்டு பூண்டு, சிவன் அடியார்களைக் கண்டால் சிவன் எனவே தெரிந்து வழிபடும் திறம் வாய்க்கப் பெற்றவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார்.

திருமணம்


நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகன் தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி முதியோர் சிலரைத் தனதத்தன்பால் அனுப்பினான். இருமுது குரவர் இசைவினால் புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நிகழ்ந்தது. தனதத்தன் தனக்கு வேறு பிள்ளைப்பேறு இல்லாமையால் காரைக்காலிலேயே தன் மருகன் பொன் வாணிபம் புரியவும் தனியே மனையறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தான்.

மனைத்தக்க மாண்பு


பரமதத்தன் தன் மாமனார் அமைத்துத் தந்த வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கிச் சிறப்புற வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மனைத்தக்க மாண்புடன் இல்லறம் இயற்றியதோடு சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும் மேம்பட்டுச் சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், வேண்டும் பொருள்களை அவ்வப்போது கொடுத்தல் முதலான சிவபுண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.

அடியவர்க்கு அமுது


ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர் இரண்டு சுவையான மாங்கனிகளை அவனிடம் அளித்து உரையாடிச் சென்றனர். பரமதத்தன் அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்து சென்ற மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அக்கனிகளை வாங்கித் தன் கணவன் உணவுண்ண வரும்போது படைக்கலாம் என அடுக்களை அறையில் வைத்திருந்தார். அவ்வேளையில் சிவனடியார் ஒருவர் பசியால் மிக இளைத்தவராயப் புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் திருஅமுது (சோறு) மட்டும் சமைத்திருந்த நிலையில் ஏனைய கறியமுது முதலியவற்றை விரைந்து செய்தளிக்க எண்ணினார். வந்த அடியவரோ மிக்க பசியோடு இருத்தலைக் கண்ணுற்றுத் தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை இலையில் படைத்து அடியவர்க்குத் திருஅமுது படைத்து மகிழ்வோடு வழியனுப்பி வைத்தார். சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் நண்பகல் உணவு அருந்தத் தன் இல்லம் அடைந்தான். புனிதவதியார் இன்முகத்தோடு தன் கணவனுக்குத் திருஅமுது கறியமுது முதலியவற்றைப் படைத்ததுடன் அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்து உண்ணச் செய்தார். திரு அமுதுடன் அப்பழத்தைத்தின்ற பரமதத்தன் அதன் இனிய சுவையில் மயங்கியவனாய்ப் பிறிதொன்றையும் இடுவாயாக என்றான்.

அதிமதுரக்கனி


கணவன் சொற்பிழையாத புனிதவதியார் அவனது சுவை உணர்வைக் கெடுத்தல் கூடாது என்னும் கருத்தோடு தான் அப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாது பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து வருந்தி இறைவனை வேண்டி நின்றார். அவ்வளவில் இறையருளால் அவர் தம் கையகத்தே மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது. உடனே அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை முன்னுண்ட கனிச் சுவையின் வேறுபட்டதாய்த் தேவர் அமிழ்தினும் மேம்பட்டதாய் இருத்தலை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி மூவுலகிலும் பெறுதற் கரியதான இக்கனியை நீ எங்குப் பெற்றாய் என வினவினான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்கு உரைத்தல் கூடாதாயினும் தன் கணவன் சொல்வழி ஒழுகுதலே கடன் எனத்துணிந்து நடந்தவற்றைக் கூறினார்.

மாங்கனியின் மாயம்


அவற்றைக் கேட்ட பரமதத்தன் இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையாயின் பிறிதொரு கனியையும் இவ்வாறே வருவித்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டனன். புனிதவதியார் அவ்விடத்தை விட்டுத் தனியே சென்று இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாதிருக்கப் பிறிதொரு மாங்கனி அருள வேண்டு மெனச் சிவபெருமானை இறைஞ்சி நின்றார். இறையருளால் மற்று மொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய அளவில் அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு அஞ்சிய பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து அவரோடு சேர்ந்து வாழ்ந்தபோதும் உறவுத்தொடர்பு இன்றி ஒழுகி வந்தான்.

மறுமணம்


இவ்வாறு ஒழுகும் நாளில் ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து மீள்வேன் என உறவினர்களிடம் கூறி அரிய பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்தான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குத் தான் தெய்வமென மதிக்கும் புனிதவதியாரின் பெயரைச்சூட்டி மகிழ்ந்துறைந்தான்.

புனிதவதியார் சந்திப்பு


இதனை அறிந்த புனிதவதியாரின் சுற்றத்தினர் அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்ப்பிக்கும் கருத்துடன் அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாடடைந்து அவன் வாழும் ஊர் எல்லையை அணுகினார்கள். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் உடையவனாய், இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாரிடம் `அடியேன் உம் அருளால் வாழ்கிறேன். இவ்விளங் குழவிக்கு உமது பெயரையே சூட்டியுள்ளேன்` என்று கூறி அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு சுற்றத்தார் பால் ஓதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் யாது` எனக் கேட்க அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர் தெய்வத்தன்மை வாய்ந்தவர் நீவிரும் இவரை வழிபடுவீராக` என்றான்.

பேய் வடிவம்


சுற்றத்தவர் `ஈதென்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப் புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவாயின் அவர் பொருட்டு அமைந்த எனது தசைப்பொதியைக் கழித்து நீக்கி நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என இறைவனை வேண்டி நின்றார். அந்நிலையில் பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்கு வாய்த்தது. சுற்றத்தவர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் உடையவராய் அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார். இதனைச் சேக்கிழார்,

ஈங்கிவன் குறித்த கொள்கை இது இனி
இவனுக்காகத்
தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி கழித்து
இங்கு உன்பால்
ஆங்குநின் தாள்கள் போற்றும்
பேய்வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர்தாள்
பரவி நின்றார். (தி.12 காரைக்.49)

ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேல்நெறி உணர்வுகூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் 
ஊனுடை வனப்பை எல்லாம் உதறிஎற் புடம்பேயாகி
வானமும் மண்ணும் எல்லாம் வணங்குபேய் வடிவம் ஆனார்

(
தி.12 காரைக். 50)

எனத் தெரிவித்தருள்கிறார். அம்மையாரும் தாம் அருளிய அந்தாதியில்
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீது
உறினும் உறாதொழியுமேனும் - சிறிதுணர்த்தி
மற்றொரு கண் நெற்றிமேல் வைத்தான் தன் பேயாய

நற்கணத்தில் ஒன்றாய நாம் (85)

எனக் குறித்தருள்கிறார். இதனால் பேய் வடிவம் என்பது சிவகணங் களில் ஒன்றான பேய்வடிவம் என்பதை அறியலாம்.

அம்மையே வருக

பின்பு திருஇரட்டை மணிமாலை என்ற சிறு பிரபந்தத்தையும் அருளி இறைவனைப் போற்றித் திருக்கயிலையில் சிவபிரானது திருவோலக்கத்தைக் காணும் பெருவிருப்புடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டு, திருக்கயிலை மால்வரையை அடைந்தார். சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையைக் காலால் மிதித்தல் கூடாது எனக் கருதியவராய்

தலையால் நடந்து மேல்ஏறிச் சென்று இறைவன் சந்நிதியை அடைந் தார். இறைவனது திருவருள் நோக்கம் அம்மையார் மேற் பதிந்தது. சிவபோகத்தைத் தன் அடியவர்க்கருளும் அருட்சத்தியாகிய அம்பிகை அம்மையாரின் அன்பின் திறங்கண்டு வியந்து இறைவனை நோக்கி `எம் பெருமானே? தலையினால் நம்மை நோக்கி நடந்துவரும் இப் பெண் யார்?` என வினவ பெருமான் `இவர் அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்` எனக்கூறி `அம்மையே` என்னும் செம்மொழியால் அவரை அழைத்தருள `அப்பா` என்று சொல்லிக் கொண்டு இறைவனையும் இறைவியையும் வணங்கினார். 

இறைவன் அவரை நோக்கி `நீ நம்பால் பெறக் கருதுவது யாது?` எனக் கேட்க அம்மையார் இறைவா நீ திருநடம் புரியும்போது உன் அடி நிழற்கீழ் இருக்க வேண்டு மென வேண்டினார்.

பெருமான் `தென்னாட்டில் திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடிப் போற்றி இன்புற் றிருப்பாயாக` என அருளினார்.

திருவடிப்பேறு

அம்மையார் கயிலைப் பெருமானிடம் விடைபெற்று தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து அண்டமுற நின்றாடும் இறைவனது திருக்கோலத்தைக் கண்டு உளம் உருகி வழிபட்டு `கொங்கை திரங்கி`, `எட்டி இலவம்` என்று தொடங்கும் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி பெருமானது தூக்கிய திருவடி நிழற்கீழ் என்றும் நீங்காது வாழும் பெருவாழ்வு பெற்றார். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் இவ்வரலாற்றை அழகுற விரித்துரைத்துள்ளார்.

அம்மையார் அருளிய திருவாலங்காட்டுத் திருப்பதிகங்கள் தேவாரத் திருப்பதிகங்களுக்கெல்லாம் முன்னோடியாக முதற்கண் தோன்றிய சிறப்பால் மூத்த திருப்பதிகங்கள் எனப் பெற்றன. அம்மையார் அருளிய இரண்டு திருப்பதிகங்களில் முதல் திருப்பதிகம் நட்டபாடைப் பண்ணமைப்பில் பாடப்பெற்றது. திருஞானசம்பந்தர் இப்பண்ணமைப்பிலேயே `தோடுடைய செவியன்` என்னும் திருப் பதிகத்தை அருளிச் செய்துள்ளார். மற்றொரு திருப்பதிகம் இந்தளம் என்னும் பண்ணமைப்பில் பாடப்பட்டுள்ளது. சுந்தரர் தாம் அருளிய திருப்பதிகங்களில் முதலாவதாகிய `பித்தாபிறைசூடி` என்னும் திருப் பதிகத்தை இவ் இந்தளப் பண்ணிலேயே பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தரும் சுந்தரரும் அம்மையார் தலையால் நடந்த திருவலாங்காட்டைக் காலால் மிதித்தல் கூடாதென ஊர் எல்லையிலிருந்தே திருப்பதிகங்கள் அருளியுள்ளனர்.

இவற்றை நோக்கும்போது நம் ஆசாரியர்கள் அம்மையார் காட்டிய நெறியில் நின்று இறைவனைப் போற்றிய பாங்கையும் அம்மையாரிடம் அவர்கள் காட்டிய பத்திமையையும் நாம் நன்குணரலாம்.

காலம்

திருஞானசம்பந்தர் தாம் அருளிய திருஆலங்காட்டுத் திருப் பதிகத்தில்

வணங்கும் சிறுத்தொண்டர்
வைகல்ஏத்தும் வாழ்த்தும் கேட்டு
அணங்கும் பழையனூர் ஆலங்காட்டு

எம் அடிகளே (தி.1 ப.45 பா.7)

எனக் குறித்தருளுவதால் அம்மையார் காலம் ஞானசம்பந்தர் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனவும், இவரது யாப்பமைதி சொற்பொருள் அமைதி முதலியவற்றைக் கொண்டு ஆராயுங்கால் இவரது காலம் இருண்ட காலப்பகுதி எனப்படும். கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                  23.குங்கிலியகலையனார் : அந்தணர்
"கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்"

சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந்
திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே
தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு
சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர்
ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே
நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப்
பாலமுத முண்டாரு மரசு மெய்திப்
பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே.

சோழமண்டலத்திலே, திருக்கடவூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற்சிறந்த கலயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்தத்திருப்பதியிலே திருவீரட்டான மென்னுந் திருக்கோயிலில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குத் தினந்தோறும் குங்குலியத்தூபம் இட்டுவந்தார். இட்டு வருங்காலத்திலே, பரமசிவனுடைய திருவருளினாலே அவருக்கு வறுமையுண்டாயிற்று. உண்டாகியும், அவர் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாமல் நடத்திவந்தார். வறுமை மிகுதியினாலே நிலங்களை விற்றும், அடிமைகளை விற்றும், செலவழித்தார். இப்படி எல்லாம் செலவானமையால், அவருடைய மக்களும் சுற்றத்தவர்களும் வருந்தினார்கள்.

ஒருநாள் அவர்மனைவியார், அரிசி முதலியன வாங்குதற்கு ஒன்றும் இல்லாமையால் இரண்டுநாளாகப் பட்டினியிருந்து வருந்துகின்ற புதல்வரையும் சுற்றத்தாரையும் பார்த்து இரங்கி, தம்முடைய தாலியை அக்கணவர் கையிலே கொடுத்து, "இதற்கு நெல் வாங்கிக் கொண்டு வாரும்" என்றார். குங்குலியக்கலயநாயனார் அந்தத் தாலியை வாங்கிக் கொண்டு, நெல்லுக் கொள்ளும்படி போனார். போம்பொழுது வழியிலே ஒருவணிகன் குங்குலியப் பொதி கொண்டு தமக்கு எதிரே வரக்கண்டு, மனமகிழ்ந்து "சுவாமிக்குத் தூபம் இடும்படி குங்குலியத்தைப் பெற்றுக் கொண்டேன். இதினும் பார்க்க மேலாகிய பேறு உண்டோ" என்று சொல்லி, தம்முடைய கையில் இருந்த தாலியைக் கொடுத்து, அந்தக் குங்குலியப் பொதியை வாங்கிக்கொண்டு, ஆலயத்துக்கு விரைந்து சென்று, அங்குள்ள பண்டாரத்திலே அக்குங்குலியத்தை வைத்துவிட்டு, சுவாமியைத் துதித்துக்கொண்டு அங்கே இருந்தார். அவர் அங்கே இருக்க, வீட்டிலே அவர் மனைவியாரும் மக்களும், பசியினாலே வாடி, அன்று ராத்திரியிலே இளைப்புற்று நித்திரை செய்யும் பொழுது; கருணாகரராகிய கடவுள் அவ்வீடு முழுவதிலும், பொற்குவியலும் நெற்குவியலும் அரிசிக்குவியலும் பிறவளங்களும் நிறைந்து கிடக்கும்படி அருள்செய்து, அம்மனைவியாருக்குச் சொப்பனத்தில் தோன்றி, அநுக்கிரகஞ் செய்தார். உடனே அவர் விழித்தெழுந்து, அங்கே இருக்கின்ற செல்வத்தைக் கண்டு, பரமசிவனுடைய திருவருளை வியந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, தம்முடைய நாயகராகிய குங்குலியக்கலயநாயனாருக்குத் திருவமுது பாகம் பண்ணப் பிரயத்தனஞ்செய்தார். கிருபாநிதியாகிய பரமசிவன் குங்குலியக் கலயநாயனாருக்குத் தோன்றி, "நீ மிகப் பசி கொண்டிருக்கின்றாய். உன்வீட்டுக்குப் போய்ப் பாலும் அன்னமும் உண்டு துன்பத்தை ஒழி" என்று திருவாய்மலர்ந்தருளினார். குங்குலியக் கலயநாயனார் அதைக் கேட்டுக் கைகூப்பி வணங்கி அவருடைய ஆஞ்ஞையை மறுத்து இருத்தற்கு அஞ்சி, அதனைச் சிரசின் மேலே வகித்து திருக்கோயிலினின்றும் நீங்கிப் போய்த் தம்முடைய வீட்டினுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அவ்வீடெங்கும் நிறைந்திருக்கின்ற நிதிக்குவைகளைக் கண்டு, மனைவியாரை நோக்கி "இந்தச் சம்பத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன" என்று கேட்க; அவர் "எம்பெருமானுடைய திருவருளினால் வந்தன" என்றார். அதுகேட்ட நாயனார் "ஒன்றுக்கும் பற்றாத சிறியேனையும் ஆட்கொள்ளும் பொருட்டு நமது கடவுளுடைய கருணை இருந்தபடி இப்படியோ" என்று கடவுளை வணங்கினார். மனைவியார் விரைவிலே கணவரையும் சிவனடியார்களையும் விதிப்படி தூப தீபங்களால் ஆராதனை செய்து, திருவமுது செய்வித்தார். குங்குலியக்கலயநாயனார் பரமசிவனுடைய திருவருளினாலே பெருஞ்செல்வமுடையவராகி, சிவனடியார்களைத் தயிர் நெய் பாலோடு திருவமுது செய்வித்து வந்தார்.


கடவுள் கண்ணால் காணப்படுபவன் அல்லன். வார்த்தைகளால் வர்ணித்து விடவும் முடியாது; கைகளால் தொட்டு அறியவும் முடியாது. அவன் மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறான். அதனால்தான் அவனை மனவாசகம் கடந்தான் என்கிறார்கள். கடவுள் என்ற சொல் உணர்த்தும் தத்துவமும் இதுதான்.

அவன் அருமையானவன். ஆனால் அதேநேரத்தில் எளிமையானவனும் கூட. மாணிக்கவாசகர் மகேஸ்வரனை வர்ணிக்கும் போது அருமையில் எளிய அழகன் காண்கஎன்பார். முப்பத்து முக்கோடித் தேவர்களாலும் அறியப்படாத அருமை படைத்தவனான அரன் தன் பக்தர்களுக்காக இரங்கி வருகிறான். மாலொடு நான்முகனும் தேடி அறிய முடியாத அந்த தெய்வம் பக்தர்களைத் தேடி வருகிறது.

பரமேஸ்வரன் ஏழை பங்காளன். அவனை நோக்கிப் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்களை நோக்கி ஆண்டவன் நூறடிகளை எடுத்து வைத்து வருகிறான். ஓடோடி வருகிறான். அவர் துன்பத்தைத் துடைக்கிறான். எண்ணங்களை ஈடேற்றுகிறான் என்பதை உணர்த்தும் புராண வரலாறுகள் பல உண்டு. திருப்பனந்தாள் திருத்தலத்தில் நடந்த நிகழ்வுகள் சிவபெருமான் பக்தர்களுக்காக அவர் மனவருத்தம் தீர்ப்பதற்காக எதையும் செய்வான்; வளைந்தும் கொடுப்பான்; நிமிர்ந்தும் நிற்பான் என்பதை உணர்த்தக் கூடியவை.

மண்ணி நதிக்கரையோரம் உள்ள புண்ணியத் தலம் திருப்பனந்தாள். தீர்த்தம் மண்ணி ஆறு. மூர்த்தி அருணஜடேஸ்வரர். ஒரு தலத்துக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் விசேஷம். இந்த மூன்றும் இருந்தால் சத்குருவின் அருள் கிடைப்பது நிச்சயம். குருவருள் கிடைத்தால் குருதோஷங்கள் பஞ்சாய்ப் பறக்கும்.

கடவுள் கண்ணால் காணப்படுபவன் அல்லன். வார்த்தைகளால் வர்ணித்து விடவும் முடியாது; கைகளால் தொட்டு அறியவும் முடியாது. அவன் மனம், மொழி, மெய் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறான். அதனால்தான் அவனை மனவாசகம் கடந்தான் என்கிறார்கள். கடவுள் என்ற சொல் உணர்த்தும் தத்துவமும் இதுதான்.

அவன் அருமையானவன். ஆனால் அதேநேரத்தில் எளிமையானவனும் கூட. மாணிக்கவாசகர் மகேஸ்வரனை வர்ணிக்கும் போது அருமையில் எளிய அழகன் காண்கஎன்பார். முப்பத்து முக்கோடித் தேவர்களாலும் அறியப்படாத அருமை படைத்தவனான அரன் தன் பக்தர்களுக்காக இரங்கி வருகிறான். மாலொடு நான்முகனும் தேடி அறிய முடியாத அந்த தெய்வம் பக்தர்களைத் தேடி வருகிறது.

பரமேஸ்வரன் ஏழை பங்காளன். அவனை நோக்கிப் பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்களை நோக்கி ஆண்டவன் நூறடிகளை எடுத்து வைத்து வருகிறான். ஓடோடி வருகிறான். அவர் துன்பத்தைத் துடைக்கிறான். எண்ணங்களை ஈடேற்றுகிறான் என்பதை உணர்த்தும் புராண வரலாறுகள் பல உண்டு. திருப்பனந்தாள் திருத்தலத்தில் நடந்த நிகழ்வுகள் சிவபெருமான் பக்தர்களுக்காக அவர் மனவருத்தம் தீர்ப்பதற்காக எதையும் செய்வான்; வளைந்தும் கொடுப்பான்; நிமிர்ந்தும் நிற்பான் என்பதை உணர்த்தக் கூடியவை.

மண்ணி நதிக்கரையோரம் உள்ள புண்ணியத் தலம் திருப்பனந்தாள். தீர்த்தம் மண்ணி ஆறு. மூர்த்தி அருணஜடேஸ்வரர். ஒரு தலத்துக்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் விசேஷம். இந்த மூன்றும் இருந்தால் சத்குருவின் அருள் கிடைப்பது நிச்சயம். குருவருள் கிடைத்தால் குருதோஷங்கள் பஞ்சாய்ப் பறக்கும்.


இப்படி நடக்குங்காலத்திலே, திருப்பனந்தாளென்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற சிவலிங்கம் சாய்ந்திருக்கின்றமையால், அதனை நிமிரப்பண்ணிக் கும்பிடுதற்கு விரும்பி, இராசாவானவர் தம்முடைய யானைகளெல்லாவற்றையும் பூட்டி இழுப்பித்தார். இழுப்பித்தும், அது நிமிராமையால் அகோராத்திரம் தீராத கவலையுற்றிருந்தார். குங்குலியக்கலய நாயனார் அந்தச் சமாசாரத்தைக் கேள்வியுற்று சுவாமி தரிசனஞ்செய்யும்பொருட்டுத் திருப்பனந்தாளை அடைந்தார். அங்கே சிவலிங்கத்தை நிமிரப்பண்ணவேண்டுமென்கின்றஆசையாய் இராஜாவருத்தமுறுதலையும், சேனைகள் யானைகளோடு சிவலிங்கத்தை இழுத்துத் தங்கள் கருத்து முற்றாமையால் பூமியின்மேலே வலி குறைந்து விழுந்து இளைத்தலையும் கண்டு, மனசிலே துன்பங்கொண்டு, "அடியேனும் இளைப்பைத் தருகின்ற இந்தத் திருப்பணியைச் செய்ய வேண்டும்" என்று விரும்பி, சிவலிங்கத்திலே கட்டப்பட்ட கயிற்றைத் தம்முடைய கழுத்திலே கட்டிக்கொண்டு இழுத்தார். உடனே சிவலிங்கம் நிமிர்ந்தது. அப்படி நிமிர்ந்தது அவர் புறத்திலே கட்டி இழுத்து அக்கயிற்றினாலே அன்று; அகத்திலே கட்டியிழுத்த அன்புக்கயிற்றினாலேயாம். அது கண்டு இராஜாவும் சேனைகளும் மிகுந்த களிப்பையடைந்தார்கள். இராஜா குங்குலியக்கலயநாயனாரை நமஸ்கரித்து வியந்து ஸ்தோத்திரம் பண்ணி, சுவாமிக்கு வேண்டிய திருப்பணிகள் பலவற்றை நிறைவேற்றிக்கொண்டு தம்முடைய நகரத்துக்குப் போய்விட்டார்.

குங்குலியக்கலயநாயனார் சிலநாள் சுவாமிதரிசனஞ் செய்து கொண்டு அங்கே இருந்து, பின் தமது வாசஸ்தானமாகிய திருக்கடவூருக்குப் போய், தாஞ்செய்யுந் திருப்பணியைச் செய்து கொண்டிருந்தார். இருக்குநாளிலே, அந்த ஸ்தலத்திற்கு எழுந்தருளிவந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரையும் திருநாவுக்கரசநாயனாரையும் எதிர்கொண்டு, தமது வீட்டுக்கு, அழைத்துக்கொண்டுபோய், திருவமுது செய்வித்து அவர்களுடைய திருவருளையும், பரமசிவனுடைய திருவருளையும் பெற்றார். பின்னுஞ் சிலகாலம் அன்பு மேன்மேலும் பெருகப் பல திருப்பணிகளையும் செய்து கொண்டிருந்து சிவபதமடைந்தார்.


"
நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு பாசத்தாலே

திண்ணிய தொண்டர் கூடி இளைத்த பின் திறம்பி நிற்க

ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு கண்டபோதே

அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                        24.குலச்சிறையார் : மரபறியார்
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்
புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப் போற்றப்பட்ட பெருந்தகையாளர். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த வாரப்பாடு உடையவராயிருந்தார். சிவனடியா
ரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று இன்னமுது ஊட்டுவார். திருநீறும், உருத்திராக்கமும் அணிந்தவரும் அஞ்செழுத்தோதுபவருமான அடியவர் பாதத்தை அவர் வழிபடாத நாளில்லை.
இத்தகைய அடியவர்க்கு அன்பு பூண்ட அகத்தினரான குலச்சிறையார் நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனின் முதலமைச்சராக அரசகருமம் செய்தார். பாண்டியமன்னன் சமண சமயத்தவனாகவும் குடிகளெல்லாம் அவன் வழியினராகவும் நின்ற போதும் பெருமானம் உடையவராக அவர் சைவத்தின் வழி நின்றார்.
இவ்வாறு சிவநெறியினராய் அரசகருமம் பார்க்கும் நாளில் சிவநெறி விளக்கும் திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டிற்கு அருகே திருமறைக்காட்டில் எழுந்தருளியிருப்பதான செய்தியைக் கேள்வியுற்றார். இச்செய்தியினைக் கேள்விப்பட்ட அளவிலேயே அவரை நேரிற் கண்டு அடிபணிந்தது போல் ஆனந்தமடைந்தார். பாண்டிய நாடெங்கும் சைவம் ஓங்கவேண்டுமென்ற எண்ணத்தொடிருந்த பாண்டிமாதேவியாரோடு ஆலோசித்துப் பரிசனங்களை திருஞானசம்பந்தரிடம் சென்று சேதி சொல்வதற்கென அனுப்பி வைத்தார். சம்பந்தப் பெருமான் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளும் செய்தி எட்டும் முன்னமே நன்னிமித்தங்கள் பல தோன்ற இவை சண்பை அரசு வரும் நற்குறிஎனத் தெளிந்தார். எழுந்தருளும் செய்தி கேட்டதும் பாண்டிமாதேவியார் சென்று அவர் பணிப்பினைப் பெற்று வரவெதிர்கொள்ளச் சென்றார். செல்லும் அவர் தம் எதிரே புண்ணியத்தின் படையெழுச்சி போன்றும் அடியவர் சூழ வரும் ஆளுடைய பிள்ளையினைக் கண்டார். பரமசமய கோளரி வந்தான் எனும் முத்துச்சின்ன ஓசை செவிநின்ற அமுதமென அவரை விம்மிதமுறச் செய்து கண்வழியூடாகவும், செவிவழியூடாகவும் உளம் நிறைந்த அன்பு வெள்ளத்தாலே கைகள் சிரமிசை ஏறிக்குவிய அவ்விடத்திலே நிலமிசை வீழ்ந்து வணங்கினார். பின் எழுந்து நெருங்கிச் சென்று வீழ்ந்து வணங்கிக் கிடந்தார். ஆளுடைய பிள்ளையாரைச் சூழ்ந்து வந்த தொண்டர் குழாம், பாண்டிய முதல் மந்திரிப் பாங்குடன் வந்த அவரைப் பணிந்தபோதும் அவர் எழாதவகையைக் கண்டு சிவபுரச் செல்வரிடம் சென்று கூறினார். சிவஞானச் செல்வரும் முத்துச் சிவிகையின்றும் இறங்கி வந்து தம் கைமலர்களால் அணைத்தெடுத்தார். அவர் தம் அரவணைப்பினால் எழுந்த குலச்சிறையார் கைதொழுது நின்றார். அப்பொழுது ஆளுடைய பிள்ளையார். இம்மதுரவாக்கின் போற்றினால் மீண்டும் வீழ்ந்து வணங்கி நின்று.
சென்ற காலத்தின் பழுதிலாத்திறமும் இனி எதிர்காலத்தின் சிறப்பும்
இன்று எழுந்தருளப்பெற்ற பேறிதனால் எற்றைக்கும் திருவருடையோம்
நன்றியினால் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ்வேந்தனும் உய்ந்து
வென்றிகொள் திரு நீற்றொளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம்"
எனப் போற்றினார். ஆளுடைய பிள்ளையாரோடு கூடிச்சென்று ஆலவாய் உறையும் அவிர்சடைக் கடவுளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப்பெருமானைத் திருமடத்தில் உறையச் செய்து, அவருக்கும் பரிசனத்தார்க்கும் திருவிருந்தளிக்கும் பேறும் அவருக்கே வாய்த்தது. இவற்றையெல்லாம் செவ்வனே செய்தாரெனினும், தீயவை புரியும் சமணரால் தீங்கேதும் நேருமோ என அஞ்சினார். அவ்வாறு தீதேதும் நிகழின் உயிர் துறப்பதே தக்கதென்ற துணிவும் கொண்டார். அவர் அஞ்சிய வண்ணமே சமணர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த மடத்திற்குத் தீவைத்த செய்தி அவரை மனம் பதைபதைக்கச் செய்தது. ஆயினும் பிள்ளையார்க்குத் தீங்கேதும் நிகழாதது குறித்து ஆறுதல் அடைந்தார். அமணர் மடத்திற்கு வைத்த தீ மறைச்சிறுவன் ஆணையால் மன்னனை வெப்பு நோயாய் வருத்திய வேளையில் அதற்குரிய தீர்வு திருஞானசம்பந்தரேயென மதியுரை கூறினார். மன்னனும் அவர் ஆலோசனைப்படி திருஞானசம்பந்தரை அழைத்து வருமாறு பாண்டிமாதேவியாரையும் அவரையும் பணித்தான். பணிப்பின்படி பாண்டிமாதேவியார் சிவிகையில் வர குதிரையேறிச் சென்ற குலச்சிறையார் சம்பந்தப்பிள்ளையார் திருமடத்தை அடைந்தார். அங்கே ஞானத்தின் திருவுருவாய் நின்ற ஞானசம்பந்தரைக் கண்டார். கண்ட பொழுதே அமண்கொடியோனின் கொடுந்தொழில் நினைத்து கண்ணருவி பாய கைகுவித்திறைஞ்சி திருவடியில் வீழ்ந்து அழுதார். திருவடியைப் பற்றிய கைவிடாது புரண்டயரும் அவரைப் புகலிவேந்தர் 'ஒன்றுக்கும் அஞ்சாதீர்' என்று அபயமளித்தார். அபயமளித்த அவர் சிவிகையில் ஏறிவர அவரை அரச மாளிகைக்கு அழைத்துச் சென்று அரசனது தலைமாட்டில் பொற்பீடத்தில் அமர்வித்தார். அவர் அமணர்களுடன் புரிந்த சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் யாவினும் அமைச்சராம் பாங்குடன் ஒழுகினார். புனல்வாதத்தின்போது எதிரேறிச்சென்ற திருப்பாசுர ஏட்டை குதிரையேறிச் சென்று ஏடகத்தில் எடுத்துத் தலைமிசை ஏறிவந்தார். வாதில் தோற்ற அமணரையெல்லாம் அவர் உடன்பட்டவாறே கழுவிலேற்றி முறை செய்யுமாறு அரசன் பணிக்க அப்பணிப்பின்படியே எண்ணாயிரம் அமணரைக் கழுவில் ஏற்றினார்.
திருநீறணிந்த பாண்டிய மன்னனுடன் பாண்டிமாதேவியாருடனும் பரசமய கோளரியாரை அழைத்துச் சென்று ஆலவாய் அண்ணலைப் போற்றுதல் செய்தார். சிவம் வளர்க்கும் செம்மலர் ஆலவாயில் அமர்ந்திருந்த நாளெல்லாம் நாடொறும் சென்று அவரைப் போற்றி வேண்டும் பணியெல்லாம் செய்தார். காழியர்பெருமானைப் பாண்டிநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுக்கும் அழைத்துச் சென்று ஈற்றில் தம் சொந்த ஊரான மணமேற்குடிக்கும் எழுந்தருளச் செய்தார். சீகாழி மன்னர் சோழநாட்டிக்குப் புறப்படத் திருவுளம் பற்றியபோது அவரோடு கூடிச்செல்வதே குலச்சிறையாரின் ஆசையாக இருந்தது. சிவபுரச் செல்வரோ "இங்கு சிவநெறி போற்றியிருங்கள்" என்று பணித்தார். அவர் பணிவழியொழுகும் கருத்தால் பாண்டி நாட்டில் சிவநெறி விளங்குமாறு அரசகருமம் செய்து ஆலவாய் இறைவனின் அருட்தாள் சேர்ந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                      25.கூற்றுவர் செங்குந்தர் : குறுநில மன்னர்

முடியாக உமது பாதம் பெற வேண்டும்

வீரமிக்க குறுநில மன்னர்கள் பலர், சீரோடும், சிறப்போடும் செங்கோலோச்சி வந்த திருத்தலம் திருக்களந்தை! இத்திருத்தலத்தில் களப்பாளர் மரபில் தோன்றிய கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர். வாளெடுத்து, வில்தொடுத்து, வீரம் வளர்த்து, வெற்றிகள் பல பெற்ற கூற்றுவ நாயனார், பகைவர்களுக்கு கூற்றுவன் போல் இருந்தார் என்ற காரணம் பற்றியே இத்திருப்பெயர் பெற்றார். அதுவே இவரது இயற்பெயர் மறைவதற்குக் காரணமாகவும் இருந்தது. வாள் சுழற்றும் வீரத்தோடு, பரமனின் தாள் போற்றும் பக்தியையும் பெற்றிருந்ததால் , களந்தை நாட்டை, அரனார் அருளோடு பெரும் வெற்றிகளைப் பெற்று அறம் பிறழாது புகழ்பட ஆட்சியும் புரிந்து வந்தார். சிவனருட் செல்வர்களின் திருவடிகளைப் பணிந்து அவர்கட்கு உயர்ந்த திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தார். இவ்வரசர் ஐந்தெழுத்து மந்திரத்தை இடையறாது ஓதிவரும் பக்தி படைத்தவர். இக்குறுநில மன்னர், தம்மிடமுள்ள அணி, தேர், புரவி, ஆட்பெரும் படை கொண்டு நாடு பல வென்று தமதுக் கொடி கீழ் கொண்டு வந்தார். மன்னர் தும்பை மாலை சூடிப் போர் செய்து பெற்ற வெற்றிகளால் குறுநிலம் விரி நிலமானது. முடியுடைய மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையும் வென்றார். இவ்வாறு திக்கெட்டும் வெற்றி முரசு கொட்டிய காவலனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தில்லைவாழ் அந்தணர்களின் பாதுகாப்பிலுள்ள சோழ மன்னர்களுக்கே உரிய மணி மகுடத்தைத் தாம் அணிய வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். சோழ மன்னர்கள் தில்லை, திருவாரூர், உறையூர், பூம்புகார் என்னும் இடங்களில்தான் முடி சூட்டிக் கொள்வது வழக்கம். மணிமகுடம், ஆதிகாலம் தொட்டே சோழர் மன்னர்களுக்குரிய சிறப்புப் பொருளாகவே இருந்து வந்தது. இம் மணிமகுடத்தைப் பாதுகாத்து வரும் தில்லை வாழ் அந்தணர்கள் இம்மணி மகுடத்தைத் தக்க காலத்தில் சோழ மன்னர்களுக்கு மட்டுமே சூட்டும் நியதியைக் கொண்டிருந்தனர்.

இவற்றை எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருந்த கூற்றுவ நாயனார் தில்லைவாழ் அந்தணர்களிடம் தமது எண்ணத்தைச் சொல்ல எண்ணியபடியே, ஒருநாள் தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையை வந்தடைந்து தில்லை நடராஜப் பெருமானை வணங்கி வழிபட்டு, தில்லைவாழ் அந்தணர்களைச் சந்தித்தார். தமக்கு மணிமுடி சூட்ட வேண்டும் என்று வேண்டினார். மன்னரின் மொழி கேட்டு தில்லைவாழ் அந்தணர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்கள் மன்னர்க்கு முடிசூட்ட மறுத்தனர். மன்ன! நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சோழ குலத்திலே பிறந்த மன்னர்களுக்குத்தான் முடிசூட்டி வருவது வழக்கம். மற்றபடி வேறு மன்னர்களுக்கு இத்திருமுடியைச் சூடுவதற்கில்லை என்று துணிச்சலோடு விடையளித்து மன்னரின் கோரிக்கையை நிராகரித்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் கூற்றுவ நாயனாரைக் கண்டு சற்று பயந்தனர். அவரால் தங்களுக்கு ஏதாகிலும் தீங்கு வந்துவிடுமோ என்று தங்களுக்குள் தவறான எண்ணங்கொண்டனர். தில்லையின் எல்லை நீத்து சேர மன்னர்பால் சென்று வாழ எண்ணினர். மணிமகுடத்தை தங்கள் மரபில் வந்த ஒரு குடும்பத்தாரிடம் ஒப்புவித்து, பாதுகாக்கும்படி செய்யத்தக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இவர்கள் அச்சமின்றி மொழிந்ததைக் கேட்டு கூற்றுவ நாயனார் செய்வதறியாது திகைத்தார். முடியரசு ஆவதற்கு குடியொரு தடையா? எனத் தமக்குள் எண்ணி வருந்தினாரே தவிர, தில்லைவாழ் அந்தணர்களை வற்புறுத்தியோ, தொல்லைப் படுத்தியோ, அம்மகுடத்தைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை. கூற்றுவ நாயனார், திருமுடி சூட்டிக்கொள்ளும் பேறு தமக்குக்கிட்டவில்லையே என்ற மனவேதனையோடு, திருக்கோயிலுக்குச் சென்றார்.

இறைவனைப் பணிந்து, அருட்புனலே ! ஆடும் ஐயனே! உமது திருவருளால் மண்ணெல்லாம் என் வெற்றித் திருவடி பட்டும் தில்லைவாழ் அந்தணர்கள் மட்டும் அந்த மகுடத்தை எனக்குச் சூட்ட மறுத்துப் போய்விட்டார்களே! ஐயன் இந்த எளியோனுக்கு முடியாக உமது திருவடியினைச் சூட்டி அருள்புரிதல் வேண்டும் என்று இறைஞ்சினார். தமது இருப்பிடத்தை அடைந்து துயின்றார். அன்றிரவு கண்ணுதற் பெருமான் மன்னன் கனவிலே எழுந்தருளி தமது திருவடியை நாயனாரின் சென்னியின் மீது திருமுடியாகச் சூட்டி அன்பு அடியாரின் ஆசையை நிறைவேற்றி அருள்புரிந்து மறைந்தார். கூற்றுவ நாயனார் கண்விழித்தெழுந்தார். அவரது மகிழ்ச்சி அவர் களத்திலே பெற்ற வெற்றியைக் காட்டிலும் எல்லையற்று நின்றது. தில்லைவாழ் அந்தணர்கள் தமக்குச் செய்ய வேண்டிய கடமையை மறந்தபோதும் தில்லைப் பெருமானே தம் பொருட்டு கனவிலே எழுந்தருளி திருமுடி சூட்டினார் என்பதை எண்ணிப் பார்த்துப் பேரானந்தமுற்றார். சென்னி மீது கைகூப்பி, நிலத்தில் வீழ்ந்து வீழ்ந்து பரமனைப் பணிந்து எழுந்தார் நாயனார். எம்பெருமானுடைய திருவடியையே மணிமகுடமாகக் கொண்டு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் கொண்டவந்து அரசு புரிந்தார் கூற்றுவ நாயனார்! அறநெறி நிறைந்த கூற்றுவ நாயனார், இறைவன் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்கெல்லாம் பொன்னும் மணியும் வாரி வாரிக் கொடுத்தார். தன்னந்தனியே ஒவ்வொரு கோயில்களுக்கும் நித்திய நைமித்திய வழிபாடுகள் தங்கு தடையின்றி தட்டாமல் இனிது நடைபெற ஆவனச் செய்தார். திருத்தலங்கள் தோறும் சென்று சிவ வழிபாடு நடத்தினார். இவ்வாறு திருசடை அண்ணலின் திருவடி சூடி திக்கெட்டும் வெற்றிக்கொடி நாட்டி, பாராண்ட கூற்றுவ நாயனார், முடிவில் சஞ்சிதவினை தீர்க்கும் குஞ்சிதபாதத்தில் கலந்து இன்பமெய்தினார்.

"
தேனும் குழலும் பிழைத்த திரு மொழியாள் புலவி தீர்க்க மதி 
தானும் பணியும் பகை தீர்க்கும் சடையார் தூது தரும் திருநாள் 
கூனும் குருடும் தீர்த்து ஏவல் கொள்வார் குலவு மலர்ப் பாதம் 
யானும் பரவித் தீர்க்கின்றேன் ஏழு பிறப்பின் முடங்குகூன்."

பொழிப்புரை :

தேனும் புல்லாங்குழலும் என்ற இவற்றை வென்ற இனிமை கொண்ட மொழியையுடைய பரவையாரின் ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, மதியும் பாம்பும் பகை தீர்ந்து வாழ்தற்கு இடமான திருச்சடையையுடைய பெருமான் தூது போந்த நாளில், கூனனது கூனையும் குருடனின் குருட்டுத் தன்மையையும் தீர்த்துப் பணி கொள்பவரான நம்பி ஆரூரரின் ஒளிபொருந்திய திருவடிகளை யானும் போற்றி, எழுவகைப் பிறப்பினும் உட்பட்டு முடங்கிக் கிடக்கும் தன் மையான கூன் தன்மையையும், அவற்றுள் செலுத்தும் அறியாமை யான குருட்டுத் தன்மையையும் போக்கிக் கொள்கின்றேன்.
குறிப்புரை :

வகைநூல் ஆரூரருக்கு மாலையையும் வெற்றிலையை யும் தந்து வந்த கூனனும் குருடனுமாய இருவருக்கும் அவரவருக் குற்ற நோயைத் தீர்த்தருளினார் என்பதொரு வரலாறுகூறி ஆரூரரைப் போற்றி மகிழ்கிறது. விரிநூலில் இந்நிகழ்ச்சி இறைவன் தூதுபோய நன்னாளில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றது. 
இக் கூனும், குருடும் ஆய பணியாளர்கள் பரவையார் மாளிகை யில் பணியாற்றி வந்தவர் என்பர் சிலர். சிவக்கவிமணியார் இதனை மறுத்து, இறைவரால் புலவி தீர்க்கப்பெற்றபின், நம்பி ஆரூரர் மகிழ்வுடன் பரவையார் மாளிகைக்குச் செல்லுகின்ற போது, மங்கலப் பொருள்களை எடுத்து வந்த பணியாளர்களுடன் அத்திருக்கோயில் அகத்திருந்த கூனும், குருடும் ஆய இருவரும் உடன் வர, அவ்விருவர் தம் உடற்குறைபாடுகளையும் நம்பி ஆரூரர் நீக்கியமையையே இந்நிகழ்ச்சி கட்டுரைக்கின்றது என்பர். இவ்வரலாறு சுந்தரர் வரலாற்றில் இயைபு பட்டிலாமையே இவ்வாறெல்லாம் என்னற்கு இடனாயிற்று. ஆசிரியர் சேக்கிழார் ஆண்டு இச்செய்தியைக் குறியா மைக்குக் காரணம் தெரிந்திலது.
இனி இவ்விரு நோய்களையும் சுந்தரருக்கு உற்றதாகக் கூறி அவற்றை இறைவன் தீர்த்தருளினார் என்பாருமுளர். கூன் உற்றது, சுந்தரர் கண் நீங்கிய நிலையில் கோல் ஊன்றி நடப்ப அதனால் ஆய தென்பர் அவர். கூற்றுவ நாயனார் புராணம் முற்றிற்று. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் முற்றிற்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                 26.கலிக்கம்ப நாயனார்:வணிகர்




சீரும் சிறப்புமிக்கப் பல்வளம் செறிந்த பெண்ணாகடத் தலத்தில் வணிகர் குலத்திலே தோன்றினார் கலிக்கம்பர். சிவனடிப் பற்றேயன்றி வேறு எப்பற்றும் அற்ற இச்சிவனடியார் அடியார்களை உபசரித்து பாதபூசை செய்து அறுசுவை உணவளித்து பொன்னும் பொருளும் வேணவும் கொடுத்து அளவற்ற சேவை செய்து அகமகிழ்ந்தார். திருசடையுடைய விடையவர் திருவடியை இரவும் பகலும் இடையறாது கருத்தில் கொண்டு வாழ்ந்த இச்சிவனடியார், அந்நகரிலு
ள்ள தூங்கானைமாடம் என்னும் சிவக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கங்காதரனை மறவாத சிந்தையுடையவராய் வாழ்ந்து வந்தார்.வழக்கம்போல் சிவனடியார் ஒருவர் வந்தார். நாயனார் அச்சிவனடியாரைக் கோலமிட்ட உயர்ந்த பீடத்தில் எழுந்தருளச் செய்து பாதபூசையைத் தொடங்கினார். அவரது மனைவியார் மனையைச் சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளைச் சமைத்துக் கரகத்தில் தூய நீருடன் கணவனருகே வந்தார். அச்சிவனடியாரைப் பார்த்ததும் அம்மையாருக்குச் சற்று அருவருப்பு ஏற்பட்டது. அதற்குக் காரணம் அச்சிவத்தொண்டர் முன்பு நாயனாரிடத்தில் வேலை பார்த்தவர். அதனால் அவர் மீது சற்று வெறுப்பு கொண்டு தண்ணீர் வார்க்கத் தயங்கி நின்றாள். மனைவியின் தயக்க நிலை கண்டு நாயனார் சினங்கொண்டார். தமது மனைவி தயங்குவதின் காரணத்தைப் புரிந்து கொண்டார். சிவக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவனடியாரது திருச்சேவடிகளை வழிபட கரக நீரைச் சொரிந்து உபசரிக்கத் தவறிய மனைவியாரின் செயலைக் கண்டு உள்ளம் பதைபதைத்துப் போனார் நாயனார். விரைந்து சென்று வாள் எடுத்து வந்தார். மனைவியாரது கையிலிருந்த கரத்தைப் பற்றி இழுத்து அம்மையாரது கரத்தை துண்டித்தார் சிவனடியார். கலிக்கம்பரின் செயலைக் கண்டு துணுக்குற்றார் அடியார். கலிக்கம்பரின் மனைவி கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக, சிவனை நினைத்த நிலையில் மயக்கமுற்றாள். அந்த அறையிலே பேரொளிப் பிரகாசம் சிவனடியார்களிடையே எவ்வித வேறுபாடும் கருதாது சிவத்தொண்டு புரிந்து வரும் நாயனாரின் இத்தகைய திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இத்திருவிளையாடல் புரிந்த எம்பெருமான் விடை மீது எழுந்தருளினார். சிவபெருமான் அருளினால் அவரது மனைவி மயக்கம் நீங்கி முன்போல் கரத்தைப் பெற்று எழுந்தாள். அடியவர்கள் அம்பலவாணரின் அருட் தோற்றத்தைத் தரிசித்து நிலமதில் வீழ்ந்து பணிந்தார்கள். எம்பெருமான் அன்பர்களுக்கு அருள்புரிந்து அந்தர்த்தியாமியானார். நாயனார் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் விடையவர் திருவடி மலரினைச் சேர்ந்து பேரின்பம் பூண்டார்.

"
வெறித்த கொன்றை முடியார் தம் அடியார் இவர் முன் மேவு நிலை 
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு 
மறித்து நோக்கார் வடிவாளை வாங்கிக் கரகம் வாங்கிக் கை 
தறித்துக் கரக நீர் எடுத்துத் தாமே அவர் தாள் விளக்கினார்"

பொழிப்புரை :
மணம் கமழும் கொன்றை மலரை அணிந்த திருச் சடையையுடைய இறைவரின் அடியவரான இவர், முன்பு இருந்த நிலைகுறித்து, அவர் திருவடியை விளக்க நாணி நீர் வார்க்காது விட்டார் என்று மனத்தில் எண்ணி, மீண்டும் அவர் முகத்தையும் பார்க்காமல், கூர்மையான வாளை உருவி, அவர் கையிலிருந்த கரகத்தை வாங்கிப் பின், அவரது கையை வெட்டித் துண்டாக்கி, கரகத்தை எடுத்து நீர் வார்த்துத் தாமே அவருடைய கால்களை விளக்கினார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                                                27.கோச் செங்கட் சோழன்:அரசன்

சிவ கணங்களில் புஷ்பதத்தன், மாலியவான் என்று இருவர் இருந்தனர். அவர்களுக்குள் தானே சிவத் தொண்டில் சிறந்தவர் என்ற எண்ணம் இருந்தது. ஒரு நாள் நீண்ட விவாதத்தின் முடிவில் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டனர். புஷ்பதத்தன் மாலியவானை சிலந்தியாகப் பிறக்க சபிக்கிறான். அதேபோல், மாலியவான், புஷ்பதத்தனை யானையாக சபிக்கிறான். காலக் கிரமத்தில் இவ்விருவரும் சோழ வளநாட்டில், காவிரியாற்றின
் கரையில் திருவானைக்காவில் என்னும் இடத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கின்றனர். திருவானைக்காவில் காவிரிக்கரையில் ஒர் வெள்ளை நாவல் மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்ததாம்.

வளம்மிக்கச் சோழநாட்டிலே எழிலோடு காணப்படுவது திருவானைக்காவல் என்னும் தெய்வத்தலம். இங்கே காவிரி நதி வற்றாது ஓடிக்கொண்டிருந்தது. காவிரியாற்றின் கரையிலே சந்தரதீர்த்தம் என்னும் பெயருடைய பொய்கை ஒன்று அமைந்திருந்தது. அப்பொய்கை கரையிலே குளிர்ச்சோலை ஒன்று உண்டு.அச்சோலையிலுள்ள வெள்ளை நாவல் மரத்தின் தாழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. தவமிக்க ஒரு வெள்ளை யானை நாள்தோறும் தனது துதிக்கையால் நீரும், மலரும் எடுத்துவந்து சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. இக்காரணம் பற்றியே அப்பகுதிக்குத் திருவானைக்காவல் என்ற பெயர் வழங்கலாயிற்று. அங்குள்ள நாவல் மரத்தின் மீதிருந்த அறிவுடைய சிலந்தி ஒன்று சிவலிங்கத்தின் மீது சூரிய வெப்பம் படாமலும், சருகுகள் உதிர்ந்து விழாதவாறும் ஞானத்தோடு நூற்பந்தல் அமைத்தது. வழக்கம்போல் சிவலிங்கத்தை வழிபட வரும் வெள்ளை யானை சிலந்தி வலையைக் கண்டு எம்பெருமானுக்குத் தூய்மையற்ற குற்றமான செயலை சிலந்தி புரிந்துவிட்டதே எனச் சினந்து கொண்டு நூற்பந்தலைச் சிதைத்துப் பின்னர் சிவலிங்கத்தை வழிபட்டுச் சென்றது. வெள்ளை யானையின் இச்செயலைக் கண்டு வருத்தமுற்ற சிலந்தி, யானை சென்றதும் மீண்டும் முன்போல் நூற்பந்தலிட்டது. இவ்வண்ணம் சிலந்தி வலை பின்னுவதும் யானை அதனைச் சிதைப்பதுமான செயல்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே இருந்தன. ஒருநாள் சிலந்திக்கு கோபம் வந்தது. தான் கட்டும் வலையை அழித்திடும் யானையைக் கொல்ல வேண்டும் என்று முடிவு கட்டியது.

வழக்கம்போல் சிவபெருமானை வழிபட வந்த சிலந்தி யானையின் துதிக்கையால் புகுந்து கடித்தது. சிலந்தியின் செயலால் சினங்கொண்ட யானை துதிக்கையை ஓங்கி வேகமாக நிலத்தில் அடித்தது. சிலந்தி இறந்தது. அதே சமயத்தில் யானையும் சிலந்தி விடம் தாங்காமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. திருக்கையிலாயமலையில் சிவகணத்தவருள் புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் இருந்தனர். இவர்களுக்குள் சிவத்தொண்டில் தாமே சிறந்தவர் என்று கருதி ஒருவருக்கொருவர் பொறாமையும், கோபமும் கொண்டு கொதித்தெழுந்தனர். புட்பதந்தன் மாலியவானைச் சிலந்தியாகப் பிறக்குமாறு சபித்தனன். மாலியவான் புட்பதந்தனை யானையாகுமாறு சபித்தனன். இவ்வாறு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்த இரு சிவகணத்தவர்களும் எம்பெருமானுக்கு செய்த திருத்தொண்டால் வீடு பேற்றை எய்தினர். இறைவன் யானைக்கு சிவபதம் அளித்தார். சிலந்தியைச் சோழர் குலத்தில் உதித்து கோயில்கள் அமைத்துச் சிவத்தொண்டு புரிய அருள் செய்தார். யானையைக் கொல்லச் சிலந்தி முதலில் முயன்றதால் அதற்கு மட்டும் மறுபிறப்பு ஏற்பட்டது. சிலந்தியும், வெள்ளை யானையும் எம்பெருமான் அருளால் வீடுபேறு பெற்று முன்போல் சிவகணத் தலைவர்களாய் எம்பெருமானுக்குத் திருத்தொண்டு புரியலாயினர். சோழ அரசரான சுபவேதர் கமலாவதியாருடன் சோழவளநாட்டை அரசு புரிந்து வந்தான். திருமணமாகி நெடுநாட்களாகியும் மக்கட் பேறு இல்லாமல் மன்னன் மனைவியாருடன் தில்லையை அடைந்து அம்பலவாணரது திருவடியை வழிபட்டு பெருத்தவமிருந்தார்!

கூத்தப்பெருமான் திருவருள் புரிந்ததற்கு ஏற்ப சிலந்தி வந்து கமலவதியின் மணிவயிற்றில் கருவடைந்தது. மணிவயிற்றில் கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணம் நெருங்கியது. அப்பொழுது சோதிட வல்லுனர்கள் இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமேயானால் மூவுலகத்தையும் ஆளக் கூடிய ஆற்றலைப் பெறக்கூடிய குழந்தையாக இருக்கும் என்றார்கள். சோதிடர் மொழிந்தது கேட்டு அம்மையார், ஒரு நாழிகை தாமதித்துத் தமக்குக் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம்மைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடுமாறு கட்டளையிட்டார். அவ்வண்ணமே அரசியாரைக் கட்டினர். சோதிடர் சொல்லிய நல்லவேளை நெருங்கியதும் அரசியார் ஆணைப்படி கட்டவிழ்த்தார்கள். அரசியாரும் அழகிய ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். அரசியார் தலைகீழாக தொங்கியதால் சற்று நேரம் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. அரசியார் அன்பு மேலிட அக்குழந்தையை உச்சிமோந்து என் செல்வக்கோச் செங்கணான் என்று வாஞ்சையோடு கொஞ்சினாள். ஆனால் அரசியார்க்கு, அக்குழந்தையைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பாக்கியம் இல்லாமற் போனது. குழந்தை பிறந்த சற்று நேரத்திற்கெல்லாம் அரசியார் ஆவி பிரிந்தது. சுபதேவர் தமது மகனை வளர்த்து வில் வித்தையில் வல்லவனாக்கி வேதாகமங்களிலும் மேம்பட்டவனாக்கினார். உரிய பருவத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த அவனை ஆளாக்கினார். சுபதேவர் மகனுக்கு முடிசூட்டிவிட்டு காடு புகுந்து அருந்தவம் புரிந்து எம்பெருமானின் திருவடி நீழலை அடைந்தார். கோச்செங்கட் சோழர் இறைவன் அருளாள் முற்பிறப்பை உணர்ந்து அரனார் மீது ஆராக்காதல் பூண்டு ஆலயம் எழுப்பத் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டார். திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டி யானை நுழையாதபடி சிறு வாயில் அமைத்தார். மற்றும் சோழ நாட்டில் ஆங்காங்கே அழகிய அம்பலங்கள் அநேகம் கட்டி முடித்தார். இவர் எம்பெருமானுக்கு எழுபது கோவில்களும், திருமாலுக்கு மூன்று கோவில்களும் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் கோச்செங்கட் சோழர் தில்லையில் தங்கி தியாகேசப் பெருமானை முக்காலமும் முறையோடு வழிபட்டுத் தில்லையம்பலத்து ஆடுகின்ற கூத்தபிரானது பாத கமலங்களில் வைகி இன்பமெய்தினார்.

ஒரு தாயின் மகிமை
"
பிறவா ஒரு நாழிகை கழித்து என் பிள்ளை பிறக்கும் பரிசு என் கால் 
உற ஆர்த்து எடுத்துத் தூக்கும் என உற்ற செயல் மற்று அது முற்றி 
அறவாணர்கள் சொல்லிய காலம் அணைய பிணிவிட்டு அருமணியை 
இறவாது ஒழிவாள் பெற்று எடுத்து என் கோச்செங்கண்ணனோ என்றாள்."
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                     28.கோட்புலி நாயனார்:வேளாளர்

அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்

தந்தையார் தாயார் மற்றுடன் பிறந்தார் தாரங்கள் 
பந்தமார் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும் 
எந்தையார் திருப்படி மற்று உண்ண இசைந்தார் களையும் 
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினைப் பவம் துணிப்பார்

காவிரி பாயும் சோழவள நாட்டிலே - நாட்டியத்தான் குடி என்னும் சிவத்தலத்தில் - வீரவேளாளர் மரபிலே வாழ்ந்தவர் கோட்புலி நாயனார். இச்சிவத்தொண்டர் சோழருடைய படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவர் அஞ்சாத வீரர். கொலை செய்வதில் வல்ல புலி போன்ற குணம் மிக்கவராதலால், இவருக்கு கோட்புலியார் என்று காரணப் பெயர் ஏற்பட்டது. இப்பெயர் இவரது இயற்பெயராக இருக்கும் என்று எண்ணுவதற்கில்லை. எண்ணற்றப் போர்க்களம் சென்று பகையரசர்களை வென்று மன்னர்க்கு எல்லையற்ற வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதனால் அவருக்கு இச்சிறப்புப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வீரம் வளர்த்த கோட்புலியார் அரனாரிடத்து எல்லையில்லா பக்தி பூண்டிருந்தார். இவர் தமக்கு கிடைக்கும் அளவற்ற நிதிகள் அத்தனைக்கும் நெல் வாங்கி வீட்டில் மலை மலையாகக் குவித்தார். சேமித்த நெற்குவியலைக் கோயில் திருப்பணிக்குப் பயன்படுத்தினார். ஒருமுறை நாயனார் அரச கட்டளையை ஏற்றுப் போர்முனைக்குப் புறப்பட்டார். போருக்குப் போகும் முன்னே தம் குடும்பத்தாரிடமும், உறவினரிடமும், சுற்றத்தாரிடமும், எம்பெருமானுக்காகச் சேமித்து வைத்த நெல்லை யாரும் தன் சொந்த உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுப்பது சிவத்துரோகமாகும். இது இறைவன் ஆணை. கோயில் திருப்பணிக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எடுத்துக் கொடுக்கலாம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு புறப்பட்டார். கோட்புலியார் சென்ற சில நாட்களுக்கெல்லாம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் எல்லோரும் உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டனர். அச்சமயம் கோட்புலியாரின் உறவினர் பசியின் கொடுமை தாங்காமல் அடியார் வழிபாட்டிற்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைத் தாராளமாக எடுத்துச் செலவு செய்தனர்.

போருக்குச் சென்றிருந்த கோட்புலியார் வெற்றி பெற்று நாடு திரும்பினார். சுற்றத்தார்களும், உறவினர்களும் நெற்குவியலை எடுத்து உண்டதை அறிந்து சினங்கொண்டார். எம்பெருமானுக்கு வழிபாடு செய்யாமல் தங்கள் வறுமைக்கு நெல்லைப் பயன்படுத்திக்கொண்ட சுற்றத்தார் அத்தனை பேரையும் அழைத்தார். ஒருவரையும் தப்பி ஓடிவிடாதபடி காவல்புரியச் செய்து தம் தந்தையார், தாயார், உடன்பிறந்தார் மனைவியர்கள், சுற்றத்தார் ஆகிய அனைவரையும் வாளினால் வெட்டி வீழ்த்தினார். அதன் பிறகு அவரது வாளுக்குத் தப்பிய பிழைத்தது ஓர் ஆண்பிள்ளை! அப்பிள்ளையைக் கண்ட காவலன் நாயனாரிடம், ஐயனே! பாலகன் நம் குடிக்கு ஒரே புதல்வனாகும். இவன் அன்னத்தை உண்டதில்லை. இக்குழந்தையை மட்டுமாவது கொல்லாமல் அருள்புரியும் என்று பணிவோடு வேண்டினான். அவன் மொழிந்ததைக் கேட்டு, மேலும் கோபம் வளர நாயனார், இப்பாலகன் அன்னத்தை உண்ணாவிடினும், அன்னத்தை உண்ட அன்னையின் மூலைப் பாலை உண்டவன் என்று கூறி அக்குழந்தையையும் தமது வாளினால் இரு துண்டாக்கினார். அப்பொழுது சடைமுடிப் பெருமானார் விடையின் மீது எழுந்தருளினார். அன்பனே! உன் உடைவாளால் உயிர் நீத்தோர் அனைவரும் பிறவி என்னும் பாவத்தை விட்டு அகன்றவராயினர். அவர்கள் சிவபுரியில் இன்புற்று வாழ்வர். நீ இந்நிலையில் நம்முடன் அணைவாய் என்று அருள் புரிந்தார் சிவபெருமான். கோட்புலியார் காட்டிய பக்தியின் சக்தி அனைவருக்கும் பிறவாப் பெருவாழ்வைக் கொடுத்தது!.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                      29.சடைய நாயனார்:ஆதி சைவர்


சடைய நாயனார்

"
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்" 
தம்பி ரானைத் தோழமைகொண் 
டருளித் தமது தடம்புயஞ்சேர்
கொம்ப னார்பால் ஒருதூது 
செல்ல யேவிக் கொண்டருளும்
எம்பி ரானைச் சேரமான் 
பெருமாள் இணையில் துணைவராம்
நம்பி யாரூ ரரைப்பயந்தார் 
ஞாலம் எல்லாம் குடிவாழ.
தம் தலைவரான சிவபெருமானையே தமக்குத் தோழராகக் கொண்டு, அப்பெருமானையே, தம் பெரிய தோள்களைத் தழுவும் பூங்கொம்பர் போன்ற பரவையாரிடத்துத் தூதாகச் செல்லு மாறு அனுப்பிய எம்பெருமானை, சேரமான் பெருமாள் நாயனாரின் ஒப்பற்ற துணைவரான நம்பியாரூரரை, உலகத்தில் எல்லா உயிர் களும் வாழ்வடையும் பொருட்டுப் பெற்ற பேறுடையவர், சடையனார் ஆவர்.

சைவவளமும், செல்வமும் கொழிக்கும் திருநாவலூர் நகரில் ஆதிசைவர் மரபில் சடையனார் என்னும் சிவத்தொண்டர் பிறந்தார். இவரது மனைவியார் பெயர் இசைஞானியார். தமிழுலகம் செய்த தவப்பயனாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவரது மகனாகப் பிறந்தார். தமது மகனை நரசிங்கமுனையார் தம்மோடு அழைத்துப் போக எண்ணிய போது இவர் மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு குழந்தையை மறுமொழி பேசாது அனுப்பி வைத்த பெருமையயைப் பெற்றவர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் பல இடங்களில் தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார். திருதொண்டத் தொகை பாடி உலகையெல்லாம் உய்வித்த தெய்வபுதல்வனை ஈன்ற சடைய நாயனாரும், இசைஞானியாரும் இறைவன் திருவடி நீழலை அடைந்து இன்புற்றனர்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                           30.சண்டேஸ்வர நாயனார்:அந்தணர்


"தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக"
திருச்சேய்ஞ்ஞலூர் என்பது சிறப்பு மிக்கப் பழம் பெரும் தலம். இத்தலம் சோழ நாட்டிலே, மண்ணியாற்றின் தென்கரையிலே சோழர்களுக்குத் தலைநகரமாக விளங்கி வந்தது. பண்ணிற்கு மெல் இசையும், பாலிற்கு நல்ல இன்சுவையும், கண்ணிற்குப் பயன் ‌பெருகும் ஒளியும், கருத்திற்குப் பயன் பெறும் திருவைந்தெழுந்தும், விண்ணிற்கு மழையும், வேதத்திற்குச் சைவமும் பய
னாவன போல் மண்ணுலகத்திற்குப் பயனாக விளங்கும் பெருமைமிக்கது திருச்சேய்ஞ்ஞலூர். சோழ அரச மரபினர் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பெரும் சிறப்பினைப் பெற்றிருந்தது இத்திருத்தலம் !முன்னொரு காலத்தில் அமரர்களுக்குத் தொல்லை கொடுத்த சூரபதுமன் முதலிய அசுரர்களை வென்று அமரர்களின் அல்லலை நீக்கியப் முருகப்பெருமான் அமரர்களும், பூதகணங்களும் பின்தொடர மண்ணியாற்றின் கரையை அடைந்து, எழில் மிகும் திருநகரம் ஒன்றை நிர்மாணித்தார். அந்நகரில் கந்தவேள் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ வழிபாடும் செய்தார். இக்காரணம் பற்றி‌யே இந்நகரம் திருச்‌‌சேய்ஞ்ஞலூர் என்னும் சிறப்புப் பெயர் பெற்றது. இப்படிப்பட்ட இந்த நகரில் அந்தணர்கள் மிகுந்து இருந்தார்கள். அந்தணருள் ஒருவர்தான் எச்சத்தன் என்பவர். அவர் மனைவியின் பெயர் பவித்திரை. அவர்களுக்கு புத்திரராகப் பிறந்தவர்தான் விசாரசருமன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த விசாரசர்மன், ஐந்து வயது பிராயத்தை அடைந்தார். முற்பிறப்பில் வேதாகமங்களில் பெற்றிருந்த நல்லுணர்ச்சியின் தொடர்பினால் இப்பிறப்பிலும் வேதாகமங்களின் உட்பொருள்களில் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டானது. அரும்பில் நிறைந்துள்ள மணம், மலரும் தருணம் வெளிப்படுவது போல், கல்வி பயில ஆரம்பித்தபோதே இவரது சிவாகம உணர்ச்சி பெரிதும் விளங்கலாயிற்று. அவர் சிந்‌தையில் எந்நேரமும், பரமனின் பொற்பாதத்தின் நினைவே தான் இருந்தது. முக்கண்ணனின் மலர்ப்பாதங்களின் மீது கொண்டுள்ள அன்பின் மிகுதியால் இச்சிறு பிராயத்திலேயே, பேரின்ப வீட்டைப் பெற்ற பெருமிதம் பூண்டார் அந்த அந்தணர் குலக்கொழுந்து!

விசாரசருமருக்கு ஏழாண்டுகள் நிரம்பின. பெற்றோர்கள். அப்பருவத்தில் அவருக்கு உபநயனம் செய்து மகிழ்ந்தனர். குல ஒழுக்கப்படி வேதம் ஓதுவித்தனர். அவரோ ஆசான் வியக்கும் வண்ணம் தேர்ச்சி பெற்று விளங்கினார். ஒரு நாள் விசாரசர்மன் வேதம் ஓதும் அந்தணச் சிறுவர்களுடன் மண்ணியாற்றின் கரைப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். அவ்வழியே ஓர் சிறுவன் பசுக்களை ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்தான். பசு ஒன்று அச்சிறுவனைக் கொம்பினால் முட்டியது. சிறுவனுக்குக் கோபம் வந்தது. பசுவைக் கோலினால் பலமாகப் பன்முறை அடித்தான். இக்காட்சியைக் கண்ட, விசாரகுமார் திடுக்கிட்டார். அவர் மனம் இளகியது. அவரால் இக்கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சிறுவனிடம் விரைந்து சென்றார். அவன் பசுவை மேலும் அடிக்காதவாறு தடுத்தார். அத்தோடு அப்பாலகனுக்கு பசுவின் மகிமையைப் பற்றிக் கூறலானார். ஐயையோ ! எவ்வளவு பெரும் பாவமான காரியத்தைச் செய்துவிட்டாய் ? உலகத்திலுள்ள எல்லா உயிர்களைக் காட்டிலும் ஆவினங்கள் ‌சிறந்த மேன்மையும், பெருமையையும் உடையனவல்லவா ? அரனார் பொன்மேனியிலும், அடியார்கள் திருமேனியிலும் ஒளிவிடும் தூய வெண்ணீறு ஆவினிடமிருந்துதானே நமக்குக் கிடைக்கிறது. எம்பெருமான் திருமுடியில் அபிஷேகம் செய்யத்தக்க பஞ்ச கவ்யத்தை அளிக்கும் உரிமையும் அருமையும் ஆவினத்தைச் சேர்ந்ததல்லவா ? எம்பெருமான் உமாதேவியாருடன் எழுந்தருள் இடபத்தின் திருக்குலத்தைச் சேர்ந்த காமதேனு என்று ஆவினத்தை அழைப்பார்களே ! பருகுவதற்கரிய பால், தயிர், வெண்ணெய், மோர் முதலியவற்றை மனிதர்களுக்கு அளிப்பது ஆவினம் தானே ! பசுக்களின் அங்கங்களில் தேவர்களும், தேவதேவாதியர்களும், முனிவர்களும் வாழ்கின்றனரே ! இத்தகைய தெய்வத்தன்மை மிகும் ஆவினங்களுக்குத் துன்பம் ஏற்படாவண்ணம் பாதுகாப்போடு மேய்ப்பதல்லவா நம் கடமை, ஆவினங்களைக் காப்பது ஆண்டவனுக்கு அருந் தொண்டாற்றுவது போலல்லவா ? இனிமேல் இந்த பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை என்னிடம் விட்டுவிடு. இவ்வாறு விசாரசருமர் ‌மொழிந்‌ததை கேட்டு அச்சிறுவன் தான் செய்த தவற்றை உணர்ந்து பயந்தான். அவன் விசாரசருமரை வணங்கி பசுக்களை மேய்க்கும் பணியை அவரிடமே விட்டு அகன்றான்.

விசாரசருமர் பசுக்களை மேய்க்கப் போகும் விஷயத்தை மறையவர்களிடம் சொல்லி அதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அனுதினமும் விசாரசருமர் கோலும், கயிறும் ஏந்திக்கொண்டு, ஆவினங்களோடு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்படுவார். பசுக்களை நல்ல பசுமையான புற்கள் உள்ள இடத்தில் மேய விடுவார். நல்ல நீர் உள்ள இடத்தில் நீர் அருந்தச் செய்வார். பசுக்கள் மேய முடியா‌த இடத்தில் கல்லையும், முள்ளையும் பொருட்படுத்தாமல் அவரே, புற்களைச் சுத்தபடுத்தி அவைகளுக்கு ஊட்டுவார். பெற்றோர்கள் தான் பெற்ற செல்வங்களைக் காப்பதுபோல் கோகுலங்களைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார் விசாரசருமர். ஐந்தறிவு படைத்த அந்த ஜீவன்கள் இவரது அன்பிற்குக் கட்டுப்பட்டு அச்சம் என்பதே இல்லாமல் இவருடன் பழகின. நல்ல வெயில் வந்துவிட்டால் மட்டும் மரநிழலில் சற்று நேரம் நிம்மதியாகப் படுத்து இளைப்பாற்றுவார் விசாரசருமர் ! மாலை நேரம் வந்ததும் வேண்டிய அளவு விறகு, சமிதை சேமித்துக் கட்டாகக் கட்டி வைத்துக் கொண்டு ஆநிரைகளுடன் வீட்டிற்குப் புறப்படுவார். இவர் ஆநிரைகளை அன்புடனும், ஆதரவுடனும், பொறுப்புடனும், பெருமகிழ்ச்சியுடனும் மேய்த்து வந்தார். விசாரசருமரின் பராமரிப்பில் பசுக்கள் முன்னிருந்ததைவிட நல்ல வளத்தோடும், புஷ்டியோடும் இருந்தன. அது மட்டுமின்றி முன்னைவிட அதிகமாகப் பாலையும் சுரந்தன. அதுமட்டுமல்ல, ஆநிரைகளான அவைகள் விசாரசருமரை அடிக்கடி சென்று உராய்வதும் நாவால் நக்கிக் கொடுப்பதுமாக இருந்தன. புல் மேயும் இடத்தில் விசாரசருமர் வெயிலில் நின்று கொண்டிருந்தால் இவைகள் கூட்டமாகச் சென்று நின்று அவருக்கு உட்காருவதற்கான நிழலைத் தரும். சில சமயங்களில் கன்றைக் கண்ட தாய் பசு, பால் சுரப்பது போல் விசாரசருமரைப் பார்த்ததும் ஆவினங்கள் பால் பொழியும். தனது அரு‌கே வந்து பசுக்கள் பால் பொழிவதைக் கண்ட விசாரசருமர் அப்பாலை வீணாக்காமல் பரமன் இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் என்ன? என்று எண்‌ணலானார். அத்தி மரத்தடியில் குளிர்தரும் நிழலைக் கண்டார். ஆண்டவனுக்கு அநத இடத்திலேயே கோயில் ஒன்றை அமைக்கச் சித்தம் கொண்டார். மண்ணியாற்றங்கரை ஓரத்திலிருந்து நல்ல மணல் எடுத்து வந்து லிங்கம் ஒன்றை வடித்தார்.

மண்ணாலே மதிற்சுவர்ளோடு கூடிய சிறு கோயிலைக் கட்டினார். கோபுரமும் அமைத்தார். மணமிகுந்த நறுமலர்ச் செடி‌களையும், கொடிகளையும் அழகிற்காகக் கொண்டு வந்து வைத்தார். அக்கோயிலையும் சிவலிங்கத்தையும் பார்த்து ஆனந்தக் கூத்தாடினார். அவர் உடம்பிலே பக்தி வெள்ளம் பெருகியது. அவர் சிந்தை மகிழ்ந்தார். அடுத்தாற்போல் பரமனுக்கு பூஜையும், அபிஷேகமும் செய்ய வேண்டுமென்று எண்ணினார். அர்ச்சனைக்காக மலர்களைப் பறித்துக்கொண்டு வந்தார். அபிஷேகம் செய்வதற்காகப் பாலைப் புதிய பாண்டங்களில் ‌சேமித்தார். வேதம் ஓதி அபிஷேகம் செய்தார். மலர்களால் சிவலிங்கத்தை அன்போடு அர்ச்சனை செய்தார். சேய்ஞ்ஞலூர் அரனாரை முருகன் வழிபட்டாற்‌பால் மண்ணியாற்றங்கரை லிங்கத்தை இன்று விசாரசருமர் வழிபட்டார். இந்த வழிபாடு தினந்தோறும் தவறாமல் நடந்து வந்தது. இவர் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பாலும் அர்ச்சனை செய்யும் மலரும் சேய்ஞ்ஞலூர் பரமனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. அரனார் அந்தணச் சிறுவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார். பெரிய திருக்‌கோயிலிலே எழுந்தளருளியிருந்த எம்பெருமான் மண்ணியாற்றங்கரையிலுள்ள இச்சிறு மண்கோயிலிலும் எழுந்தருளினார். இறைவன் வழிபாட்டிற்கு பால் சுரக்கும் ஆநிரைகள் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட சற்றும் குறைவின்றி முன்னைவிட அதிகமாகவே பாலைப் பொழிந்தன. ஒருநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பாலைக் குடம் குடமாக லிஙகத்தின் மீது அபிஷேகம் செய்வதும் மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். இவரது ஒவ்வொரு செயலையும் நெடுநேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அறிவிலியொருவன், வேகமாக இவரிடம் வந்து என்ன காரியம் செய்கிறாய் ? உன்னை நம்பி மாடு மேய்க்க அனுப்பினால் நீ மாட்டின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே. இது அடுக்குமா என்று கேட்டான். அவன் வார்த்த‌கைள் இவரது காதுகளிலே விழவே இல்லை. எப்படி விழும் ? இவர்தான் ஐம்புலன்களையும் அடக்கி அருந்தவசியைப்போல் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாரே ! விசாரசருமர் மவுனம் சாதிப்பது கண்டு ஆத்திரம் அடைந்த அவன் அக்கணமே ஊருக்குள் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌லே கண்ட காட்சியைப் பற்றி அனைவரிடமும் கூறினான். அனைவருக்கும் சினம் பொங்கியது. எச்சத்தனிடம் சென்றனர். விஷயத்தை விளக்கி மகனைக் கண்டிக்குமாறு கூறினர். எச்சத்தன் கடு்ம் கோபம் கொண்டான். மகனைக் கண்டிப்பதாகச் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான் மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தான் எச்சத்தன். மறுநாள் காலை விசாரகுமார் வழக்கம்‌போல் ஆவினங்களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். எச்சத்தன் மகன் அறி‌யாதவாறு பின்னால் தொடர்ந்து சென்றார். மண்ணியாற்றின் கரையை அ‌டைந்த எச்சத்தன் அங்குள்ள ஒரு குரா மரத்தில் மீது ஏறி மறைவாக அமர்ந்து கொண்டான். விசாரசருமர் வழக்கம்போல் மண்ணியாற்றில் நீராடி நமசிவாய மந்திரம் ஜபித்து திருவெண்ணீறு பூசி மலரைக் கொய்துகொண்டு பச்சிலைகளையும் பறித்துக் கொண்டு வந்தார்.

மண்ணால் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். குடம், குடமாகப் பாலைக் கொண்டுவந்து வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். விசாரகுமார் பக்தியில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. ஜோதி உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. பாற்குடங்களில் பால் நுரையோடு பொங்கி வழிந்து இருப்பதுபோல் ! விசாரசருமர், ஆவாகனம் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத் தொடங்கினார். பசுவின் பாலை ‌எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தனுக்குக் கோபம் எல்லை மீறியது. உலக மாயையிலே மூடிக்கொண்டிருந்த அவனுக்கு அகக்கண்களும் மூடிக்கிடந்தன. பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாத எச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்தான். சினத்தால் பொங்கி எழுந்தான். மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டான். தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கினான். கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தான் எச்சத்தன் ! விசாரசருமருக்கு அடிபட்டும் எவ்வித உணர்வும் ஏற்படவில்லை. பூஜையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சத்தன் அடித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவன் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி வெளிவந்தன. இவையெல்லாம் விசாரசருமர் காதுகளில் விழுந்தால்தானே! விசாரசருமர் தந்தையின் இடையூறுளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்து தள்ளினான். எச்சத்தனுக்கு மகனின் செயல் மேலும் ‌‌கோபத்தை உண்டுபண்ணியது. பால் நிரப்பி வைத்திருந்த திருமஞ்சனப் பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அதுவரை பூஜையில் மெய்மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப் பாலைக் கொட்டிக் கவிழ்த்தது கண்டு கோபம் கொண்டார். வழிபாட்டிற்குக் குத்தகமாக இத்த‌கைய நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தைதான் என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டித்தார். அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளி தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சத்தன் உயிரை இழந்தான். இதுவரை நடந்தவற்றைப் பற்றி ஒன்றுமே தம் புலன்களுக்குப் புரி‌யாத நிலையில் இருந்த விசாரசருமர் மீண்டும் சிவ வழிபாட்டில் ஈடுபடலானார். அவ்வமயம் வானவெளியில் பேரொளி பிறந்தது. ஒளி நடுவே, ஒளிப்பிழம்பாக இறைவன் உமாதேவியுடன் விடையின் மேல் எழுந்தருளினார். பக்தியால் உலகை மறந்திருந்த விசாரசருமர் பேரொளிப் பிழம்பாக காட்சியளித்த பரமனைப் பார்த்ததும் பேருவகை கொண்டார். கரம்கூப்பி நிலந்தனில் விழுந்து வணங்கி எழுந்தார். வானத்தினின்றும் வையகத்துக்கு எழுந்தருளிய பரமசிவனும், பார்வதியும் விசாரசருமர் வாரி அணைத்து, உச்சிமோந்து மகிந்தனர். இறைவன் அன்பு மேலிட அவரைத் தழுவி மகனே! எம்மீது பூண்டுள்ள அன்பின் மிகுதியால் பெற்றவன் என்றும் பாராமல் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப்பட்டோம். உனக்குத் தந்தையும் நானே, தாயும்நானே ! என்று திருவாய் மலர்ந்தார். விசாரசருமரின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அம்மையப்பரின் அரவணைப்பிலே அந்தணர் குல மைந்தார் சிவப் பழமானார். எம்பெருமான் விசாரசருமருக்கு அருள் செய்தார். நம் அடியார்களுக்கெல்லாம் தலைவனாகிவிட்டாய் நீ ! நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பரிகலமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு சண்டீசபதம் வழங்கினோம் என்று அருளினார் பெருமான் ! இறைவன் தம் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்தார். அன்புச் சிறுவனின் கழுத்தில் தம் திருக்கைகளாலேயே அணிவித்தார். சண்டிசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர், முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம் உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை, வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள். சிவ சண்டீசபதத்தில் இருப்பவர் தொனிச் சண்டர் எனத் திருநாமம் பெறுவர். உருத்திரருடைய கோபாம்சத்தில் தோன்றியவரே சண்டேசுரர். (சண்டம்-கோபம்) எச்சத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையைத் தன் மகன் கையாலேயே பெற்று, பின்னர் அவனால் பாவம் நீங்கி, சிவலோக பிராப்திøய அடைந்தான். விசாரசருமர் மகேசுவரனிடம் திருவருள் அணைப்பிலே என்றும் அவரது மைந்தராய் தோன்றிப் பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவருட்தாளினை அடைந்தார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
                                     31.சத்தி நாயனார்:வேளாளர்
சத்தி நாயனார்
“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்”

சோழ வள நாட்டிலே அமைந்துள்ள வரிஞ்சையூர் பதியிலே வேளாளர் குலத்திலே சத்தி நாயனார் என்னும் நாமமுடைய சிவத்தொண்டர் வாழ்ந்து வந்தார். இவர் இளமை முதற்கொண்டே சடைமுடியுடைய விடையவர் திருவடியைச் சிந்தையில் இருத்தி வந்ததோடு சிவனடியார்கள் சேவடிகளையும் தமது சென்னி மீது தாங்கி வழிபட்டு வந்தார். சத்தி நாயனார் சிவனடியார்களைப் பழித்து யாரேனும் இகழ்ந்து பேசினால் அக்கணமே அவர்களது நாவினை குறட்டினால் பிடித்து அரிவார். இத்தகைய வலிய மனமும் சக்தியும் வாய்க்கப் பெற்று ஒழுகி வந்தமையால்தான் இவர் சத்தி நாயனார் என்று திருநாமம் பெற்றார். சிவனடியார்களை எவரும் இகழாவண்ணம் காத்து வரும் பணியில் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்தார். ஆடுகின்ற அரசர்க்கு அளவிலா தொண்டாற்றி வந்த இத்திருத்தொண்டர், மன்னுள் ஆனந்தத் தாண்டவம் ஆடுகின்ற அம்பலவாணனுடைய அழகிய சிலம்பணிந்த சேவடி நீழலை அடைந்தார்.

தீங்கு சொற்ற திருவிலர் நாவினை
வாங்க வாங்கும் தண்டு ஆயத்தினால் வலித்து
தாங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர்

(இ-ள்) தீங்கு....நாவினை - சிவனடியாரைத் தீங்கு சொல்லி இகழ்ந்த திருவில்லாதாந்து நாவினை; வாங்க...வலித்து - சேதித்தலுக்கு வளைந்த தண்டாயத்தினால் இழுத்து; ஆங்கு........அரிந்து - அவ்விடத்திலேயே கூரிய கத்தியினால் அரிந்து; அன்புடன்.....உயர்ந்தனர் - அன்புடனே ஓங்கும் சிறப்புடைய திருத்தொண்டில் உயர்வு பெற்று விளங்கினர்.
(வி-ரை) தீங்கு - சிவனடியாரை இகழ்ந்த மொழி; பழிமொழி.
திருவிலர் - சிவன் புகழினையும் அடியார் புகழினையும் உளங்கொளாதவர்கள் திருவிலார் என்பது; திரு - உய்யும் வழியாகிய சைவமெய்ச் செல்வம்; “உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத், திருவிலார்” (பிள் - பைஞ்ஞீலி - காந்தாரபஞ் - 1).திருவிலர் - பாதகர்களுடைய;
வாங்க - சேதிக்க; பிடுங்க; வாங்கு - வளைவுடைய; தண்டாயம் - பற்றியிழுக்கும் குறடு போன்றதொரு கருவி; வலித்து - இழுத்து; வலித்தல் - இழுத்தல்; வலிசெய்து என்றலுமாம். அயில் - கூர்மையுடைய.
அன்புடன் ஓங்குசீர் திருத்தொண்டின் - நாவை அரியும் செயல் அன்பாமா றென்னை? எனின்; தீங்கு சொன்ன அத்திருவிலார், இம்மையில் இவ்வாறு உடன் தண்டிக்கப்படுதலால் அம்மையில் எரிவாய் நரகம் புக்கழுந்தாமற் காக்க அவர்பால் வைத்த அன்பு; தண்டிக்கப்பட்டார்பால் இகலின்றி இரக்கத்துடனே என்க. அரச தண்டனையின் கருத்தும் இது; “திருந்தாரை வெல்லும்” என்ற வகைநூற் கருத்தும் காண்க; இனி, அடியாரை இகழ்ந்து ஏனை உலகரும் நரகம் புகாது இது கண்டு உலகம் உய்தற் பொருட்டு உலகவர்மேல் வைத்த அன்பு என்பதுமாம். “திருநீறு சார்ந்தாரை, ஞாலமிகழ்ந் தருநரக நண்ணாமை எண்ணுவார்” (3989) என்றதும் காண்க; இனிச், சிவன்பாலும் அடியார்பாலும் செறியவைத்த அன்பு என்றலுமாம்; உடலோடு அழியத்தக்க உடற்சார்பு உயிர்ச்சார்புகளாகிய மனைவி மக்கள் சுற்றம் இவர்களை ஒருவர் இகழ்ந்தால் கேட்கத் தரியாது பெருங்கலாம் விளைப்பது உலகியலுட் காணப்படும் உண்மை; அழியாது நீடிய உயிர்ச்சார்பாகிய சிவனையும் சிவனடியாரையும் இகழ்ந்தால் கேட்கத் தரியாது ஆவன செய்தல் அவர்பால் அன்புடையோர் செய்கை; வாளா இருப்பவர் அன்பில்லார்; சிவனன்பினாற் செய்யப்படுதலால் இது திருத்தொண்டு - திருப்பணி எனப்பட்டது. சிவனை இகழக்கேட்டால் அவரைத் தண்டனை செய்; அஃதியலாவிடில் சிவசிவ என்று காதைப் பொத்திக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றுவிடு என்பது சிவாகம விதி. “இறைவி கேளா, வஞ்செவி பொத்தி யாற்றா தழுங்கிமெய் பதைப்ப விம்மி, யெஞ்சலின் முதியோன் போகா னேகுவன் யானே யென்னாப், பஞ்சடி சேப்ப வாண்டோர் பாங்கரிற் படர்த லுற்றாள்” (கந்தபு - தவங்காண் படலம் 28) என்றபடி, முதியோராய் வந்த இறைவர் சிவனைப் பழித்துக் கூறிய சொற்கேட்ட பார்வதியம்மையார் இவ்வொழுக்கத்தை நயந்து உலகறிவுறுத்திய வரலாறு இங்குக் கருதத் தக்கது.
ஓங்குசீர் - முன் கூறியவாறு பலவாற்றாலும் அன்பின் முதிர்ந்த திறலுடைய சிறப்பு.


____________________________________________________________________________
                               32:சாக்கிய நாயனார்