Pages

Wednesday, September 18, 2013

63 நாயன்மார்கள் II -2

                             32:சாக்கிய நாயனார்           

திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் தகவுடைய வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். இவர் எல்லா உயிர்களிடத்தும் அன்பும், அருளும் ஒருங்கே அமையப் பெற்றவராய்த் திகழ்ந்தார்.சிவனாரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் பேரன்புமிக்க இப்பெருந் தலைவர் பிறவித் துன்பத்தில் நின்றும் தம்மை விடுவித்துக் கொள்ள மனங் கொண்டார். அதற்கென நன்னெறி நூல்களைக் கற்றறிய எண்ணினார்.காஞ்சிபுரத்திலுள்ள, சாக்கியர்களைக் கண்டு தன் எண்ணத்தைச் செயல்படுத்த முனைந்தார். அடிகளார் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களுடன் பழகினார். நூல்கள் பல ஆராய்ந்தார். ஆனால் நாயனாரால் நல்ல வகையான நெறியைக் காண முடியவில்லை. அதனால் அடிகளார் மேலும் பற்பல சமய நூல்களைக் கற்கலானார். இறுதியாக சைவ சமய நூல்களையும் கற்றார். அதன் பிறகு அடிகளார் பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே சாலச் சிறந்த வழி என்ற ஒப்பற்ற உண்மையைக் கற்றுத் தெரிந்துகொண்டார்! அதனால் அவர் உள்ளத் தெளிவு பெற்றார். மன்னிய சீர்ச் சங்கரன் தாள்தனைப் பணிந்து தூய சிவத்தைச் சித்தத்திலிருத்தி சிந்தை குளிர்ந்தார். சாக்கியர் கோலத்திலே இருந்தமையால் தம்மைப் பிறர் அறியா வண்ணம் சிவநாமத்தை அகத்திலேயே எண்ணி ஒழுகிய சாக்கிய நாயனார் பிறர் அறியாத வண்ணம் சிவலிங்க பூசையும் நடத்தி வந்தார். தினமும் சிவலிங்க தரிசன வழிபாட்டிற்குப் பிறகு தான் உண்பது என்ற உயர்ந்த பழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் பரந்த நிலவெளி வழியாகச் சென்று கொண்டிருக்கும்பொழுது சிவலிங்க உருவம் ஒன்று வழிபாடு எதுவும் இன்றிக் கிடப்பதைக் கண்டு உள்ளமும் உடலும் உருகினார். இத்திருத்தொண்டர் சிவலிங்கத்தைத் தூய நீராட்டி, நறுமலர் இட்டு, பூசித்து மகிழத் திருவுள்ளம் கொண்டார். ஆனால் அந்த இடத்தில் நீரேது? மலரேது? நல்ல மனம் மட்டும்தானே இருந்தது! சாக்கிய நாயனார் அன்பின் பெருக்கால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே சிவலிங்கத்தின் மீது போட்டார். அன்பினால் எதற்கும் கட்டுண்ட இறைவன், சாக்கிய நாயனார் எறிந்ததை அன்புக் குழவியின் தளிர்க்கரம் பற்றித் தழுவுவது போன்ற இன்பப் பெருக்காக எண்ணினார்.

இல்லாவிடில் சாக்கிய நாயனார் எறிந்த கல் கயிலையில் தேவியுடன் கொலு வீற்றிருக்கும் எம்பெருமானின் திருவடித் தாள்களில் பொன் மலரென விழுமா என்ன? சாக்கிய நாயனாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு அரனார் ஆனந்தம் கொண்டு சாக்கிய நாயனாருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். சாக்கிய நாயனார், அன்று முழுவதும் சிவலிங்க தரிசனத்தை எண்ணி எண்ணி எல்லையில்லா மகிழ்வு பூண்டார். மறுநாளும் சிவலிங்க வழிபாட்டிற்காக அவ்விடத்தை வந்து அடைந்தார்! சிவலிங்கத்தைக் கண்டு, உவகை பூண்டார். அன்பினால் கல்லெறிந்து வழிபட்ட செயலை எண்ணினார். தமக்கு இத்தகைய மனப் பக்குவத்தைத் தந்தருளியது எம்பெருமானின் திருவருட் செயலே என்று உணர்ந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கும் நான் மலரால் சிவனாரை வழிபடுவதைப் பிறர் காணில் ஏசுவர். ஆனால், கல்லால் எறிவதை எவராகிலும் காண்கின், வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று எண்ணுவர். இதுவும் அரனாரின் அருள் மொழியே அன்றி, வேறொன்றுமில்லை என்று தமக்குள் எண்ணிப் பெருமிதம் கொண்டார். ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு தமது இல்லத்திற்குச் சென்று உண்ணலானார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினந்தோறும் நடத்தி வந்தார்.ஒருநாள் சாக்கிய நாயனார் அரனார் மீது கொண்டுள்ள பக்திப் பெருக்கால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்த நிலையில் திருவமுது செய்ய அமர்ந்து விட்டார். சட்டென்று எம்பெருமான் நினைவு கொண்ட சாக்கிய நாயனார் உள்ளம் பதறிப் போனார். எம்பெருமானே! இதென்ன சோதனை! எவ்வளவு தவறான செயலைப் புரிந்துவிட்டேன்! அண்ணலே ஏழையின் பிழை பொறுத்தருள்வீரே! என்று புலம்பி உள்ளம் உருகினார். எழுந்தோடினார்! பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது அன்பு மேலிட கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி எறிந்தார். அப்பொழுது சாக்கிய நாயனாரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். சாக்கிய நாயனார் கரம் குவித்து நிலந்தனில் வீழ்ந்து பணிந்து, எம்பெருமானை வணங்கினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தைக் கொடுத்தருளினார்.

---------------------------------------------------------------------------------------------------------
33:சிறப்புலி நாயனார்

“சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்”

பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர் தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும். அகிற்புகையும், வேள்விச்சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார். இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார். தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார். இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார். அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார். இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார். இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.

ஆளும் அங்கணருக்கு அன்பர் அணைந்த போது அடியில் தாழ்ந்து
மூளும் ஆதரவு பொங்க முன்பு நின்று இனிய கூறி,
நாளும் நல் அமுதம் ஊட்டி, நயந்தன எல்லாம் நல்கி
நீளும் இன்பத்து உள் தங்கி நிதிமழை மாரி போன்றார்.

ஆளும்....தாழ்ந்து - உலகங்களெல்லாவற்றையும் ஆளுகின்ற அங்கணராகிய சிவபெருமானுடைய அன்பர்கள் வந்தணைந்தபோது அவர்களடியில் வீழ்ந்து பணிந்து; மூளும்....தங்கி - மூண்டெழுகின்ற அன்பு மேன்மேற் பொங்க, அவர்கள் திருமுன்பு நின்று இனிய மொழிகளைக் கூறி, நாள்தோறும் நல்ல உணவு ஊட்டி, அவர்கள் விரும்பிய வெல்லாவற்றையும் கொடுத்து அதனால் மேன்மேலும் பெருகிவளர்கின்ற இன்பத்துள்ளே வாழ்ந்து; நிதிமழை மாரி போன்றார் - நிதியை மழைபோலச் சொரிகின்ற மேகம் போன்றிருந்தனர்.

அன்பர்களை நாடோறும் உபசரித்து வழிபட்டமையால் இன்பம் பெருகிவரும்; அந்த இன்பத்துள்ளே திளைத்து
வாழ்ந்தனர்.

------------------------------------------------------------------------------------------------
                                                    34:சிறுத்தொண்ட நாயனார்
“சிவனது திருவடிகளில் அன்புடன் கூடிய ஒழுக்கமாகும்”

திருச்செங்காட்டங்குடி நீர் வளமும், நில வளமும் நிறைந்த ஒரு சிறந்த நகரம். அந்நகரிலே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலுக்கு கணபதீச்சுரம் என்று பெயர். அந்நகரிலே மாமாத்திரர் என்னும் குலம் உயர்ந்து விளங்கியது. அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அரசர் குலத்திற்குப் படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் பணியாற்றி வந்தனர். இப்பேர்ப்பட்ட உயர்ந்த பெருங்குடியில் பரஞ்சோதியார் என்னும் நாமமுடைய தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பல்லவ மன்னனிடம் படைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். வாள் வலிமையும், தோள் வலிமையும் கொண்டிருந்த அவர் படைக்கல பயிற்சியில் பேராற்றல் பெற்று விளங்கினார். எண்ணற்ற போர்களில் மன்னனுக்கு ஈடில்லா மாபெரும் வெற்றியை வாங்கிக் கொடுத்தார். இவ்வாறு வீரமிக்கவராய் வாழ்ந்த பரஞ்சோதியார் பக்தி மிக்கவராகவும் இருந்தார். எந்நேரமும் சிவ நாமத்தைச் சிந்தையிலே கொண்டு ஒழுகி வந்தார். அத்தோடு இவர் சிவனடியார்களைச் சிரம்தாழ்த்தி வரவேற்று உபசரித்து உண்பிக்கும் உயர்ந்த பண்பினையும் பெற்றிருந்தார். அடியவர் முன்பு அன்பின் மிகுதியால் தம்மைச் சிறியவராக்கிக்கொண்டு அடக்க ஒடுக்கத்துடன் உள்ளம் உருக உயர் தொண்டாற்றுவதால் இவரைச் சிறுத் தொண்டர் என்று அனைவரும் அழைக்கலாயினர். ஒருமுறை பரஞ்சோதியார் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வடநாடு சென்றார். வாதாபியை வென்றார். பாரெல்லாம் பல்லவன் புகழ் பேச வெற்றி முரசம் திக்கெட்டும் முழங்க தென்புலம் திரும்பி வந்தார்.

பரஞ்சோதியாரின் வீரத்தைப் பார்த்த பல்லவன் பெருமகிழ்ச்சிப் பூண்டான். அவையறிய அவரது வீரத்தையும், தீரத்தையும் வானளாவப் போற்றிப் புகழ்ந்தான். விருதுகள் பல வழங்கினான் மன்னன். ஒருநாள் அமைச்சர்கள் பரஞ்சோதியாரின் வெற்றிக்கான முக்கிய காரணத்தை விளக்கும் பொருட்டு மன்னனிடம் சென்றனர். மன்னவா! பரஞ்சோதியார் இறைவனின் திருவடிக் கமலங்களிலே நிறைந்த பக்தியுடையவர். இறைவனின் சக்திக்கும் பரஞ்சோதியாரின் பக்தியுமே இவரது வெற்றிக்குக் காரணம்! இத்தகைய சிவத்தொண்டு மிக்க நம் தளபதியை பகையரசர்கள் வெல்வது என்பது எவ்வாறு சாத்தியமாகும் என்று கூறினார். அமைச்சர்கள் கூறியதைக் கேட்ட மன்னவன் திகைப்படைந்தான். பரஞ்சோதியாரின் சிவபக்தியை எண்ணி எண்ணி சிந்தை குளிர்ந்தான். அதே சமயத்தில் வேதனையும் அடைந்தான். தான் அறியாமல், கடவுளுக்கு ஏதோ பெரும் பிழை செய்துவிட்டதாக எண்ணி மனம் வாடினான் மன்னன். தெய்வத்தைப் போல் போற்றி வழிபடுவதற்குரிய திருத்தொண்டரை போர்முனைக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறு என்பதையும் உணர்ந்தான். தனக்குள் கலக்கமுற்றான். மன்னன் சித்தம் தடுமாறினான். போர்க்களத்தில் எதிர்பாராமல் இச்சிவனடியார்க்கு ஏதாகிலும் தீங்கு ஏறபட்டிருந்தால் அஃது தமக்கு எத்ததைய பெரும் பழியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை எண்ணி எண்ணிப் புலம்பினான்.

மன்னன் ஒரு முடிவிற்கு வந்தான். பரஞ்சோதியாரைத் தளபதி என்று எண்ணவில்லை. தொழுதற்குரிய பெரும் பேறு பெற்ற மகான் என்றே கருதினான். அரசன் அவசர அவசரமாக பரஞ்சோதியாரை வரவழைத்தான். பரஞ்சோதியார் அரசரின் கட்டளை கேட்டு அரண்மனைக்கு வந்தார். அரசன் பணிவுடன் அருந்தவத்தினரே! தங்களது மகிமையை உணராமல் தங்களைப் போருக்கு அனுப்பி பல தொல்லைகள் கொடுத்ததற்குப் பொறுத்தருள வேண்டும். இந்த எளியேனுக்காக தாங்கள் எல்லையில்லா இன்னல்களைப் பல காலம் அனுபவித்தீர்கள். இனியும் தாங்கள் எமக்கு ஏவல் புரிதல் ஆகாது. அருள் புரிதல் வேண்டும். தாங்கள் சித்தம் போல் சிவனார் அடிபோற்றி தாங்கள் விரும்பியவாறு சிவநெறியில் சிவத்தொண்டுகள் பல புரிந்து ஒழுகுவீர்களாக என்று இறைஞ்சி நின்றான். மன்னனின் மொழி கேட்ட பரஞ்சோதியார் திடுக்கிட்டார். செய்வதறியாது சிலையாக நின்றார். அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. முடிவில் மன்னனின் ஆணையை சிரமேற்கொண்டார். நடப்பது யாவும் இறைவனின் அருட் செயலே என்று மனதிலே உறுதி பூண்டார். மன்னன் பரஞ்சோதியாருக்கு நிறையப் பொன்னும் பொருளும் வழங்கினான். பரஞ்சோதியார் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். மன்னன் அவரை ராஜ மரியாதையுடன் ஊருக்கு அனுப்பி வைத்தான். பல்லவ மன்னனிடமிருந்து பொன்னும் பொருளும் பெற்ற பரஞ்சோதியார் அவற்றை ஆலய திருப்பணிக்கும், அடியார்களைப் பேணுவதற்கும் செலவு செய்து வரலானார். அல்லும் பகலும் பக்தி மார்க்கத்தில் வாழத் தொடங்கிய பரஞ்சோதியார் நற்குடியிற் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்னும் பெயருடைய மங்கை நல்லாளை மணம் புரிந்துகொண்டார்.

அவரது மனைவியாரும் அவரைப் போலவே சிவனாரிடத்தும், அவரது அடியார்களிடத்தும் நல்ல பக்தியும், அன்புடையவராகவும் இருந்தார். பரஞ்சோதியார் அவ்வம்மையாரோடு இல்லறத்தை முறைப்படி நடத்தத் தொடங்கினார். குறள்வழி வாழும் இவ்வில்லறத்தார் இன்பத்தின் முழுப் பயனையும் பெற்றுக் கருத்தொருமித்த காதலர்களாக வாழ்ந்து வந்தனர். பரஞ்சோதியாரும் அவரது மனைவியாரும் தொண்டர்களை அன்போடு வரவேற்று அமுதளித்து விருந்தினர் முன்னுண்டு தாங்கள் பின் உண்ணும் முறை அறிந்து ஒழுகினர். சிவத்தொண்டர்கள் மனங்குளிர அவர்கள் விரும்பியவாறே எது கேட்டாலும் இல்லையெனாது அளித்து அமுதூட்டி மகிழ்ந்தனர். இத்தகைய நல்ல இல்லத்தாருக்கு சிவபெருமானின் அருளாள் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குச் சீராளன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்கள். இவ்வாறு வாழ்ந்து வந்த சிறுத்தொண்டரின் பெருமையையும், பக்தியையும் உலகோர்க்கு உணர்த்தத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான். அன்று ஒருநாள் சீராளன் பள்ளிக்கச் சென்றிருந்தான். பெற்றோர்கள் விருந்தினரை எதிர்பார்த்து வாயிலிலே நின்றுகொண்டிருந்தனர். நெடுநேரமாகியும் விருந்துண்ண ஒரு சிவனடியார் கூட வராதது கண்டு கவலை மிகக்கொண்ட சிறுத்தொண்டர் விருந்தினரைத் தேடி வெளியே சென்றார். சிறுத்தொண்டரின் மனைவி கவலையோடு உள்ளே சென்று சிவநாமத்தை ஜபிக்கத் தொடங்கினாள். அதுசமயம் சிவபெருமான் பைரவ சந்நியாசியாக வேடம் பூண்டு பரஞ்சோதியார் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். எம்பெருமான் வெளியே நின்றபடியே சிவனடியார்களுக்குத் திருவமுது செய்விக்கும் சிறுத்தொண்டர் வீட்டில் இருக்கிறாரா? என்று கேட்டார்.

அடியாரின் குரலைக் கேட்டு மனைக்குள் இருந்த சந்தன நங்கை என்னும் பணிப்பெண் வெளியே ஓடிவந்து, சிறுத்தொண்டர் எங்கு போயிருக்கிறார் என்பதை விளக்கி விட்டு அகத்து வந்து அமருமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டாள். பணிப்பெண் மொழிந்ததைக் கேட்ட இறைவன் அப்படியாயின் பெண்கள் தனித்து இருக்கும் இடத்தில் யாம் தங்குவதில்லை என்று கூறினார். இறைவன் மொழிந்ததைக் கேட்டு உள்ளிருந்து ஓடிவந்த சிறத்தொண்டரின் மனைவி சுவாமி! சற்று பொறுங்கள். என் நாதன் எப்படியும் இப்பொழுது வருவார் என்று கூறினாள். அதற்கும் அவ்வடியார் இயைந்து கொடுக்கவில்லை. அதுகண்டு அம்மையார் மீண்டும் சுவாமி ! தொண்டர்களுக்கு அமுது செய்விக்காமல் நாங்கள் உண்பதில்லை. நாடோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அமுதுண்ணும் மனையில் இன்று இதுவரைத் திருத்தொண்டர் ஒருவர் கூட வந்தாரில்லை. அது கருதியே என் நாயகன் அடியார்களைத் தேடிச் சென்றுள்ளார். அவர் எப்படியும் இப்பொழுது வந்துவிடுவார். என் ஐயன் வந்ததும் தங்களது அருட் தோற்றத்தைக் கண்டால் மட்டில்லா மகிழ்ச்சி கொள்வார். அதனால் சுவாமி எங்ஙனமாகிலும் அருள்கூர்ந்து மனைக்குள் எழுந்தருளல் வேண்டும் என்று விண்ணப்பித்தாள். அம்மையார் விண்ணப்பத்தை பைரவர் ஏற்றுக்கொள்ளவில்லை. வடபுலத்திலிருந்து யாம் புறப்பட்டு வந்தது தொண்டரைக் காண்பதற்காகத்தான். அவரின்றி யாம் மனைக்குள் தங்குவதாக இல்லை. எதற்கும் யாம் கோயிலுள்ள ஆத்தி மரத்தின் கீழே காத்திருக்கிறோம். அவர் வந்தால் எம் அடையாளங்களைக் கூறி அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றார் சிவபெருமான்! சிவத்தொண்டரின் மனைவியோ வேதனையோடு உள்ளே சென்றாள்.

பைரவர் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம் சிவனடியார்கள் யாரையும் காணாமல், வாட்டத்தோடு மனையிற் புகுந்தார் சிறுத்தொண்டர். கணவரின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு மனைவியார் பைரவரின் திருக்கோலத்தைக் கணவருக்கு நன்றாக விளக்கிக் கூறி அன்னார் ஆத்தி மரத்தடியே அமர்ந்திருப்பார் என்பதையும் இயம்பினாள். அதுகேட்டு சிறுத்தொண்டர் உள்ளமும் உடலும் பூரித்துப் போனார். உயர்ந்தேன் என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு சற்றும் தாமதியாமல் ஆலயத்திற்கு விரைந்தார். ஆத்தி மரத்தடியே வீற்றிருக்கும் அருள் வடிவான பற்றற்ற துறவியின் ஒப்பற்ற அடிதனைப் போற்றி வணங்கி நின்றார். சிறுத்தொண்டரை ஏற இறங்கப் பார்த்த பைரவர் - நீ தான் பெருமை பெற்ற சிறுத்தொண்டரோ என்று கேட்டார். சிறுத்தொண்டர் முகம் மலர, தொண்டரைக் காக்க வந்த தவமிக்க எந்தையே! உலகில் எதற்கும் எத்தகைய தகுதியும் இல்லாத இச்சிறியோனை அந்தி வண்ணர் அடிபோற்றும் அன்பர்கள் இப்பெயரால் அழைப்பதுண்டு. இவ்வடியேனுக்கு அத்தகுதியிருப்பதாகத் தெரியவில்லை. சுவாமி! இனிமேல் சற்றும் தாமதியாமல் இந்த ஏழையின் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்து அருள வேண்டும் என்று மிக்க பணிவன்போடு வேண்டி நின்றார். அருந் தவத்தீர்! ஐயம் ஒன்றுமில்லை. எமக்குத் தேவையான உணவை வழங்குதல் என்பது உம்மால் ஆகாத காரியம் ஆயிற்றே. ஐயன் இங்ஙனம் எண்ணுதல் ஆகாது. சுவாமி! திருவாய் மலர்ந்து அருளுங்கள். திருவாக்கின்படியே, அமுது செய்விக்கின்றேன். அப்படியா சிறுதொண்டரே! மிக்க மகிழ்ச்சி. நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் உண்போம். பசுவை வதைத்துதான் உண்பது வழக்கம். அக்காலம் இன்றுதான் வந்தது. உம்மால் அத்தகைய பசுவின் மாமிச உணவைச் சமைத்து அமுது செய்ய முடியுமா என்றுதான் சிந்திக்கிறேன்.

சுவாமி! சாலவும் நன்று! இந்த எளியேனுக்கு இதுவா ஒரு பெரிய காரியம். என்னிடம் மூவகை ஆநிரைகள் உண்டு. ஐயன் எழுந்தருளி எத்தகைய ஆநிரை வேண்டுமென்று பணிகின்றீர்களோ, அதனையே பக்குவமாகச் சமைத்து அளிக்கத் தவறேன். பசுவென்றால், நீர் எண்ணுவதுபோல் விலங்கினத்தைப் பற்றி நாம் கூறவில்லை. யாம் குறிப்பிடுவது பசு, ஐந்தாண்டு பிராயமுள்ள இளம் ஆண் பிள்ளையைத்தான்! அந்த ஆண் பிள்ளைக்கு அங்கங்களில் எவ்வித பழுதும் இருக்கக்கூடாது ! அந்த ஆண் பிள்ளையையும், யாம் கூறுவது போன்ற பக்குவத்தில் கறி சமைத்தல் வேண்டும். ஒரு குடிக்கு ஒரு மகனாய்ப் பிறந்துள்ள அப்பாலகனின் உடலைத் தாயார் பிடிக்கத் தந்தையார் அரிந்து, அதனைச் சமைத்தல் வேண்டும். அப்பொழுது மனையிலுள்ளோர் எவரும் வருந்தக்கூடாது. ஒரேபோல் அனைவருமே சந்தோஷத்துடனேயே இருத்தல் வேண்டும். ஐயனின் ஆணை இதுவாயின் அங்ஙனமே அமுது அளிக்கிறோம். நன்று! நீவிர் உடனே சென்று விருந்திற்கான ஏற்பாட்டை முடித்துவிட்டு அமுதுண்ண வேண்டிய தருணத்திற்கு அழைத்துச் செல்லும். அதுவரை யாம் இங்கேயே காத்திருப்போம்! சீக்கிரம் ஆகட்டும். நான் மிகவும் பசித்திருக்கிறேன் என்று பைரவர் கூறினார். சிறுத்தொண்டர் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு தமது மாளிகையை விரைவாக வந்து அடைந்தார். பெருமனைக் கிழத்தியிடம் பைரவர் பகர்ந்ததை அப்படியே ஒன்றுவிடாமல் விவரமாகக் கூறினார். அவர் மொழிந்தது கேட்டு மனைவியார் எம்பெருமான் அருளியவாறு ஒரு குடிக்கு ஒரு மகனை எங்கு சென்று தேடுவோம் என்றாள். சிறுத்தொண்டர் நற்குண நங்கையே ! நாம் பெற்ற அருந்தவப் புதல்வனையே அதன் பொருட்டு அழைப்போம் என்றார்.

அம்மையாரும், அவரது மொழிக்கு இயைந்தாள். ஆசானிடம் கல்வி பயிலச் சென்றிருக்கும் நமது அன்புச் செல்வனை அழைத்து வாருங்கள் என்று கூறினாள். சிறுத்தொண்டர் பெருமகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு மனைக்கு மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார். எம்பெருமான் உண்மையான சீராளனை மறைத்து மாயச் சீராளனை அவர்களிடம் அனுப்பியதனை அவர்கள் எங்ஙனம் அறிய இயலும். சீராளனை எதிர்பார்த்து, வீட்டுத் திண்ணையோரமாக நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், எதிர் சென்று பொன்னிற வண்ணப் பெருமேனியனாகிய மகனை வாரி அணைத்து உச்சி மோந்தவாறு உள்ளே அழைத்துச் சென்றாள். ஒன்றுபட்ட மனமுடைய கணவனும், மனைவியும் சேர்ந்து தெய்வத் தன்மை பொருந்திய சீராளப் பெருமானைச் சீரோடு அரிந்து, பாலோடு, பசுந்தேனோடு, பச்சைக் காய்கறிகளோடு சேர்த்து பக்குவமாகச் சமைப்பதில் முனைந்தனர். உடனே அடிகளார் பைரவச் சங்கரரை அழைத்துவர ஆத்தி மரத்தடிக்குப் புறப்பட்டார். திருவெண்காட்டு நங்கையாரும், சந்தான தாதியாரும் வீட்டைத் தூப தீபத்தாலும் நிறை குடங்களாலும் அலங்காரம் செய்தனர். நன்றாக வீட்டை கோமய நீரால் மெழுகினர். மாக்கோலமிட்டனர். வண்ண மலர்களைப் பரப்பினர். ஆங்காங்கே மலர் மாலைகளும், முத்து மாலைகளும் தோரணங்களும் அழகுறத் தொங்க விட்டனர். விருந்தினரைப் பேணும் பேராற்றல் பெற்ற அடியார் ஆராக் காதலுடன் நமச்சிவாய மந்திரத்தை நினைத்தவாறு பக்திப் பெருக்குடன் ஆத்தி மரத்திற்கு வந்து பைரவரை அழைத்துக்கொண்டு தமது திருமனையை அடைந்தார். பைரவரை வரவேற்று உபசரிக்க ஆவலோடு நின்று கொண்டிருந்த திருவெண்காட்டு நங்கையார், பைரவரது திருவடிக் கமலங்களில் நறு மலரைக் கொட்டிக் குவித்து கும்பிட்டு அழைத்துக்கொண்டு மனையுள் புகுந்தார்.

மலர் பரப்பிய ஆசனத்தில் அவரை அமரச் செய்தார். அம்மையார் நீர்வார்க்க, அடிகளார் பாதத்தை விளக்கினார். திருவடிகளுக்குச் சந்தனம் தடவி மலரால் அர்ச்சித்து, தூப தீபம் காட்டிப் பாத பூஜை செய்த நன்னீரைச் சென்னி மீதும் மனைவியார் சிர மீதும் வீடு முழுவதும் தெளித்தார். இருவரும் அமுது படைக்க ஐயனின் கட்டளையை எதிர்பார்த்து நின்றனர். அதற்கு ஏற்ப அடிகளார் திருவாய் மலர்ந்து, எல்லாக் காய்கறிகளையும் ஒருங்கே படைத்தாக வேண்டும் என்றார். அடியாரின் விருப்பப்படியே அமுது படைத்தனர். அப்பொழுது பைரவர், எல்லா உறுப்புக்களையும் படைத்தீர்களோ? என்று கேட்க, திருவெண்காட்டு நங்கையார், தலை இறைச்சியை மட்டும் அமுதுக்கு உதவாதென்று சமைக்கவில்லை என்று கூறினாள். அதற்கும் இறைவன் அதனையே யாம் உண்போம் என்றார். சந்தன நங்கையார், நான் அதனைச் சமைத்துப் பக்குவம் செய்து வைத்துள்ளேன் என்றவாறு உள்ளே சென்று தலையிறைச்சியைக் கொண்டு வந்தாள். அம்மையாரும், நாயனாரும் சந்தன தாதியாரின் திறத்தினையும்,பேராற்றலையும், தக்க சமயத்தில் தங்களைக் காத்த நிலையையும் எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அம்மையார் அவ்விறைச்சியையும் அடியவருக்கு படைத்தாள். சிறுத்தொண்டர், அன்போடு அடியாரை நோக்கி சுவாமி! அமுது செய்து அருளலாமே! என்று வணங்கி நின்றார். இறைவன் மேலும் சோதிக்கலானார். அடியார்கள் எவரையாவது அழைத்து வாரும். யாம், தனித்து உண்பதில்லை என்றார். அடியவரின் இம்மொழி கேட்டு சிறுத்தொண்டர் மனம் வருந்தினார். வேதனை மேலிட அடியார்களை எங்ஙனம் தேடி பிடிப்பது ? என்ற கலக்கத்துடன் வெளியே சென்றார். இருமருங்கும் நோக்கி அடியார்கள் எவரையும் காணாமல் மனச்சோர்வுடன், பைரவர் முன் ஏக்கமுடன் வந்து நின்றார்.

சுவாமி! எம்மைப் பொறுத்தருள்க. சிவனடியார்களை எங்கு தேடியும் காணவில்லை. அடியவர்களை போலவே அடியேனும் திருவெண்ணீறு அணிந்துள்ளேன் என்று பணிவன்போடு பகர்ந்தார் திருத்தொண்டர். அப்படியா? நன்று! வருந்தாதீர். நீரும் ஒரு சிவனடியார்தானே! தாராளமாக நீரே எம்முடன் இருந்து உண்ணலாம் என்று ஆணையிட்டார் பைரவர். அம்மையாரை நோக்கி, இருவருக்கும் பக்கத்தில் ஓர் இலை இட்டு, எமக்குப் படைத்தாற் போலவே இறைச்சியும், அன்னமும் படையும் என்று மொழிந்தார். திருவெண்காட்டம்மையாரும், பரமன் பணித்த படியே படைத்தாள். சிறுத்தொண்டர் அமுதுண்ண அமர்ந்தார். தாம் உணவு உண்டபின் தான் அடியார் உண்ணுவார் என்னும் கருத்திற்கு ஏற்ப சிறுத்தொண்டர் உணவில் கையை வைத்தவாறு உண்ண புகுந்தார். பைரவருக்கு கோபம் மேலிட்டது. அவரைத் தடுத்தார். உண்பதற்கு உமக்கு என்ன அவசரம் ; ஆறு மாத காலமாக பட்டினியாக இருக்கிறேன் நான். தினந் தவறாமல் உண்ணும் உமக்குப் பசி அதிகமோ? நன்று! நன்று! உம்முடன் யாம் உண்பதாக இல்லை. நம்முடன் உண்ண உமக்கு மகனிருந்தால் அழைத்து வாரும்! என்று ஆணையிட்டார். எம்பெருமான் மொழிந்தது கேட்ட நாயனார் இடியேறுண்ட நாகம்போல் நடுங்கினார். ஐயனே! அவன் இப்பொழுது உதவான் என்றார். சிறுத்தொண்டரே! அவன் வந்தால்தான் நாம் உண்போம். அவனைப் போய் எப்படியாவது தேடி அழைத்து வாரும் என்று திருவாய் மலர்ந்தருளினார். சிறுத்தொண்டர், சிவபெருமானை மனதில் எண்ணியபடியே தமது அன்பிற்கினிய மனைவியாருடன் வெளியே வந்தார். இருவரும் செய்வதறியாது திகைத்தனர். அடியவருக்கு அமுது அளிக்க தங்களுக்கு ஏற்பட்ட பெரும் தடையை எண்ணிக் கலங்கினர். சிறுத்தொண்டர் நமச்சிவாய மந்திரச் சக்தியால் வாய்விட்டு, சீராளா! வருக!! என்று அழைத்து விட்டார். அம்மையாரும், கண்ணே! மணியே ! சீராளா வாராய்! சிவனடியார் நாம் உய்யும் நிலைபெற உடன் இருந்து திருவமுது செய்ய உன்னையும் அழைக்கின்றார் வா மகனே! வா! என்று உரக்க அழைத்தாள். அப்பொழுது எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் சீராளன் பள்ளிச் சென்று திரும்பி வரும் பிள்ளையைப்போல் சதங்கை ஒலிக்க ஓடிவந்தான்.

பெற்றோர்கள் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். எம்பெருமான் பைரவராக வந்து மாயம் புரிவதை அவர்கள் எவ்வாறு அறிய இயலும்! அம்மையார் மகனை வாரித் தழுவி மகிழ்ந்து உச்சிமோந்து கணவரிடம் கொடுத்தாள். சிறுத்தொண்டரும் அழகு மைந்தனை அன்போடு அணைத்துப் பேருவகை பூண்டார். சிறுத்தொண்டருக்கும், அவரது மனைவியாருக்கும் ஏற்பட்ட வியப்பிற்கு எல்லையே இல்லை. சீராளனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கு பைரவரைக் காணோம். உணவை நோக்கினார். கலத்தில் கறிகளில்லை. இல்லத்தில் பேரொளி பிறந்தது. கயிலை மலை மீது களிநடனம் புரியும் மாதொரு பங்கன் மலைமகளுடன் வெள்ளி விடையின்மேல் அருட்காட்சி தந்தார். பூதகணங்களும், தேவர்களும், முனிவர்களும், விஞ்சையர்கள் முதலியோர்களும் புடைசூழ்ந்து வேதகானம் எழுப்பினர். சிறுத்தொண்ட நாயனாரும் திருவெண்காட்டு நங்கையும், சீராளனும், சந்தன தாதியும் சிரமீது கரம் உயர்த்தி சிவநாம மந்திரத்தை ஓதினர்; நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அன்பே சிவம் என்று கருத்தில் கொண்டு, சிவபோதை நிலையில் நின்று, அருந்தவப் புதல்வனையே, அடியார் மனதிற்கேற்ப அரிந்து விருந்து செய்ய இயைந்த சிறுத்தொண்ட நாயனாருக்கும், திருவெண்காட்டு நங்கையாருக்கும், சந்தனத் தாதியாருக்கும், தம்மை அரியும்போது சிவநாமத்தை நினைத்து புன்முறுவல் பூத்த சீராளத் தேவனுக்கும், எவருக்குமே கிட்டாத பெரும் பேற்றை அளித்தார் எம்பெருமான். திருசடைநாதரின் பொற்கழல் பாதத்தின் கீழ் சிறுத்தொண்டரும், உமையம்மையார் திருவடியின் கீழ் திருவெண்காட்டு நங்கையும், சந்தனத் தாதியும், வெற்றிவேல் முருகனின் செஞ்சேவடியின் கீழ் சீராளத் தேவனும் அமர்ந்து இன்புற்றிருக்கும் சிவலோகப் பிராப்தியை அந்நால்வர்க்கும் அளித்து அருள் செய்தார் அம்பலத்திலே ஆடுகின்ற ஆனந்தக் கூத்தன்.

----------------------------------------------------------------------------------------------------------
                                                      35:சுந்தரமூர்த்தி நாயனார்
திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார் தாயார் இசைஞானியார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்குவந்த இறைவன் சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும் அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்படஇ சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர் “பித்தா பிறை சூடி” என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம்இ குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

இறைவனுடைய உதவி பெற்றே பரவையார்இ சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில் 63 நாயன்மார் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அற்புதங்கள்
செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
முதலை விழுங்கிய பிராமணப்பெண்ணை அம்முதலையின் வாயின்று அழைத்துக் கொடுத்தது.
வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.

------------------------------------------------------------------------------------------------------
                                                      36:செருத்துணை நாயனார்

"பூசைனைக்குரிய பொருள் புனிதமானது"
அறம் வழுவாத நெறியினைக் கொண்ட பழங்குடி பெருமக்கள் வாழும் சீரும், செல்வமும் ஒருங்கே அமையப் பெற்றது தஞ்சாவூர். இத்தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் செருத்துணை நாயனார் என்னும் சிவத்தொண்டர் வந்தார். இவரது தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். ஆராக்காதலுடன் சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களைக் காப்பதில் பணிவோடு மிக்கத் துணிவையும் பெற்றிருந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் ஏதாகிலும் செய்தால் உடனே அவர்களைக் கண்டிப்பார்; இல்லாவிடில் தண்டிப்பார். ஆலயத்துள் நடைபெறும் இறைவழிபாடு எவ்வித இடையூறுமின்றி நடைபெற அரும் பாடுபட்டார். அடியார்களின் நலனுக்காகத் தம் <உடல்பொருள் ஆவி மூன்றையும் தியாகம் செய்யவும் துணிந்த நெஞ்சுரம் படைத்தவர். இச்சிவனடியார் திருவாரூர்த்த தியாகேசப் பெருமானுக்கு இடையறாது எத்தனையோ வழிகளில் அருந்தொண்டாற்றி வந்தார்.

ஒருமுறை ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்து செருத்துணை நாயனார், பகவானுக்காக பூ தொடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்தது. ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அம்மண்டபத்தருகே அமர்ந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்துச் சினங்கொண்டார். அரசியாயிற்றே என்றுகூடப் பார்க்காமல் அரனாரின் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக பட்டத்துப் பெருந்தேவியாரின் கார்குழலைப் பற்றி இழுத்துக் கீழே தள்ளினார். வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் அஞ்சாமல் நடந்தவற்றைப் பற்றி உரைத்து தமது செயலின் திறத்தினை விளக்கினார். ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். ஆண்டவர் அடியார்களின் பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், அடியார்க்கும் அருள் செய்தார். இவ்வாறு வால்மீகிநாதரின் தூய திருவடிகளுக்கு இடையறாது திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.

"செங்கண் விடையார் திருமுன்றில் விழுந்த திருப்பள்ளித் தாமம்
அங்கண் எடுத்து மோந்த அதற்கு அரசன் உரிமைப் பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத் துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம்"

செங்கண்.....அதற்கு - சிவந்த கண்ணையுடைய இடபத்தினையுடைய இறைவரது திருமுற்றத்தில் விழுந்த திருப்பள்ளித்தாமத்தினை அங்கு எடுத்து மோந்ததற்காக; அரசருரிமைப் பெருந்தேவி.....இறைஞ்சி - அரசரது பட்டத்து உரிமையுடைய பெருந்தேவியாரது பெருமையுடைய அழகிய மூக்கினை அரிந்த செருத்துணையாரது தூய்மையுடைய கழல்களை வணங்கி, (அத்துணை கொண்டு); எங்கும்...உரைப்பாம்

திருச்சிற்றம்பலம்

Thursday, May 16, 2013

சிவம் இன்றி அணுவும் அசையாது

Fritjof Capra is an Austrian-born American physicist. He is a founding director of the Center for Ecoliteracy in Berkeley, California, and is on the faculty of Schumacher College.
Carl Edward agan was an American astronomer, astrophysicist, cosmologist, author, science popularizer and science communicator in astronomy and natural sciences.


Fritjof Capra ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர், பாவம் தமிழர்களுக்கு தான் இது குறித்து தெரியாமல் போனது!. அந்த புத்தகத்தில் நடராஜரின் இந்த ஆனந்த தாண்டவத்தை மிக அழகாக இவ்வாறு விவரிக்கிறார் "Every subatomic particle not only performs an energy dance, but also is an energy dance; a pulsating process of creation and destruction…without end…For the modern physicists, then Shiva's dance is the dance of subatomic matter. As in Hindu scriptures, it is a continual dance of creation and destruction involving the whole cosmos; the basis of all existence and of all natural phenomena."

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன்.(பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996).சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச்சிறப்பு!

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார்.13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். January 1982 தனது 13 ஆம் எபிசோடில் நடராஜரை இப்படி விவரிக்கிறார். 'The answer lies in Hindu Cosmology." நடராஜரின் சிலையில் உள்ள உடுக்கை காட்டியபடி "This symbolizes creation of the universe, stars, galaxies and the human being." ஒரு கையில் இருந்த நெருப்பை காட்டியபடி "This symbolizes destruction of what has been created." என்று அவரின் உரையை தொடர்கிறார்...


உலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும்.
ஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல்,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த "ஆனந்த தாண்டவம்" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் "COSMIC DANCE" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர்.
அதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று "ஆடல் கடவுள்" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.
இந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே பலருக்கு தெரிந்ததே.

 திருச்சிற்றம்பலம்